வினா விடை வங்கி II
தமிழக வரலாறும் பண்பாடும் – அலகு - 2
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. சோழர் காலத்தில் மனைவியைக் குறித்து நின்ற
சொற்கள் யாவை?
அகமுடையாள்,
மணவாட்டி ஆகிய சொற்கள் மனைவியைக் குறித்து நின்றன.
2. சோழர் காலத்தில் "பெண்டாட்டிகள்"
என்று அழைக்கப்பட்டோர் யாவர்?
அரண்மனைப் பணிப்பெண்களுக்கு அக்காலத்தில்
பொதுவாகப் பெண்டாட்டிகள் எனப் பெயர் வழங்கி வந்தது. சமையற்காரிக்கு "திருவமுதிடும்
பெண்டாட்டி" என்று குறிப்பிடப்பட்டுள்ளாள்.
3. "வேளம்" என்பது யாது?
அரண்மனைப் பணியாளருக்கெனத் தனி விடுதிகளும்
தெருக்களும் அமைந்திருந்தன. அவ்விடுதிகளுக்கு "வேளம்" என்று பெயர்.
4. வேளைக்காரர்கள் என்போர் யாவர்?
வேளைக்காரர்கள் என்பவர்கள் அரசனுக்கு அணுக்கத்திலேயே
நின்று அவனுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள். மன்னனுக்கு விளையக்கூடிய எந்தவகையான
இன்னல்களையும் ஊறுகளையும் வேளைக்காரர்கள் தாமே ஏற்றுக்கொள்வார்கள்.
5. திருவாய்க்கேள்வி - விளக்கம் தருக.
அரசன் மொழியும் ஆணைகள் வாய்மொழியாகவே இருக்கும்.
அவற்றுக்குத் திருவாய்க் கேள்விகள் என்று பெயர். இவ்வாணைகளைக் கேட்டு உரியவர்களுக்கு
எழுத்து மூலம் அனுப்பிவைக்கும் பொறுப்புடையவனுக்கும் திருவாய்க்கேள்வி என்றே பெயர்.
6. உடன்கூட்டம் - விளக்கம் தருக.
மன்னனுக்கு அணுக்கத்திலேயே சில நிர்வாக
அலுவலர்கள் எப்போதும் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு "உடன்கூட்டம்"
என்றூ பெயர்.
7. சோழப் பேரரசர்கள் 'எவ்வெவ்வவதாரங்களாகக்'
கருதப்பட்டனர்?
சங்க காலத்து மன்னரைப் போலவே சோழப் பேரரசர்களும்
திருமாலின் அவதாரங்களாகவே கருதப்பட்டு வந்தனர்.
8. சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்திருந்த
இருபெரும் வாணிகத் துறைமுகப் பட்டினங்கள் யாவை?
காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம்.
9. சோழர்கால நாட்டுப் பிரிவுகள் யாவை?
கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாகவே
விளங்கின. பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம். கூற்றத்துக்குக் கோட்டம் என்றும், நாடு
என்றும் பெயர்களுண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது
ஒரு மண்டலம் ஆகும்.
10. உதிரப்பட்டி என்றால் என்ன?
பிறர் நலத்துக்காகத் தன்னலம் துறந்து உயிர்விட்டவர்களின்
வழிவந்தோருக்கும் உறவினருக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இத்தகைய தானங்களுக்கு
"உதிரப்பட்டி" என்று பெயர்.
11. சோழர்காலப் பிராமணர்களின் குடியிருப்புகள்
எவ்வாறு அழைக்கப்பட்டன?
சோழர்காலப் பிராமணர்களின் குடியிருப்புகள்
அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டன.
12. சோழர்காலத்துக் குடியிருப்புகளின் அல்லது
அமைப்புகளின் பெயர்கள் யாவை?
வேளாண்
மக்கள்
குடிபொருந்திய இடத்துக்கு "ஊர்"
என்று பெயர்.
பிராமணர்களின் குடியிருப்புகள்
அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என்று
அழைக்கப்பட்டன.
வணிகர்கள் நிறைந்திருந்த
இடத்துக்கு "நகரம்" என்று பெயர்.
வேளாண்
குடிகளுடைய
குழுக்கள் "சித்திரமேழி" என்ற
பெயரில் நடைபெற்றுவந்தன. அக்குழு உறுப்பினர்கள் "சித்திரமேழிப் பெரிய நாட்டினர்" என்று அழைக்கப்பட்டனர்.
பல
தேசத்து வணிகர்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட அமைப்புக்கு
"நானாதேசி" என்று பெயர்.
தச்சர்,
கம்மாளர்
ஆகியவர்களைப் போன்ற கைவல் கம்மியர் தமக்குள் அமைத்துக்கொண்ட அமைப்புக்கு "இதரகாரர்" என்று பெயர்.
13. சோழர் காலத்தில் நீதி வழங்கும் பொறுப்பு
எவரிடம் இருந்தது?
சோழர் காலத்தில் நீதி வழங்கும் பொறுப்பானது
ஊர்ச் சபையினரிடமும், குலப் பெரியதனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை
விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் விதிகளும் முறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. கரணத்தான்
துணையுடன் நீதிமன்றங்கள் செயல்படும்.
14. சோழர் காலத்தில் பெண்கள் செய்த உயர்பணிகள்
யாவை?
-
அரச குலப் பெண்கள் கோவில்கள் கட்ட உதவினர்.
சமயப் பணிகளிலும் ஈடுபட்டனர்.
-
தேவரடியார்கள் திருவிழாக் காலத்தில் இசை,
கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். சாதாரண நேரங்களில் கோவிலைத் தூய்மைப்படுத்தல்,
விளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட கோவில் பணிகளை மேற்கொண்டனர்.
15. குடவோலை முறை என்றால் என்ன?
ஒரு குடத்தில் தகுதியுடைய வேட்பாளர்களின்
பெயர்கள் அடங்கிய ஓலைகள் இடப்படும். ஏதும் அறியாத சிறுவன் அக்குடத்திலிருந்து ஓலைகளைத்
தேர்ந்தெடுப்பான். இவ்வாறு சோழர் காலத்தில் நடைபெற்ற தேர்தலே குடவோலை முறை என்று அழைக்கப்படும்.
16. சோழர் காலத்தில் குடிமக்களுக்கு விதித்த
வரிகள் நான்கினை எழுதுக.
கீழிறைப் பாட்டம் (சிறு வரிகள்), திங்கள்
மேரை (மாத வரி), நாடாட்சி (நாட்டு நிர்வாக வரி), ஊராட்சி (ஊர் நிர்வாக வரி), கண்ணாலக்
காணம் (திருமண வரி), நீர்க்கூலி (தண்ணீர் வரி), ஆட்டு வரி முதலான பல வரிகள் விதிக்கப்பட்டன.
17. பிராமணருக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள்
எவ்வாறு அழைக்கப்பட்டன?
பிராமணருக்குத் தனி நிலங்களும், முழுமுழுக்
கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், பிரமதேயம், சதுர்வேதி
மங்கலம் எனப் பல பெயரில் வழங்கின.
18. சோழர்காலத்துப் புலவர்கள் சிலரைக் குறிப்பிடுக.
செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார்,
கம்பர், புகழேந்தி.
19. மூன்று கை மாசேனை - விளக்குக.
மூன்று கை மாசேனை என்பது மூன்று பிரிவுகளாக
அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் வலங்கைப் பிரிவு - நிலையான பிரிவு; இடங்கைப் பிரிவு
- வணிகர்களையும் சில தொழிலாளர்களையும் கொண்டது; மூன்றாவது பிரிவு - கோயில் பணியாளர்களைக்
கொண்டிருந்தது.
20. அரிப்பர் என்போர் யார்?
அரிப்பர் என்போர் மணலையரித்துப் பொன்னெடுப்போர்
ஆவர்.
21. செம்பியன் மாதேவியின் சிறப்புகள் யாவை?
கண்டராதித்தன் மனைவியும் உத்தம சோழனின்
மனைவியுமானவர் செம்பியன் மாதேவியார் ஆவார். இவருக்கு மாதேவடிகள் என்னும் சிறப்புப்
பெயரும் உண்டு.
திருநல்லத்தில் உள்ள திருக்கோயிலைத் தம்
கணவர் பெயரால் கண்டராதித்தம் என்னும் கோயிலை எழுப்பினார். அக்கோயிலுள் இறைவனின் திருவடியைத்
தொழுகிற வடிவத்தில் தன் கணவருக்கு சிலை எடுத்தார்.
இவர் பல கோயில்கள் எழுப்பினார்; பல கோயில்களைப்
புதுப்பித்தார்; பல கோயில்களுக்குத் திருமேனிகள், அணிகலண்கள், கலங்கள் ஆகியவற்றைக்
கொடுத்தார். பல கோயில்களுக்கு விளக்குகள் வைத்தார்.
22. சிறுபாடு என்றால் என்ன?
பெண்களும் குழந்தைகளும் செய்யும் சிறுசேமிப்புக்கு
"சிறுபாடு" என்று சோழர்காலத்தில் பெயர் இருந்தது.
23. தேவரடியார் மேற்கொண்டிருந்த திருத்தொண்டுகளைக்
கூறுக.
கோயிலில் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல்,
மலர் தொடுத்தல், தேவாரம், திருவாசகம் ஓதுதல், நடனம் ஆடுதன் ஆகிய திருத்தொண்டுகளில்
ஈடுபட்டனர்.
24. தேவரடியார்களுக்கு வழங்கப்பட்ட வேறுபெயர்கள்
யாவை?
தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள்,
பதியிலார், கோயிற்பிணாக்கள் போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.
25. திருப்பாட்டு ஓதும் மகேசுரர் என்போர் யாவர்?
தேவாரம் பாடிய ஓதுவார்கள் "திருப்பாட்டு ஓதும் மகேசுரர்"
என்றழைக்கப்பட்டனர்.
26. சோழர் காலத்தில் தஞ்சை மாநகர் எவ்வாறு
பிரிக்கப்பட்டிருந்தது?
தஞ்சை மாநகரானது உள்ளாலை என்றும் புறப்பாடி
என்றும் இரு பிரிவுகளாக அமைந்திருந்தது.
27. தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு வழங்கப்பட்ட
வேறு பெயர்கள் யாவை?
இராசராசேசுவரம், பிருகதீச்சுரம்.
28. வட்டிகைச் செய்தி, புனையா ஓவியம் என்றால்
என்ன?
ஓவியத்துக்குத் தமிழில் "வட்டிகைச்
செய்தி" என்றும் பெயர் உண்டு. வண்ணம் தீட்டுவதற்கு முன்பு காணப்படும் ஓவிய அமைப்புக்குப்
"புனையா ஓவியம்" என்று பெயர்.
29. சோழர் காலத்தில் மருத்துவம் எந்நிலையில்
இருந்தது?
சோழர் காலத்தில் மருத்துவம் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.
நோயை மருந்தினாலும், அருவையினாலும் தணிப்பதற்கு அக்கால மருத்துவர்கள் பயிற்சி பெற்றிருந்தனர்.
அக்கால மருத்துவர்கள் பல அரிய மூலிகைகளின் பயனையும் அறிந்திருந்தனர். வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்று நாடிகளை
நன்கு ஆராய்ந்திருந்தனர். எண்ணாயிரம், முக்கூடல் ஆகிய இடங்களில் மருத்துவச் சாலைகள்
நடைபெற்று வந்டன. மருத்துவர்களுடைய பிழைப்புக்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன.
30. இரட்டைப் புலவர்கள் யார் காலத்தவர்கள்?
இயற்றிய நூல்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர்
கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வில்லிபுத்தூரார் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்
புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது;
மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில்
சுமந்து நடப்பார்; கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார். இவர்கள் இணைந்தே சிலேடையாகப்
பாடுவதில் வல்லவராவர். நூல்கள்: திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக்
கலம்பகம், ஏகாம்பரநாதர் வண்ணம், மூவர் அம்மானை, கச்சிக் கலம்பகம், கச்சியுலா ஆகிய நூல்களையும்
பல தனிப் பாடல்களையும் இவர்கள் பாடியுள்ளனர்.
31. வளஞ்சியர் என்பவர் யார்?
வளஞ்சியர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத்
தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர்
ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம் ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம்
சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றிப் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள்
சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய
பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்திலீடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும்
ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலைதூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். கி.பி. 9 ஆம்
நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள்
இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும்
வணிகப் பொருட்களையும் பற்றித் தெளிவுறுத்துகின்றன.
தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும்
செயற்பட்ட இவ்வணிகக் கழகம் கன்னடத்தில் ஐயவோலே என்றும் தெலுங்கில் ஐயவோலு என்றும் வடமொழியில்
ஆரியரூபா என்றும் தமிழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்படுகிறது. சோழர்களின் கடுமையான
கட்டுப்பாடு காரணமாக இவர்களின் சொந்தப் பண்பாட்டு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டாலும்
சோழர்களின் கீழ் இவர்கள் மிக்க வலிமை பெற்றனர். இவர்கள் வீர வளஞ்சிய தர்மம் எனப்பட்ட
வீர தீர அல்லது உயர் மரபு வணிகச் சட்டத்தின் காவலர்களாயிருந்தனர். இவர்களின் கொடியிற்
காணப்பட்டகாளை மாட்டைச் சின்னமாகக் கொண்டிருந்த இவர்கள் தீரமிக்க வணிகர்களாகப் புகழ்
பெற்றிருந்தனர்.
32. வைணவ சமயத்தில் தென்கலைப் பிரிவில் சிறப்பாக
எண்ணப்படுபவர்கள் யாவர்?
திருக்குருகைப் பிரான், பெரியவாச்சான்பிள்ளை,
பிள்ளை லோகாச்சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள் ஆகியோர் வைணவ
சமயத்தில் தென்கலைப் பிரிவில் சிறப்பாக எண்ணப்படுபவர்கள் ஆவர்.
33. சோழர் காலத்தில்
எழுந்த தத்துவங்கள் யாவை?
சங்கரரின் அத்துவைதம், இராமானுசரின் விசிட்டாத்துவைதம், மத்துவரின்
துவைதம், சைவ சித்தாந்தம் ஆகியனவாகும்.
ஏழு மதிப்பெண் வினாக்கள்
1.
சோழர்
- கீழைச் சாளுக்கியர் உறவு குறித்து எழுதுக.
இரத்த உறவுடைய மேலைச் சாளுக்கியர்க்கும்,
கீழைச் சாளுக்கியர்க்கும் இடையே ஆதிக்கப் போட்டி இருந்து வந்தது. மேலைச் சாளுக்கிய
மன்னனாக இருந்த சத்தியாசிரயன் இவ்விரு நாடுகளையும் ஒன்றிணைத்துக் கீழைச் சாளுக்கிய
நாட்டைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர விரும்பினான். இச்சூழலில் கீழைச் சாளுக்கிய
நாட்டில் அரசுரிமைப் போர் நடபெற்றது. இராசராசன், சக்திவர்மன் என்பவனை ஆதரித்து
அவனை அரியணையில் அமர்த்தினான். நன்றிக்கடனாகச் சக்திவர்மன் சோழர்களுக்கு அடங்கி நடந்தான்.
மேலைச் சாளுக்கிய நாடு, தன் திட்டத்துக்கு எதிராக நின்ற சோழநாட்டைப் பகைத்தது.
சோழரின் தலைமையை ஏற்றதனால் மேலைச் சாளுக்கியர்கள்
கீழைச் சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தனர். எனினும் சோழர் படையின் வரவால் மேலைச்
சாளுக்கியர் தோற்றுப் போயினர். சாளுக்கிய நாடு மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியது.
மேலைச் சாளுக்கிய நாட்டில் சக்திவர்மனுக்குப்
பின் ஆட்சிக்கு வந்த விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகள் குந்தவையை மணம் முடித்துக்
கொடுத்தான்; இதன் மூலம் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான உறவு
நீடித்தது.
இதேபோல்
முதலாம் இராசேந்திரனும் தன் மகள் அம்மங்கைதேவியை கீழைச் சாளுக்கிய அரசன் ராசநரேந்திரனுக்குக்
கொடுத்தார். இரண்டாம் இராசேந்திரனும் தன் மகள் மதுராந்தகியைக் கீழைச் சாளுக்கிய அரசன்
முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குக் கொடுத்தான். இவன்தான் அதிராசேந்திரனுக்குப் பிறகு
வாரிசு அற்று இருந்த சோழப் பேரரசுக்கு அரசனானான். இவ்வாறு சோழர் - கீழைச் சாளுக்கியர்
உறவு நீடித்தது.
2.
முதலாம்
குலோத்துங்கனின் கலிங்கப்போர் குறித்து விவரிக்க.
முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குத் திறை
செலுத்த மறுத்தான் கலிங்க மன்னன்; மறுத்த வடகலிங்க மன்னன் அனந்தவர்மனைத் தண்டிக்கும்
நோக்குடன் கருணாகரன் தலைமையில் எடுக்கப்பட்ட படையெடுப்பு இது. குலோத்துங்கன் செய்த
போர்களுள் தனிச் சிறப்பு வாய்ந்ததும் செயங்கொண்டாரால் கலிங்கத்துப்பரணியில் பாராட்டப்பெறுவதும்
இப்போரேயாகும்.
இப்போரில் கலிங்கம் பெரும் சேதத்திற்கு
உள்ளாகியது. போரில் எதிர்த்து நிற்க முடியாமல் கலிங்க வீரர்கள் மாறுவேடமிட்டு ஓடி ஒளியத்
தொடங்கினர். புறமுதுகிட்ட கலிங்க மன்னனைத் தேடி, அவனையும் அவன் நாட்டு யானை, குதிரை,
தேர்களையும் கைப்பற்றிக் கொண்டு சோழர்படை நாடு திரும்பியது.
3.
காடவர்கோன்
கோப்பெருஞ்சிங்கன் குறித்து எழுதுக.
கோப்பெருஞ்சிங்கன் தென்னார்க்காடு சேந்தமங்கலத்திலிருந்து
அரசாண்டவன். இவன் தான் பல்லவன் அல்லது காடுவெட்டிப் பரம்பரையில் தோன்றியதாகப் பெருமை
கூறி வந்தான்.
பாண்டியரும் போசளரும் காகதீயரும் மேற்கொண்ட
அரசியற் சூதாட்ட அரங்கில் கோப்பெருஞ்சிங்கனின் பெயரானது சுடர்விட்டு ஒளிர்கின்றது.
மூன்றாம் இராசராசச் சோழன்கீழ் குறுநிலமன்னனாகத்
தன் ஆட்சியைத் தொடங்கிய கோப்பெருஞ்சிங்கன், அப்பேரரசனையே தெள்ளாற்றுப் போரில் தோல்வியுறச்
செய்தான். அவனைச் சேந்தமங்கலத்தில் சிறையிட்டும் வைத்தான். போசள மன்னன் நரசிம்மன் தலையிட்டதன்
பேரில் இராசராசனைக் கோப்பெருஞ்சிங்கன் சிறையிலிருந்து விடுவித்தான்.இருப்பினும் தன்
முயற்சியைக் கைவிடாமல் பெரம்பலூர் என்னும் இடத்தில் போசளருடன் போர் தொடுத்து வெற்றி
கண்டான்.
இறுதியில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.
1255இல் சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். கோப்பெருஞ்சிங்கன் மீண்டும்
வேற்றரசு ஒன்றுக்கு அடிமையானான்; பாண்டியனுக்குப் படைத்துணையையும் நல்கினான்.
சிதம்பரம் கோயிலின் தெற்குக் கோபுரத்தை
எழுப்பிய பெருமை இவனையே சாரும். இவன் காடககுல திலகன், பரதமல்லன், பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன்
போன்ற பல விருதுகளை ஏற்றுக்கொண்டான்.
4.
சோழர்கால
மக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களை விளக்குக.
i.
சங்ககாலப் பழக்கவழக்கங்கள் சில சோழர் காலத்திலும்
தொடர்ந்து வந்துள்ளன.
ii.
கார்த்திகை மாதம் கார்த்திகை நாள் அன்று
குன்றின்மேல் விளக்கிட்டனர்.
iii.
வெள்ளம் பெருகி வருவதை முரசறைந்து மக்களுக்கு
முன்னறிவுப்பு செய்தனர்.
iv.
மன்னரின் வரலாறுகள் நாடகமாக நடித்துக்
காட்டப்பட்டன.
v.
உணவு உணடவுடன் நூறடி உலவி வரவேண்டுமென்று
அக்கால மருத்துவ நூல்கள் வற்புறுத்தின.
பிறப்பு குறித்த
பழக்கவழக்கங்கள்
vi.
குழந்தை பிறந்ததும்
அதற்கு மண் பொட்டிடுவார்கள்; பிறகு அதைக் குளிப்பாட்டுவார்கள்; மருந்து வார்ப்பார்கள்.
vii.
குழந்தைகளுக்குச்
சாதகங்கள் கணித்து வைப்பதுண்டு.
viii.
குழந்தை பிறந்த
பன்னிரண்டாம் நாள் அதற்குப் பெயர் சூட்டுவிழா நடைபெறும்.
ix.
ஆண் குழந்தைகளுக்குத்
தலையை மழித்துக் குடுமி வைத்தலும் உபநயனமும் நடைபெறும்.
x.
குழந்தையை ஐந்தாம்
ஆண்டில் பள்ளிக்கு அனுப்புதல் ஒரு மங்கலச் சடங்காகக்
கொண்டாடப்பட்டது. பயிற்சி தொடங்கிய நாளன்று ஆசிரியருக்குப்
பொற்காசு காணிக்கை அளிப்பதுண்டு.
இறப்பு குறித்த
பழக்கவழக்கங்கள்
xi.
சங்க காலத்தில்
பிணங்கள் புதைக்கப்பட்டன; அவ்வழக்கத்துக்கு மாறாகச் சோழர் காலத்தில் பிணங்களைச் சுடுகாட்டில்
எரிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
xii.
பிணங்களுடன் சுடுகாட்டுக்குப்
பெண்களும் செல்லுவர். இப்போது அவ்வழக்கம் மறைந்துவிட்டது.
xiii.
விதவைப் பெண்கள்
தாம் அணிந்திருந்த வளையல்களை உடைத்து அணிகலன்களைக் களைந்துவிடுவார்கள்.
xiv.
பிணத்தைச் சுடுகாட்டில்
வைத்ததும் அங்கிருந்த புலைமகன் உப்பில்லாமல் பொங்கிய சோற்றைப் பலியாகத் தூவுவான்.
xv.
மலையிலிருந்து
குதித்து உயிர்விடும் பழக்கம் அந்நாள்களில் இருந்துவந்தது.
விருந்தோம்பல்
குறித்த பழக்கவழக்கங்கள்
xvi.
விருந்தினர் வீட்டுக்கு
வந்தவுடன் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது.
xvii.
விருந்தினர் நீராடி
எழுந்தவுடன் வீட்டுக்குரியவர்கள் அவர்களைக் கால் கழுவி மணைமேல் அமரவைப்பர்.
xviii.
விருந்தினர் மும்முறை
தண்ணீரினால் வாயைத் துடைத்துக்கொண்டு மும்முறை சில துளி தண்ணீர் அருந்துவர்.
xix.
உண்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்ளுவார்கள்.
xx.
பார்ப்பன விருந்தினருக்குப் பொன் தட்டும், பக்கத்
தட்டுகளும் வைத்து உணவு படைப்பார்கள்
பிற பழக்கவழக்கங்கள்
xxi.
வெளியூர் செல்ல விடைபெற்றுக் கொள்ளும் மகன்
பன்னிரண்டு வில் தொலைவில் நிற்பான்; அவன் தாய் மூன்று வில் தொலைவில் நெருங்கிச் சென்று
விடை கொடுத்தனுப்புவாள்.
xxii.
நாவிதன் சவரக்கத்தியைத்
தீட்டிக் கல்லின்மேல் தேய்த்துத் துணியால் துடைத்துவிட்டு அதைத் தன் உள்ளங்கையின் மேல்
புரட்டிக் கூராக்குவான்.
xxiii.
பாம்புகளில் பல
குலங்கள் உண்டு என்றும், அவை கடிப்பதற்கு எட்டு காரணங்கள் உண்டு என்றும் ஒரு நம்பிக்கை
நிலவிற்று.
5.
கைக்கோளர்களின்
உரிமைகளையும் மக்களிடம் பெற்ற செல்வாக்கினையும் குறித்து எழுதுக.
கைக்கோளர்கள் தமிழரின் சமூகத்தில் கம்மாளர்களைப்
போலவே மிகவும் சிறப்பான இடம் பெற்றிருந்தனர். அவர்கள் ஏற்கெனவே கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கைக்கோளர் படை எனத் தனிப்படைகள் வகுக்கப்பட்டிருந்தன.
நாளடைவில் அவர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுக் குடிமக்களுக்குப் பலவகையான துணிகளை நெய்து
கொடுத்தார்கள். ஊர்தோறும் கைக்கோளர்களுக்கெனத் தனித் தெருக்களே அமைந்திருந்தன. கைக்கோளர்கள் நெய்துவந்த தறிகளுக்கு வரிகள் போடும்
வழக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.
உரிமைகள்:
கைக்கோளர்கள் பல்லக்கு ஏறிச் செல்லவும்,
தமக்கு முன்பு சங்கு ஊதப்பெறவும் காஞ்சிபுரத்திலும் விரிஞ்சிபுரத்திலும் புதிய உரிமைகளைப்
பெற்றனர். மேலும் பாவாடை விரித்தல், பரிவட்டம்
தாங்குதல் போன்ற உரிமைகள் வழங்கப் பெற்றிருந்தனர். நெசவுத் தொழிலின் இன்றியமையாமையை
உணர்ந்து கைக்கோளர்கள் ஊரில் புதிதாகக் குடியமர்த்தப்பட்டனர்; அவர்கள் மேல் விதிக்கப்பட்டிருந்த
இடங்கை வரியினின்றும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கைக்கோளருக்கு முதலிகள்
என்ற குலப் பட்டப்பெயர் வழங்கலாயிற்று. தேவரடியார்களில் ஒரு பிரிவினர் இக்குலத்தைச்
சார்ந்தவர்களாகவும் இருந்தனர். கைக்கோளர்களுடன் கம்மாளர்கள் சம உரிமைக்காகப் போராடியுள்ளனர்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதைய வடபாதிமங்கலத்தில்
வாழ்ந்திருந்த கைக்கோளர்கள், செட்டிகள், கச்சவட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள்,
செக்கு வணிகர், உறைகாரர் ஆகியோர் ஒன்றுகூடி, தனிநின்று வென்றான் நல்லூர், மாதேவி மங்கலம்
ஆகிய இரு ஊர்களையும் 'அஞ்சினான் புகலிட'மாக நிறுவினார்கள். அரசு அல்லது மேற்குலத்தினர்
இழைத்த கொடுமைகளிலிருந்து தப்பிய குடிகள் இந்த இடத்தில் அடைக்கலம் புகலாம். அவர்களுக்கு
துன்பம் ஏதும் நேராது.
6.
திருமந்திரத்தின்
சிறப்பினை எழுதுக.
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட
தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால்
புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.
இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர்
திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு.
இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச்
சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன
திருமந்திரத்தின் வேறு பெயர்கள். இந்நூல் பண்டைய
இந்திய சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது.
வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம்
அரிய விளக்கமாய் விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை
உடையது. இந்நூல் இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும்
உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல்வாழ்க்கை வழிகாட்டி
நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு
உகந்த யோகம், தியானம், குண்டலினி யோகம், மருத்துவம், நல்ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும்
அரிய நூலாகும். அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல்
திருமூலரின் சிறப்பு இயல்பாம்.
“தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத்
திருமந்திரம்” எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினைக்
கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.
7.
'மும்முடிச்
சோழ மண்டலம்' - பெயர்க் காரணம் கூறுக.
இராசராசன் கொண்ட வெற்றிகள் அனைத்திலும்
சிறந்து விளங்குவது அவன் ஈழத்தைக் கைப்பற்றியதாகும். இராசராசன் படையெடுப்பின்போது ஐந்தாம்
மகேந்திரன் என்பவன் சிங்களத்துக்கு மன்னனாக இருந்தான். இலங்கையில் கேரளரும் கருநாடரும்
சேர்ந்திருந்த கூலிப்படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டன. அக்காரணத்தினால் மகேந்திரன் ரோகணம்
என்ற இடத்துக்கு ஓடி ஒளிந்து வாழ்ந்தான். அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இராசராசன்
இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றி அதற்கு "மும்முடிச் சோழ மண்டலம்" என்று
பெயர் சூட்டி அதைச் சோழ மண்டலங்களுள் ஒன்றாக இணைத்துக் கொண்டான்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின்
தலைநகராக இருந்த அனுராதபுரத்தைத் தாக்கி அழித்துவிட்டு பொலன்னருவையை இலங்கையின் தலைநகராக்கினான்;
அதற்கு "ஜனநாத மங்கலம்" என்று புதுப்பெயர் சூட்டி அங்கு எழில்மிக்க சிவாலயம்
ஒன்றை எழுப்பினான்.
8.
சோழர்
கால நகர அமைப்பினை விளக்கிக் கூறுக.
புத்தகத்தில்
340ஆம் பக்கம் 2ஆம் பத்தி தொடங்கி 341ஆம் பக்கம் 2ஆம் பத்தி வரையிலான செய்திகளைச் சுருக்கி
எழுதவும்.
9.
சோழர்காலத்
திருமணமுறையை விளக்கியுரைக்க.
புத்தகத்தில்
351ஆம் பக்கம் 5ஆம் பத்தி தொடங்கி 353ஆம் பக்கம் 2ஆம் பத்தி வரையிலான செய்திகளைச் சுருக்கி
எழுதவும்.
10. சோழர்களின் நீதி வழங்கும் சிறப்பு குறித்து
எழுதுக.
புத்தகத்தில்
309ஆம் பக்கம் 2ஆம் பத்தி தொடங்கி 310ஆம் பக்கம் 1ஆம் பத்தி வரையிலான செய்திகளைச் சுருக்கி
எழுதவும்.
11. சோழ அரசாங்கம் மக்கள் மேல் விதித்திருந்த
வரிகளை எழுதுக.
புத்தகத்தில்
314ஆம் பக்கம் 2ஆம் பத்தி தொடங்கி 315ஆம் பக்கம் 2ஆம் பத்தி வரையிலான செய்திகளைச் சுருக்கி
எழுதவும்.
12. சோழர் காலத்துப் பெண்களின் நிலைமையை விளக்குக.
Ø சோழர்
காலத்தில் பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர்.
Ø மகளிரிக்கு
நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. மனைவியின் சீதனச் சொத்தை விற்கும்
உரிமை கணவனுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் கணவன் இறந்தபின் அவனுடைய நிலங்களும் அடிமைகளும்
மனைவிக்கே உரிமையாகும்.
Ø மன்னர்,
செல்வர் ஆகியோரிடையே பல மனைவியரை மணக்கும் வழக்கம் காணப்பட்டது. குடிமக்களிடம் இவ்வழக்கம்
காணப்படவில்லை.
Ø உடன்கட்டை
ஏறும் வழக்கம் அரச குடும்பப் பெண்களிடையே சில இடங்களில் காணப்பட்டது; பொதுமக்களிடம்
இவ்வழக்கம் காணப்படவில்லை.
Ø ஆணுக்குத்
தரப்பட்ட கூலியில் பாதியே பெண்களுக்குத் தரப்பட்டது.
தேவரடியார் பெண்கள்
திருவிழாக் காலங்களில் இசை, கூத்து நிகழ்த்தவும்,
சாதாரண நாட்களில் கோவில் பணிகள் செய்யவும் கோவில்களில் தேவரடியார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் கால்களில் சூலக் குறியிடும் வழக்கம் இருந்தது. இவர்களுக்கென இறையிலி நிலங்கள்
மானியமாக அளிக்கப்பட்டிருந்தன.
13. சோழர்காலக் கோவில்கள் செய்த பொதுப்பணிகள்
குறித்து விளக்குக.
சோழர்காலக் கோவில்கள் பல பொதுப்பணிகளில் ஈடுபட்டிருந்தன.
கல்விக்கூடமாகவும், நூல்களின் அரங்கேற்று மையமாகவும், விழாக்கள் கொண்டாடும் களங்களாகவும்,
ஊரவை நடைபெறும் அவையாகவும், அரசுப் பணிகளின் அலுவலகமாகவும் கோவில்கள் விளங்கின.
கல்விக்கூடம்:
சோழர்காலக் கோவில்கள் வேதம், வேதாந்தம், தேவாரம், திருவாசகம்,
திவ்வியப்பிரபந்தம் ஆகிய சமய நூல்களைக் கற்பிக்கும் கல்விக்கூடங்களாகப் பணி புரிந்தன.
அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதி செய்து தரத் தனி அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன.
கலைக்கூடம்:
கோவில்களில் இசையும் கூத்தும் பக்தியை வளர்க்கும் முறையில்
எடுத்துரைக்கப்பட்டன. விழாக்காலங்களில் கூத்து நிகழ்த்தவும், கூத்தர்களுக்கு நிவந்தம்
வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முடிசூட்டுவிழா
மையம்:
கோவில்களில் இருந்த இராசசபை என்ற திருவோலக்க மண்டபங்கள் முடிசூட்டுவிழா
நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலச் சோழர்க்கும் பாண்டியர்க்கும் தில்லை ஆயிரங்கால்
மண்டபம் முடிசூட்டுவிழா மண்டபமாக விளங்கியது.
வெற்றிவிழா மையம்
அரசர்கள் போரில் பெற்ற வெற்றியையும் வீரச்செயல்களையும் கொண்டாடக்
கோவில்களையே களங்களாகக் கொண்டனர். முன்னது 'விசயாபிஷேகம்' என அழைக்கப்பட்டது. பின்னது
'வீராபிஷேகம்' என அழைக்கப்பட்டது.
நூல் அரங்கேற்று
மையம்:
புலவர்கள் இயற்றிய நூல்கள் கோவில் மண்டபங்களில் அரங்கேற்றப்பட்டன.
பெரியபுராணம் தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது.
தானம் வழங்கல்:
அரசர்கள் உயர்ந்த தானங்களைக் கோவிலில் வைத்துச் செய்வது மரபாக
இருந்தது. முதல் இராசராசன் திருவிசலூர்க் கோவிலில் வைத்துத் துலாபார தானம் செய்தான்.
ஊரவை கூடும் இடம்:
ஊரவை உறுப்பினர் தேர்தல்களும் ஊரவைக் கூட்டங்களும் கோவிலுக்குள்
நடைபெற்றன. கோவில் என்ற புனித உணர்வும், அச்ச உணர்வும் நேர்மையான செயல்கள் நடைபெற நெறிப்படுத்தின.
சில வேளைகளில் கோவில்கள் பொதுச் செய்திகளின் பதிவு அலுவலகமாகவும் செயல்பட்டன.
15 மதிப்பெண் வினாக்கள்
1.
சோழர்காலக்
கலைகளும் கோவில் பணிகளும் குறித்து கட்டுரை வரைக.
முன்னுரை
சோழர்காலக் கலைகளைப் பல்லவர்காலக் கலைவளர்ச்சியின்
அடுத்த படிநிலை எனக் கொள்ளலாம். பல்லவர்தம் கலைமரபே இங்குப் பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளமை
காண்கிறோம். சோழ மன்னர்கள் எழுப்பிய கோவில்களுக்குப் பெரும்பாலும் அம்மன்னர் பெயரையோ,
விருதுபெயரையோ சூட்டும் மரபு காணப்படுகிறது. இராசராசேச்சுரம், கங்கைகொண்ட சோழபுரம்
ஆகியவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். மூதாதையரின் நினைவுக்குறியீடாகவும் கோவில்கள்
எழுப்பப்பட்டன. முதல் பராந்தகன் தன் தந்தையின் நினைவாக எழுப்பிய ஆதித்தியேச்சுரம்,
முதல் இராசராசன் அரிஞ்சயன் நினைவாக எழுப்பிய அரிஞ்சிகையீச்சுரம் ஆகியவை இதற்குச் சிறந்த
எடுத்துக்காட்டுகள்.
சோழர்காலக்
கோவில்பணிகளை இருவகைப்படுத்தலாம்.
1.
சோழர் செய்த கோவில் பணிகள்
2.
சோழர் காலக் கோவில்கள் செய்த பணிகள்
முதல்
வகையில் கோவில்கள் கட்டிய சோழரின் பணிகளும், இரண்டாம் வகையில் அக்கோவில்கள் செய்த பொதுப்பணிகளும்
இடம் பெறுகின்றன.
சோழர்
செய்த கோவில் பணிகள்
விசயாலய சோழேச்சுரம்:
இக்கோவில் முற்காலச் சோழர் கலைப்பாணிக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இக்கோவில் அமைப்பால் சிறியவை.
கோவில் வடிவமைப்பில் பிற கோவில்களில் இருந்து
இது மாறுபட்டு அமைந்துள்ளது. இதன் கருவறை வட்ட வடிவம் கொண்டது. அதன் சுற்றுப்பிரகாரம்
சதுரமாக உள்ளது.
கருவறையின் மேலுள்ள விமானம் நான்கு தளங்களைக்
கொண்டது. அவற்றின் முதல் மூன்று தளங்கள் சதுரமானவை; நான்காம் நிலை வட்ட வடிவமானது.
பல்லவர் காலக் கலைப்பாணியைப் பெரிதும்
பின்பற்றி அமைந்த கோவில் இது.
கண்ணனூர் பாலசுப்பிரமணியர்
கோவில்:
முற்காலச் சோழர்கள் சமைத்த கோவில்கள்
115. அவற்றுள் முதல் ஆதித்தசோழன் சமைத்த கோவில்கள் 47. முதல் ஆதித்தன் சமைத்த கோவில்களுள்
தனித்தன்மை வாய்ந்தது கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்.
கட்டடக்கலைப்
பாங்கில் இது விசயாலய சோழேச்சுரத்தை அடியொற்றியது.
இங்கு முருகனின் ஊர்தியாக யானை அமைந்துள்ளது.
மேலும் விமானத்திலும் துணைக்கோவில்களின் கூரை மூலைகளிலும் நந்திக்குப் பதிலாக யானை
உருவம் அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய
கோவில்
இக்கோவில் பிற்காலச் சோழரின் சிற்பக் கலைக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்கோவிலைக்
கி.பி. 1003இல் கட்டியவர் இராசராச சோழன்.
கோவில் அமைப்பு:
கோவிலின்
நிழல் தரையில் படாதவாறு கலைநுட்பத்தோடு இது கட்டப்பட்டுள்ளது.
14 அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 500 அடி
நீளமும் 250 அடி அகலமும் கொண்டது.
இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம்,
நந்திமண்டபம், விமானம் ஆகிய உறுப்புகளை உடையது.
கோவிலைச் சுற்றி இரு மதில் சுவர்கள் அமைந்துள்ளன;
இரண்டிலும் கோபுர வாயில்கள் உள்ளன. மதிலின் உட்பக்கத்து மூலை ஒவ்வொன்றிலும் துணைக்கோவில்
உள்ளது.
கோவிலின் கருவறை 45 அடி பக்கமுள்ள சதுரவடிவில்
அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி வலம் வரும் வழியின் உட்சுவர்களை ஓவியங்கள் அணி செய்கின்றன.
கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதனை
அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் முன்பக்கத்தில் நந்திமண்டபம் அமைந்துள்ளது.
அங்கு ஒரே கல்லில் ஆன மிகப் பெரிய நந்தி உள்ளது.
கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது.
'தட்சிணமேரு'
என இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 190 அடி. விமானத்தின் அடித்தளம் சதுரவடிவமானது.
இதன் பக்கங்கள் 82 அடி நீளம் உடையவை. விமானம் 50 அடி உயரம் உடையது. 13 அடுக்குகளைக்
கொண்டது. போகப் போக சிறுத்துக்கொண்டே போகுமாறு விமானம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின்
உச்சியில் 80 டன் எடையுள்ள ஒரு கருங்கல் போடப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள சிவபெருமான்மீது கருவூர்தேவர்
பதிகம் பாடியுள்ளார். அது 9ஆம் திருமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இடம்பெற்றுள்ள
கல்வெட்டுக்களும், புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்களும் இராசராசனின்
சமயப்பொறையையும், சமயப் பெருந்தன்மையையும் விளக்குவனவாக உள்ளன.
கங்கை கொண்ட சோழேச்சுரம்
முதல் இராசராசனின் தஞ்சைப் பெரிய கோவில்
பாணியை அடியொற்றி முதல் இராசேந்திரனால் இக்கோவில் அமைக்கப்பட்டது. விமான வடிவமைப்பிலும்
இரண்டும் ஒன்றுபட்டு உள்ளன. எனினும் தஞ்சைப் பெரிய கோவிலை விட நுணுக்கமான வேலைப்பாடுகளை
மிகுதியாகக் கொண்டது இக்கோவில்.
இக்கோவிலில் 6 கோபுரங்கள் உள்ளன. 13 முழச்சுற்றுள்ள
லிங்கம் கருவறையை அணி செய்கிறது. விமானம் 100 அடி பக்கங்களை உடைய சதுரவடிவில் அமைந்துள்ளது.
186 அடி உயரமுள்ள இவ்விமானத்தில் 8 நிலைகள் உள்ளன. அம்மனுக்கு என்று இங்கு தனிக்கோவில்
ஒன்று உள்ளது.
பிற கலைகள்
பண் வரிசையில் தொகுக்கப்பட்டுள்ள சைவத்
திருமுறைகள் சோழர்கால இசை நுட்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். கலிங்கத்துப்பரணி
குறிப்பிடும் ‘குலோத்துங்கன் இசைத்தமிழ் நூல்’ சோழ மன்னர்கள் இசை மீது கொண்ட ஈடுபாட்டிற்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இசை, கூத்து ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய
தேவரடியார்கள் கோவில் பணிக்காகவும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கோவில்தோறும்
நியமிக்கப்பட்டிருந்தனர். சமயப் பின்னணியில் எழுந்த ஓவியங்கள் கோவில்தோறும் சுவர்களை
அணிசெய்து நிற்கின்றன. தஞ்சைப் பெரிய கோவில் சுவர்களில் சுந்தரர் தடுத்தாட் கொள்ளப்பட்ட
வரலாறு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
இராசராசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு
எழுதப்பட்ட இராசராசேச்சுர நாடகம் பற்றித் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோவில்கள் செய்த
பொதுப்பணிகள்
சோழர்காலக் கோவில்கள் பல பொதுப்பணிகளில் ஈடுபட்டிருந்தன.
கல்விக்கூடமாகவும், நூல்களின் அரங்கேற்று மையமாகவும், விழாக்கள் கொண்டாடும் களங்களாகவும்,
ஊரவை நடைபெறும் அவையாகவும், அரசுப் பணிகளின் அலுவலகமாகவும் கோவில்கள் விளங்கின.
கல்விக்கூடம்:
சோழர்காலக் கோவில்கள் வேதம், வேதாந்தம், தேவாரம், திருவாசகம்,
திவ்வியப்பிரபந்தம் ஆகிய சமய நூல்களைக் கற்பிக்கும் கல்விக்கூடங்களாகப் பணி புரிந்தன.
அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதி செய்து தரத் தனி அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன.
கலைக்கூடம்:
கோவில்களில் இசையும் கூத்தும் பக்தியை வளர்க்கும் முறையில்
எடுத்துரைக்கப்பட்டன. விழாக்காலங்களில் கூத்து நிகழ்த்தவும், கூத்தர்களுக்கு நிவந்தம்
வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முடிசூட்டுவிழா
மையம்:
கோவில்களில் இருந்த இராசசபை என்ற திருவோலக்க மண்டபங்கள் முடிசூட்டுவிழா
நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலச் சோழர்க்கும் பாண்டியர்க்கும் தில்லை ஆயிரங்கால்
மண்டபம் முடிசூட்டுவிழா மண்டபமாக விளங்கியது.
வெற்றிவிழா மையம்
அரசர்கள் போரில் பெற்ற வெற்றியையும் வீரச்செயல்களையும் கொண்டாடக்
கோவில்களையே களங்களாகக் கொண்டனர். முன்னது 'விசயாபிஷேகம்' என அழைக்கப்பட்டது. பின்னது
'வீராபிஷேகம்' என அழைக்கப்பட்டது.
நூல் அரங்கேற்று
மையம்:
புலவர்கள் இயற்றிய நூல்கள் கோவில் மண்டபங்களில் அரங்கேற்றப்பட்டன.
பெரியபுராணம் தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது.
தானம் வழங்கல்:
அரசர்கள் உயர்ந்த தானங்களைக் கோவிலில் வைத்துச் செய்வது மரபாக
இருந்தது. முதல் இராசராசன் திருவிசலூர்க் கோவிலில் வைத்துத் துலாபார தானம் செய்தான்.
ஊரவை கூடும் இடம்:
ஊரவை உறுப்பினர் தேர்தல்களும் ஊரவைக் கூட்டங்களும் கோவிலுக்குள்
நடைபெற்றன. கோவில் என்ற புனித உணர்வும், அச்ச உணர்வும் நேர்மையான செயல்கள் நடைபெற நெறிப்படுத்தின.
சில வேளைகளில் கோவில்கள் பொதுச் செய்திகளின் பதிவு அலுவலகமாகவும் செயல்பட்டன.
2. சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தமிழுக்குச்
செய்த தொண்டினைப் புலப்படுத்துக அல்லது தமிழகத்தில் 9 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை உருவான இலக்கியங்களின் சிறப்பினை
விளக்கிக் கட்டுரை வரைக அல்லது சோழர் காலத்தில்
தோன்றிய இலக்கியங்களை விரித்துரைக்க.
முன்னுரை
சோழர் கால இலக்கியங்கள் எனப்படுவது தென்னிந்தியாவினை
வலிமை வாய்ந்த சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம்
நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். சோழர் வலிமையாக
ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு, கலகம், குழப்பம் ஏதுமற்ற நிலைமையும்,
பக்தி இயக்கங்களின் எழுச்சியும் இருந்தது. சோழமன்னர்களுக்கு கலை, இலக்கியங்கள் மீது
இருந்த விருப்பும், அவர்கள் புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள்
தமிழில் தோன்ற காரணமாயிற்று. ஒரு சில இலக்கிய நூல்கள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலவும்
தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.
கம்பர்
கம்பர் இயற்றிய கம்பராமாயணம் புகழ்பெற்ற
நூலாகும். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்கரவர்த்தி"
போன்ற பட்டங்களைச் சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே
மிகப்பெரிய இதிகாசம் எனக் கருதப்படுகிறது. கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம்
மாவட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். சோழ
மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் கம்பர், சோழநாட்டிலிருந்து வெளியேறினார். அவரைச்
சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். கம்பர் தன்னை ஆதரித்த வள்ளலை நன்றி மறவாமல்
தன் நூலில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பதிவு செய்கிறார்.
தாம் இயற்றிய
இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால்
இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே இந்நூல் அழைக்கப்படுகிறது. கம்பராமாயணம்
பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்,
யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நூற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது.
இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும்
"தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம், திருக்குறள்) என்பர்.
வால்மீகி
இராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிக்கு வரி அப்படியே
மொழிபெயர்ப்பு செய்யவில்லை. எனவே இராமன் அசைவ உணவினை ஏற்றமை, இராவணனின் வன்மை, சீதையைத்
தொடாமல் இருந்த நெறி போன்றவற்றைக் கம்பராமாயணத்தில் காணலாம். மேலும் கம்பர் ஏர் எழுபது,
சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை ஆகிய நூல்களையும் இயற்றினார் எனக் கொள்வர்.
புகழேந்தி
புகழேந்தி
நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர்.
நளவெண்பா 424 வெண்பாக்களையும் சுயம்வரக் காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம்
என மூன்று காண்டங்களையும் உடையது. நளவெண்பா சூதில் தோற்ற நிடதநாட்டு மன்னன் நளன் - தமயந்தி கதையைக்
கூறுகிறது. இந்நூல் எழுத புகழேந்திக்கு உதவியர் மள்ளுவ நாட்டு மன்னனான சந்திரன் சுவர்க்கி.
இவனை 100 பாடல்களுக்கு ஒரு முறை புகழேந்திப் புலவர் தன் நூலில் பதிவு செய்கிறார்.
ஒட்டக்கூத்தர்
சோழ மன்னனின் ஆட்சிக்கே பெருமையும் புகழையும்
சேர்த்தவர்கள் கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் ஆகிய முப்பெரும் புலவர்கள் ஆவர். ஆனால்
இவர்க்ளுக்குள்ளே புலமைக் காய்ச்சல் இருந்ததனைச் செவிவழிக் கதைகள் மூலம் அறிகிறோம்.
மேலும் தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், மூவருலா, நாலாயிரக்கோவை, ஈட்டி
எழுபது, சரசுவதி அந்தாதி, அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். கம்பராமாயணத்தின்
உத்தர காண்டத்தைப் பாடியவரும் இவரே.
செயங்கொண்டார்
"பரணிக்கோர் செயங்கொண்டார்"
என இலக்கிய உலகம் இவரைப் போற்றுகிறது. முதலாம் குலோத்துங்கன் காலத்தவரான இவர் கலிங்கத்துப்பரணி
என்னும் நூலைப் பாடினார். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கண்ட மன்னனின் புகழைப்
பாடுவதே பரணியாகும். இந்நூல் சோழ மன்னர்களின் இராசப் பாரம்பரியத்தைப் பற்றிப் பல செய்திகளைக்
கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புடையதாகும். வீரம் மட்டுமின்றி நகைச்சுவையும் இந்நூலில்
பொலிவதைக் காணலாம். 'கடைத்திறப்பு', 'கூழ் அடுதல்' என்னும் பகுதிகள் தமிழ் இலக்கியத்தில்
ஈடு இணையற்ற படைப்புகளாக இருக்கின்றன.
கல்லாடனார்
கல்லாடனார் இயற்றிய கல்லாடம் என்னும் அகத்துறை
நூல் ஒன்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் உள்ள செய்யுள்களுள்
ஒரு நூற்றை அடிப்படையாகக் கொண்டு நூறு அகவற்பாக்களால் ஆக்கப்பட்டது இந்நூல். பதினோறாம்
திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கண்ணப்பத்தேவர் திருமறம் என்னும் நூலையும் இவரே
பாடினார் என்பர்.
ஒளவையார்
கம்பரின் உடன்காலத்தவரான ஒளவையார் என்றொரு
பெண்பாற் புலவர் இருந்தாரென்றும், இவருடைய அறிவு கம்பரின் கல்வியறிவைவிடச் சிறந்ததென்றும்,
இவர் கம்பரையே பலமுறை சொற்போரில் மடக்கியவர் என்றும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நூல்கள் இவர் இயற்றியன.
திருத்தக்கத்தேவர்
சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கத்தேவர்.
இவர் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் குலத்தினர். இவர் சீவகசிந்தாமணியில் பலவகையான
சுவைகளும் அமையுமாறு பாடியுள்ளார். சீவகன் எதிரியிடம் இருந்து தன் நாட்டை மீட்பதும்,
எட்டுப் பெண்களை மணப்பதும், இறுதியில் துறவு மேற்கொள்வதும் கதையாக அமைந்துள்ளது. இக்கதை
வடமொழிச் சார்புடையதாக இருந்தாலும் திருத்தக்கத் தேவர் சோழர்காலத் தமிழகத்தின் பின்னணியிலேயே
இந்நூலைப் படைத்துள்ளார். எனவே சோழர்கால நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறைகள் ஆகியவற்றைப்
பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ள ஒரு கலைக்களஞ்சியமாகவே இந்நூல் விளங்குகிறது.
கொங்குவேளிர்
தமிழ் மொழிக்கு வளமூட்டிய மற்றொரு சமணகாவியம்
பெருங்கதை என்பது. குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் இயற்றிய உதயணன் கதையை இந்நூல்
தமிழில் கூறுகின்றது. இதன் ஆசிரியர் கொங்குவேளிர் ஆவார். பெருங்கதையும் சீவகசிந்தாமணியைப்
போலவே ஒரு கலைக்களஞ்சியமாக விளங்குகிறது.
வளையாபதி, நீலகேசி என்னும் சமண காவியங்களும்,
குண்டலகேசி என்னும் பெளத்த காவியமும் சோழருடைய காலத்தில் இயற்றப்பட்டவையே. மேலும் திவாகரம்,
பிங்கலந்தை ஆகிய நிகண்டுகளும், நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலம், புறப்பொருள் வெண்பாமாலை,
வெண்பாப் பாட்டியல், வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கண நூல்களும் சோழர் காலத்தில்
தோன்றியவையே.
சேக்கிழார்
சேக்கிழார் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக
இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால், சோழனையும்
மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின்
வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இவர் இயற்றினார். பெரியபுராணத்தைப் பாட
தில்லையில் சிவபெருமானே “உலகெல்லாம்” என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு.
சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன்,
தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். சேக்கிழார்
பெரியபுராணத்தினைப் பாடி முடித்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின்
மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண்சாமரம்
வீசி பெரியபுராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
பெரியபுராணம் இரண்டு காண்டங்களையும் 13
சருக்கங்களையும் 4286 செய்யுள்களையும் உடையது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத்
தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது. இப்புராணத்தில்
ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக்
கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.
சைவ சித்தாந்த
சாத்திரங்கள்
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு
ஆகும். பதினான்கு சாத்திரங்கள் எவை எவை என்பதை-
'உந்தி களிறு உயர்போதம் சிந்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று'
எனவரும்
வெண்பா குறிக்கும்.
வைணவ இலக்கியம்:
சோழர் காலத்தில் வைணவச் சார்புள்ள நூல்கள்
அதிகமாகத் தோன்றவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன.
எனினும் அவற்றின் அடிப்படையில் வைணவத் தத்துவ நூல்கள் தமிழில் தோன்றவில்லை. யமுனாசாரியார்,
யாதவப் பிரகாசர், இராமாநுசர் ஆகியோர் வடமொழியில் வைணவ இலக்கியத்தை வளர்த்தார்கள்.
பொதுமக்கள் கேட்டுக் கேட்டு உளமுருகி நின்ற
ஆழ்வார்களின் இனிய பாசுரங்களுக்குத் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில்
விளக்கங்கள் எழுந்தன. இவை பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாததால் ஒரு சிலருக்கே பயன்பட்டன.
கோவைகள்
குலோத்துங்கன் கோவை, தஞ்சைவாணன் கோவை என்னும்
இரு நூல்களும் இக்காலத்தில் இயற்றப்பட்டவை. முன்னதன் ஆசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.
தஞ்சைவாணன் கோவையை இயற்றியவர் பொய்யாமொழிப் புலவராவார்.
முடிவுரை:
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஏற்றம் மிகுந்த
காலகட்டமாக சோழர்காலம் அமைந்தது. ஆட்சியில், பரப்பளவில், கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்துக்
கலைத்துறைகளும் எவ்வாறு சோழர்காலத்தில் உச்சத்தைத் தொட்டதோ அது போலவே இலக்கியத்துறையிலும்
உச்சத்தைத் தொட்டது. கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற இறவாப்
புகழ் பெற்ற பெருங்காப்பியங்களும், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்,
தக்கயாகப் பரணி போன்ற சுவையான சிற்றிலக்கியங்களும் ஒருசேர இக்காலத்தை அணி செய்தன.
3.
சோழர்
ஊராட்சி முறைமை குறித்து கட்டுரை வரைக.
சோழர் காலத்தில் சிற்றூர்களே நாட்டின்
முதுகெலும்பாக இருந்தன. சிற்றூரில் அமைந்த ஊராட்சியில் காணப்பட்ட சிறப்பியல்புகளே இதற்குக்
காரணம். சோழர் ஊராட்சி பற்றி மானூர்க் கல்வெட்டு, உத்தரமேரூர்க் கல்வெட்டு, திருப்பனந்தாள்
கல்வெட்டு, தழையனூர்க் கல்வெட்டு ஆகியவை விரிவாக எடுத்துரைக்கின்றன. இவற்றுள் உத்தரமேரூர்க்
கல்வெட்டுக்களின் ஊரவையின் அமைப்பு, தேர்தல் நடைபெற்ற முறை, உறுப்பினர்க்குரிய தகுதிகள்,
தகுதியழந்தோர், ஊரவையின் செயற்பாடுகள், அதிகார வரம்புகள் ஆகியன விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன.
ஊரவை வகைகள்
சோழர்
காலத்தில் இருந்த ஊரவைகளை நான்கு வகைப்படுத்தலாம்.
1.
கிராம
அவை
- அந்தணர் வாழ்ந்த சதுர்வேதி மங்கலத்தில் இருந்த அவை. பிரமதேய அவை எனவும் இது அழைக்கப்பட்டது.
2.
தேவதான
அவை
- கோவிலுக்குரிய தேவதானங்களில் இருந்த அவை.
3.
ஊர்
அவை
- அந்தணர் அல்லாத பிற வகுப்பினர் வாழ்ந்த ஊர்களில் இருந்த அவை.
4.
நகரவை
- வாணிகர் வாழும் ஊர்களில் இருந்த அவை.
ஊரவை அமைப்பு
ஊர் பெரும்பாலும் 30 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
மக்கள் தொகை மிகுந்திருந்த ஊர்களில் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டிருந்தது.
தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த செந்தலை 60 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாக அறிகிறோம்.
தொகுதி குடும்பு என அழைக்கப்பட்டது. இம்முப்பது குடும்புகளில் இருந்து 30 உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். ஊர்ப்பொதுமக்கள் அடங்கிய பேரவையால் குடவோலை முறை மூலம் இத்தேர்தல்
நடைபெறும். பேரவையினர் பெருமக்கள் என அழைக்கப்பட்டனர்; உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்
அல்லது ஆளும் கணத்தார் என அழைக்கப்பட்டனர்.
இவ்வுறுப்பினர்கள் மூன்று வாரியங்களாகப்
பிரிக்கப்படுவர். சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் என்பன அவை. சம்வத்ச
வாரியமும் தோட்ட வாரியமும் தலா 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஏரிவாரியம் 6 உறுப்பினர்களைக்
கொண்டது.
இம்முப்பது உறுப்பினர்களுக்குள் 12 பேர்
குடவோலை முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுள் 6 பேர் பஞ்சவாரிய
உறுப்பினராகவும், 6 பேர் பொன்வாரிய உறுப்பினராகவும் கருதப்படுவர்.
உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும்.
இவர்கள் எவ்வித ஊதியமும் இன்றி இவ்வோராண்டு காலம் பணிபுரிவர். குற்றம் புரிபவர்கள்
இடையிலேயே விலக்கப்படுவர். அவ்விடத்திற்கு உடனடியாகக் குடவோலை வாயிலாக ஓர் உறுப்பினர்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒருமுறை வாரிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
மீண்டும் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினர் ஆக இயலாது. சம்வத்சர வாரியம் இவ்விதியினின்று விலக்குப்
பெறுகிறது. கல்வியிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்களே இவ்வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாரிய உறுப்பினர்கள் பிற வாரியங்களில் உறுப்பினராக இருந்து பட்டறிவு பெற்றவராக இருத்தல்
வேண்டும் என்பது பொதுவிதி.
உறுப்பினர் ஆதற்கு
உரிய தகுதிகள்
i.
ஊரில் உள்ள ஆண்மக்கள் அனைவரும் ஊரவையில் உறுப்பினர்
ஆகும். பொதுத்தகுதி உடையவர்கள்.
ii.
சொந்த மனையில் வீடு கட்டிக் குடியிருப்பவர்கள்
iii.
காணிக்கடன் (நிலவரி) செலுத்த கால்வேலி
நிலம் உடையவர்கள்
iv.
சிறந்த கல்வி அறிவு உடையவர்கள்.
v.
அறநெறி பிழையாமல் தூயவழியில் பொருள் ஈட்டியவர்கள்.
vi.
35 வயதுக்கு மேல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்
vii. 3
ஆண்டுகளுக்கு எந்த வாரியத்திலும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் ஆகியோர்
உறுப்பினராகும் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
உறுப்பினர் ஆகும்
தகுதியை இழந்தவர்கள்
உறுப்பினராய் இருந்து இறுதியில் கணக்கு
காட்டாதவர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், கூடத்தகாதவர்களோடு கூடிக் கெட்டவர்கள்,
கள்ளக் கையெழுத்திட்டவர்கள், கையூட்டு வாங்கியவர்கள், ஊருக்கு துரோகம் செய்தவர்கள்
ஆகியோர் உறுப்பினர் ஆகும் தகுதியை வாழ்நாள் முழுதும் இழந்தவர்கள் ஆவர்.
தேர்தல் முறை
உறுப்பினர்களின் தேர்தல் அரசு ஆணை பெற்ற
அலுவலர் ஒருவரால் மேற்பார்வையிடப்பட்டது. உறுப்பினர் தேர்தலின்போது ஊர்மக்கள் அடங்கிய
பேரவையினரின் வருகை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
முன்னர்க் குறித்த தகுதிகளையுடைய பேரவையினரின்
பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகள் ஒரு குடத்தில் இடப்பட்டிருக்கும். ஒன்றும் உணராத சிறுவன்
ஒருவனை ஓர் ஓலையை எடுக்கச் சொல்லி அதை நடுவர் கையில் கொடுப்பர். வெற்றுக்கையை விரித்துக்
காட்டியபின் நடுவர் அதை வாங்கி ஓசையுடன் வாசிப்பார். பிறகு அவர் அக்குடும்பிற்குரிய
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்படுவார். இங்ஙனம் எல்லக் குடும்புகளுக்கும்
உரிய உறுப்பினர் தேர்தல் நடைபெறும்.
ஊரவை கூடும் இடமும்
காலமும் கூட்டும் முறையும்
அவையின் செயற்பாட்டிற்கெனத் தனி இடங்கள்
ஒதுக்கப்பட்டிருந்தன. மண்டபம், மன்றம், மரநிழல் ஆகிய இடங்களில் கூடுவதும் வழக்கில்
இருந்தது. அவை கூடும் இடத்தையும் காலத்தையும் கொம்பு ஊதியும் முரசு அறைந்தும் தெரிவிக்கும்
மரபு காணப்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரங்கலிலேயே அவை கூடியது.
ஊரவை அலுவலர்கள்
ஊரவையில்
ஊதியம் பெற்றுப் பணிபுரியும் அலுவலர்கள் இருந்தனர். அவர்கள்
i. நடுவர் - நியாயத்தார்.
ii. கரணத்தார்
- கணக்கு எழுதும் பொறுப்புள்ளவர்.
iii. பாடிக்காப்பான்
- ஊரில் கலகம், திருட்டு ஆகியன நிகழாதவாறு காப்பவர்.
iv. தண்டுவான்
- நிலவரிகளையும் பிற வரிகளையும் வசூலிப்பவர்.
v. அடிகீழ் நிற்பான்
- குற்றவேல் செய்பவன்.
மேலும்
'தண்டல்' என்ற ஊரவை மேற்பார்வையாளரும் 'கிழார்' என்ற ஊர்த்தலைவரும் இருந்தனர்.
ஊரவைக்குரிய
செலவின் பொருட்டு 'ஊரிடுபாடு' என்ற வரி வசூலிக்கப்பட்டது.
ஊரவையின் பணிகள்
வாரியங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனிக்
கடமைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. குடிமக்கள் கொண்டு வரும் வழக்குகளுக்குத் தீர்ப்பளிப்பதும்,
அறநிலையங்களைக் கண்காணிப்பதும் சம்வத்சர வாரியத்தின் பணிகள்.
நீர்நிலைகளைப் பாதுகாத்தலும், விளைவுக்கு
நீர்ப் பாய்ச்சுதலும் ஏரிவாரியத்தின் பணிகள்.
புன்செய் நிலங்களைப் பாதுகாப்பது தோட்ட
வாரியத்தின் பணி.
பொன்
நாணயங்களை ஆராய்வது பொன் வாரியத்தின் பணி.
தகுதியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது
குடும்பு
வாரியத்தின் பணி.
ஊரவையின் உரிமைகள்
பேரரசின் இடையீடு இன்றித் தன்னாட்சியோடு
இவ்வவைகள் இயங்கின. நிலவருவாயைக் கணக்கிடுதல், வரி விகிதங்களை அறுதியிடுதல், பொதுச்
சொத்துக்களைக் கண்காணித்தல், கோவில்களின் தேவைகளை நிறைவு செய்தல் ஆகியன ஊரவைக்குரிய
உரிமைகளாக இருந்தன. ஊர்ப்புறம்போக்கு நிலங்களையேயன்றித் தனிப்பட்டோர் நிலங்களையும்
கண்காணிக்கும் உரிமையை இவர்கள் பெற்றிருந்தனர். நிலவிற்பனை, நிலதானம் போன்ற உரிமை மாற்றங்களுக்கு
இச்சபையின் இசைவைப் பெற வேண்டும்.
வரிப்பாக்கி செலுத்தாதவர்களின் நிலங்களைப்
பறிமுதல் செய்யவும், அவற்றை விற்று வரிநிலுவைக்கு ஈடுகட்டவும், ஊர் வழக்குகள் மூலம்
குற்றம் செய்தவர்களாக நிரூபிக்கப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் ஊரவையினர் உரிமை
பெற்றிருந்தனர்.
அரசுடன் ஊரவை
கொண்ட தொடர்பு
அரசின் இசைவு பெறாமல் வரியை மாற்றவோ, சேர்க்கவோ
ஊரவைக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் வரிக்கொடுமைகள் தாங்க முடியாமல் இருந்தபோது,
ஊரவையினரிடம் பொதுமக்கள் முறையிடுதலும், நியாய வரிகளுக்கு மேல் அரசுக்குத் தரவேண்டியதில்லை
என ஊரவையினர் தீர்மானம் இடுதலும் கூடக் காணப்படுகிறது. மேலும் நிலத்தை அளந்து நிலவளம்,
நிலத்தரம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் முன் அரசு அவ்வூரவை உடன்பாட்டைப் பெற வேண்டும் என
விதி இருந்ததாக அறிகிறோம்.
முடிவுரை
1. ஊரவை
உறுப்பினர் ஆதற்குரிய கட்டுப்பாடுகள் கடுமையானவையாக இருந்தன. குற்றம் புரிந்து கழுவாய்
தேடியவர்களுக்கும் மன்னிப்பு அளிக்கும் மரபு அங்கு காணப்படவில்லை. அவையின் தூய்மையையும்
தரத்தையும் காப்பது அதன் நோக்கமாகலாம்.
2. ஊரவையின்
அதிகார வரம்புகள் எல்லை மீறி நின்றன. ஊர்த்தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்முன் அரசு
ஊரவையின் முன் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. அரசின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும்,
ஒரு வரம்புக்குள் நிறுத்தவும் அவையினர் உரிமை பெற்றிருந்தனர். ஆனால் ஊரவையின் நடவடிக்கைகளில்
அரசு தலையிட்டமைக்குச் சான்று இல்லை.
3. தேர்தல்
முறையில் கறைபடாநெறிமுறை பின்பற்றப்பட்டது. உறுப்பினர் தகுதிக்கு வைக்கப்பட்டிருந்த
கட்டுப்பாடுகளும், உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த மிகைப்பட்ட உரிமைகளும் நேர்மையான
வாழ்க்கையின் மூலமே இச்சமுதாய மதிப்பைப் பெறமுடியும் என்ற உள்ளுணர்வை உருவாக்கியிருந்தன.
இதன் மூலம் ஊரவை நேர்மையான சமுதாய வாழ்விற்கு அடிப்படை இட்டுத் தந்தது.
4.
சோழர்காலச்
சமயநிலை குறித்து விளக்குக.
முன்னுரை
பல்லவர் காலத்தைப் போன்று சோழர்காலத்தில்
சமய வெறுப்புகள் மிகுதியாகக் காணப்படவில்லை. பேரரசர்கள் சைவ சமயம் சார்ந்து விளங்கினும்,
சமயப் பெருந்தன்மை கொண்டு விளங்கினர். வைணவம், சமணம், பெளத்தம் ஆகிய சமயக் கோவில்களுக்கும்
மடங்களுக்கும் அவர்கள் நிவந்தம் அளித்துள்ளதைக் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது.
இந்து சமயநிலை
பல்லவர் காலத்தில் தோன்றிய சைவ வைணவ சமய
மறுமலர்ச்சி சோழர் காலத்திலும் தொடர்ந்து வந்தது. எனினும் இக்கால இந்து சமய அடியார்கள்
பக்தி இயக்கத்தின் வாயிலாகப் பொதுமக்களின் மனத்தைக் கவரும் முயற்சியில் பெரிதும் ஈடுபடவில்லை.
சமயச்சடங்குகள், வாதங்கள், தத்துவச் சிந்தனைகள், இலக்கியப்படைப்பு ஆகியவற்றில் இவர்கள்
ஈடுபாடு கொண்டிருந்தனர். இதனால் சமய இலக்கியத் தொண்டு ஒருபுறமும், அறிவுநிலையில் இறைவனை
உணரும் வேட்கையால் தோன்றிய தத்துவச் சிந்தனை மறுபுறமும் காணப்பட்டன. முன்னவர்கள் இலக்கியப்
படைப்புக்களைப் பெருக்கினர். பின்னவர்கள் சமய மடங்களைத் தோற்றுவித்தனர்.
சோழர்காலச் சமய அடியார்களை அவர்களின் அணுகுமுறைகளைக்
கொண்டு இருவகைப்படுத்தலாம்.
i.
தத்துவச் சிந்தனையாளர்கள்
ii.
இலக்கியப் படைப்பாளர்கள்
அத்துவைதம்
தத்துவச் சிந்தனையாளர்களின் முன்னோடி சங்கரர்.
"ஆன்மாவும் உலகமும் மாயை; பரம்பொருள் ஒன்றே
எங்கும் நிறைந்திருப்பது. உயிர் அறியாமையை விட்டு உயரும்போது அது பரம்பொருளில் இரண்டறக்
கலந்துவிடும்" என்பது சங்கரரின் கொள்கை. பரம்பொருளும் ஆன்மாவும் ஒரே பொருளால்
ஆனவை என இவர் குறிப்பிடுவதால் இவரின் கொள்கை அ+துவைதம் (இரண்டற்றது) எனப்பட்டது. மேலும்
இவர் உலகை மாயை என்று குறிப்பிடுவதால் இவரது கொள்கை மாயாவாதம் என்றும் அழைக்கப்பட்டது.
விசிட்டாத்துவைதம்:
வைணவ ஆச்சாரியர்களுள் தலைசிறந்தவராகக்
கருதப்படுபவர் இராமானுசர். இவரது கொள்கை விசிட்டாதுவைதம் என அழைக்கப்பட்டது. இக்கொள்கை
சங்கரரின் அத்துவைதக் கொள்கையை மறுக்கும் நோக்கம் கொண்டவை. "பரம்பொருளும் ஆன்மாவும் ஒரே பொருளால் ஆனவை. பரம்பொருளில் இருந்து வெளிப்பட்ட
ஆன்மாவை அவ்விறைவன் தானே வந்து ஆட்கொள்வான்"
என்பதே இராமானுசரின் கொள்கை. இந்தியாவில் வைணவம்
தழைக்க இவர் ஆற்றிய அரும்பணிகளே முக்கியக் காரணம். சாதியைக் கடந்து மனிதத்தை நிலைநிறுத்த
முயன்றவர் இவர்.
மத்துவரின் துவைதம்:
"ஆன்மாவும்
இறைவனும் இருவேறுபட்ட உணமைகள். உலகமோ ஆன்மாவோ மாயைகள் அல்ல; அவை உண்மையானவை. அவற்றை
இறைவன் ஆள்கிறான்" என்பது மத்துவரின் கொள்கை. சங்கரரின்
அத்துவைதக் கொள்கையை மத்துவர் மறுக்கிறார்.
சைவசித்தாந்த
சாத்திரங்கள்:
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு.
இச்சாத்திரங்களுக்கு மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம் அடிப்படை நூல் ஆகும். பதினான்கு
சாத்திரங்களுள் திருவுந்தியாரும், திருக்களிற்றுப்பாடியாரும் சிவஞான போதத்திற்கு முற்பட்ட
நூல்கள். சிவஞான போதத்தின் வழிநூல் சிவஞான சித்தியார். பரபக்கம், சுபபக்கம் என இரு
பிரிவுகளைக் கொண்டது இது. பதினான்கு சாத்திரங்களுள் உமாபதி சிவாச்சாரியார் மட்டும்
8 நூல்களை இயற்றியுள்ளார்.
சைவ சித்தாந்தத்தின் மூன்று மூல உண்மைகள்
பதி, பசு, பாசம் என்பன ஆகும். பதி இறைவன்;
பசு உயிர்; பதியைப் போல பசுவும் பாசமும் என்றும் நிலைத்து நிற்பவை. உயிரையும் இறைவனையும்
சேரவிடாமல் தடுப்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களே. இம்மலங்களில்
இருந்து பசு விடுதலை பெறும்போது அது பதியை அடைகிறது; வீடுபேறு பெறுகிறது. இறையருளே
பாசத்திலிருந்து பசுவை விடுவிக்கின்றது.
இலக்கியப் படைப்புகள்
சைவத் திருமுறைகள்:
முதல் இராசராசனின் உதவியுடன் நம்பியாண்டார்
நம்பியால் தொகுக்கப்பட்டவை பன்னிரு திருமுறைகள்.
திருமுறை |
நூல் |
பாடியவர் |
1,2,3ஆம் திருமுறைகள் |
தேவாரம் |
திருஞானசம்பந்தர் |
4,5,6ஆம்
திருமுறைகள் |
தேவாரம் |
திருநாவுக்கரசர். |
7ஆம் திருமுறை |
தேவாரம் |
சுந்தரர். |
8ஆம் திருமுறை |
திருவாசகம், திருக்கோவையார் |
மாணிக்கவாசகர் |
9ஆம் திருமுறை |
திருவிசைப்பா,திருப்பல்லண்டு |
ஒன்பது பேர் பாடியது. |
10ஆம் திருமுறை |
திருமந்திரம் |
திருமூலர். |
11ஆம் திருமுறை |
|
பன்னிருவர் பாடியது. |
12ஆம் திருமுறை |
பெரியபுராணம் |
சேக்கிழார். |
முதல் எட்டு
திருமுறைகளைத் தந்த சமயக்குரவர் நால்வரின் சமயத்தொண்டும் இலக்கியப்போக்கும் முன்னர்க்
குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்பதாம் திருமுறையின் பல பாடல்கள் தில்லையைப் பற்றிப் பாடுதல்
காண்கிறோம்.
பத்தாம் திருமுறையான திருமந்திரம் அறநெறிக்
காலத்தில் எழுந்த தனது காலச் சூழலுக்கேற்ப கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை,
பெரியாரைத் துணைக்கோடல், பொறையுடைமை, வாய்மை எனச் சமயச் சார்பற்ற பொது அறங்களையும்
எடுத்துரைக்கின்றது.
நம்பியாண்டார் நம்பி, பட்டினத்தடிகள் போன்ற
12 சைவ அடியார்களது நூல்களின் தொகுப்பு பதினொராம் திருமுறை.
63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள் ஆகியோரின்
சமயத் தொண்டையும் சமய ஈடுபாட்டையும் விளக்கி நிற்கும் சைவக் காப்பியம் 12ஆம் திருமுறையான
பெரியபுராணம்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நாதமுனிகளால்
தொகுக்கப்பட்டது. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய இன்னிசைப் பாடல்கள் நிறைந்த தொகுப்பு இது.
சைவ அடியார்களுக்கு தலைக்கோவில் தில்லை;
திருமாலில் அடியார்களுக்குத் தலைக்கோவில் திருவரங்கம்.
புறச்சமயங்களின்
நிலை:
சோழப் பேரரசர்கள் சமயப் பெருந்தன்மை கொண்டு
புத்த, சமண மடங்களுக்கு கொடையளித்தனர். முதல் இராசராசன் ஆனைமங்கலம் என்ற ஊரைப் பள்ளிச்சந்தமாக
அளித்தான். முதல் இராசேந்திரன் கங்கைக்கரையில் வாழ்ந்த சமணர்களைக் காஞ்சியில் குடியேற்றினான்.
முதல் குலோத்துங்கன் நாகப்பட்டினப் புத்த விகாரத்திற்கு இறையிலி நிலங்கள் அளித்தான்.
தஞ்சை பெரிய கோவில் தூணில் புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில் புத்தர், திருமாலின் அவதாரமாகவே எற்றுக்கொள்ளப்பட்டார்.
முடிவுரை
சோழர் காலத்தில் வைணவத்தை விட சைவமும்,
பெளத்தத்தை விட சமணமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. சைவம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு
அது அரசு சார்பு பெற்றிருந்தமை காரணமாகலாம். சமணம் செல்வாக்கு பெற்றிருந்தமைக்கு, அது
தமிழ் இலக்கியத் தொண்டில் ஈடுபட்டமை காரணமாகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக