சனி, 13 பிப்ரவரி, 2021

தமிழக வரலாறும் பண்பாடும் : 2 - வினா விடை வங்கி - 1

 

தமிழக வரலாறும் பண்பாடும் – II

வினா விடை வங்கி - அலகு I

சார்புப்பாடம் – 2 – தமிழக வரலாறும் பண்பாடும் – II

பாடத்திட்டம்

அலகு 1            -     சோழப் பேரரசின் தோற்றம் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

                                   

அலகு 2           -        சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம்

 

அலகு 3       -        பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் - மதுரை நாயக்கர் – தமிழகத்தில்

13ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையில் சமூகநிலை

 

அலகு 4            -     ஐரோப்பியரின் வரவு - 19-ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூகநிலைகள்

 

அலகு 5            -     இருபதாம் நூற்றாண்டில் தமிழகம்

 

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.   பிற்காலச் சோழப் பேரரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது? தம் வெற்றியின் நினைவாக அவர் எழுப்பிய கோயில் எது?

பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவர் விஜயாலய சோழன். அவர் தஞ்சையைக் கைப்பற்றித் தன் வெற்றியின் சின்னமாக "நிசும்பசூதினி" என்ற கோயிலை எழுப்பினார்.

 

2.   திருப்புறம்பியப்போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

திருப்புறம்பியப்போர் பல்லவருக்கும் பாண்டியருக்குமிடையே நடைபெற்றது. இப்போரில் ஆதித்த சோழனும் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியும் பல்லவருடன் இணைந்து போரில் ஈடுபட்டனர்.

 

3.   முதலாம் ஆதித்தன் வென்ற பல்லவ மன்னன் யார்? அவனை எப்படி வென்றான்?

உயர்ந்ததொரு யானையின் மீது அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த அபராசித பல்லவனை ஆதித்தன் வாளால் ஒரே வீச்சில் கொன்றான்.

 

 

4.   முதலாம் ஆதித்தன் பெற்ற வெற்றிக்குத் துணை நின்றவர் யார்? அவன் பெற்ற விருது என்ன?

முதலாம் ஆதித்தன் பெற்ற வெற்றிக்கெல்லாம் அவனுக்கு கங்கர்கள் துணை நின்றனர். ஆதித்தன் 'இராசகேசரி' என்ற விருது ஒன்றைப் பெற்றான்.

 

5.   முதலாம் ஆதித்தனின் மக்கள் யாவர்?

பல்லவ இளவரசிக்குப் பிறந்த மகன் முதலாம் பராந்தகன்.

இராட்டிரகூட இளவரசிக்குப் பிறந்த மகன் கன்னரத் தேவன்.

 

6.   விக்கியண்ணன் - குறிப்பு வரைக.

விக்கியண்ணன் என்பவர் சேர மன்னன் தாணுரவியின் படைத்தலைவனாக அமர்ந்திருந்து சோழனுடைய கொங்குநாட்டுப் போர்களில் அம்மன்னனுக்குப் படைத்துணை வழங்கியுள்ளான். இவனைப் பாராட்டி ஆதித்தச் சோழனும் சேர மன்னனும் 'தவிசு, சாமரை, சிவிகை, கோயில், போனகம், காளம், ஆண் யானை' ஆகிய விருதுகளையும் செம்பியன் 'தமிழவேள்' என்ற பட்டப்பெயரையும் வழங்கியுள்ளனர்.

 

7.   முதலாம் பராந்தகன் மக்களுக்கு ஆற்றிய நன்மைகள் யாவை?

-    ஊராட்சி முறைகளைத் திருத்தியமைத்து, அதனுடைய நடைமுறை விதிகளையும் அறுதியிட்டான்.

-    பாசனக் கால்வாய்கள் பல வெட்டிஉழவின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டான்.

-    இரணியகருப்பம், துலாபாரம் பல புரிந்தான். பிராமணருக்குப் பல பிரமதேயங்கள் வழங்கினான்.

-    தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான். பல சிவன் கோயில்களையும் எழுப்பினான்.

8.   திருவூறல் எனப்படும் ஊர் எது? ஏன்?

தக்கோலத்துக்கு திருவூறல் என்றொரு பழம்பெயர் உண்டு. இவ்வூரில் உள்ள உமாபதி ஈசுவரர் கோயிலின் நந்திச் சிலையொன்றின் வாயிலிருந்து எப்பொழுதும் தண்ணீர் வடிந்துகொண்டே இருக்கும். எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்ததால் இவ்வூர் திருவூறல் என்னும் பெயர் பெற்றது.

9.   முதலாம் பராந்தகனின் மக்கட்பெயர்களைக் கூறுக.

மகன்கள்: இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், அரிகுலகேசரி, உத்தமசீலன்

மகள்கள்: வீரமாதேவி, அநுபமா.

 

10. முதலாம் பராந்தகனை அடுத்து பட்டத்திற்கு வந்த மன்னர்கள் இருவரைக் குறிப்பிடுக.

கண்டராதித்தன், அரிஞ்சயன்.

 

11. முதலாம் பராந்தகனுக்குத் துணை நின்றோர் யாவர்?

கேரள மன்னன், பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளிர்.

 

12. வாண கோவர்கள் - குறிப்பு வரைக.

வாணகோவர்கள் - பழமையான அரச மரபினர்; இவர்களது நாடு – பெரும்பாணப்பாடி; வாதாபி சாளுக்கியர்களின் ஆதிக்கம் ஓங்கி வளரவே இவர்களின் அரசியல் செல்வாக்கும் ஆட்சி எல்லைகளும் சுருங்கின. மூன்றாம் விக்கிரமாதித்தனே இறுதியாக அரசாண்டவன்.

 

13. பூதுகன் யார்? அவனுக்கு வழங்கப்பட்ட பரிசு யாது?

பூதுகன் இராஷ்டிரகூடப் படைத்தலைவன் ஆவான். இவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானையின்மேல் துள்ளியேறி இராசாதித்தனைக் கத்தியால் குத்திக் கொன்றான். இராஷ்டிரகூட மன்னன் வென்றான். அவனும் தன் படைத்தலைவனான பூதுகன் தனக்காற்றிய அரிய தொண்டுக்காகவும் அவன் துணிவைப் பாராட்டியும் அவனுக்கு வனவாசி 12,000, வெள்வோணம்300 ஆகிய நாடுகளை வழங்கித் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்.

 

14. ஒன்பதாம் திருமுறையில் பாடல் பாடிய சோழ அரசன் யார்? அவர் மனைவி பெயர் என்ன?

ஒன்பதாம் திருமுறையில் பாடல் பாடிய சோழ அரசன் கண்டராதித்தர். அவர் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து சைவ சமய வளர்ச்சிக்காகப் பல அரிய தொண்டுகள் புரிந்துள்ளனர். செம்பியம் மாதேவி பல கோயில்களைக் கட்டினான்.

15. கண்டராதித்தனின் மகன் யார்?

மதுராந்தக உத்தமச் சோழன்.

 

16. 'பொன்மாளிகை துஞ்சிய தேவன்' யார்? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் என்ன?

சுந்தரச் சோழனே 'பொன்மாளிகை துஞ்சிய தேவன்' ஆவார். காஞ்சிப்புரத்தில் தன் பொன்மாளிகையில் உயிர் நீத்ததால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

 

17. சுந்தரச் சோழனின் ஈழ வெற்றிக்குக் காரணமான குறுநிலமன்னன் யார்?

கொடும்பாளூர்க் குறுநிலமன்னன் பராந்தகன் சிறிய வேளான்.

18. வீரசோழியம் இலக்கண நூலில் புகழப்படும் அரசன் யார்?

வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர் சுந்தரச் சோழனுக்குப் புகழ் மாலைகள் சூட்டியுள்ளார். இம்மன்னனுக்கும் தென்னாட்டுப் பெளத்த சங்கத்துக்குமிடையில் தொடர்ந்து நட்புறவு வளர்ந்டிருந்தமை தெரிகின்றது.

 

19. மேலைச் சளுக்கருக்கு முழு அரசுரிமையைப் பெற்றுத் தந்தவன் யார்?

இரண்டாம் தைலப்பன்.

 

20. முதலாம் இராசராசனின் பெற்றோர் யாவர்?

தாய்: மலையமான் பரம்பரையில் வந்த வானவன்மாதேவி; தந்தை: சுந்தரச் சோழன்.

 

21. இராசராச சோழனின் பட்டப் பெயர்கள் (அல்லது) விருதுகள் யாவை?

மும்முடிச் சோழன், சோழ மார்த்தாண்டன், சயங்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்ககுலகாலன், சிவபாத சேகரன் என்பவை இராசராசன் ஏற்றுக்கொண்ட விருதுகளில் சிலவாகும்.

 

22. காந்தளூர் அறச்சாலையின் சிறப்பு யாது?

காந்தளூர்ச் சாலை என்பது மாணவர்கள் தங்கியிருந்து, உணவுண்டு கல்வி பயின்று வந்த இடமாகும். தற்காலத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இச்சாலைகளை ஒப்பிடலாம். பிறருடைய தலையீடு ஏதுமின்றியே இச்சாலைகள் நடைபெற்று வந்தன. இச்சாலையில் கல்வி பயிற்றிய ஆசிரியர்கள் சேர, சோழ, பாண்டியரின் ஆட்சியில் பங்குகொள்ளும் பயிற்சியும் அறிவும் பெற்றவர்களாக இருந்தனர். இச்சாலையில் வேதங்கள், வியாகரணங்கள் மட்டுமின்றி அரசியலிலும் போர்களிலும் பெறவேண்டிய பயிற்சியை மாணவர்கள் சுவடிகளின் வாயிலாகவும் நடைமுறையிலும் பெற்றனர்.

 

23. இராசராசனின் மெய்க்கீர்த்திகள் எவ்வாறு அடைமொழியுடன் உள்ளன?

இராசராசனின் மெய்க்கீர்த்திகள் அனைத்தும் அம்மன்னன் பெயருக்கு முன்பு "காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய" என்னும் அடைமொழியைக் கொண்டே விளங்குகின்றன.

 

24. தமிழ்நாட்டில் மெய்க்கீர்த்தி எழுதும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

முதலாம் இராசராச சோழன்.

 

25. இராசராசன் நிலங்களை எத்தனை வகையாகப் பிரித்தான்? அவை யாவை?

இராசராசன் நிலங்களை மூன்று வகையாகப் பிரித்தான். அவை

i.              விளை நிலம் ii. தரிசு நிலம் iii. இறையிலி நிலம்.

 

26. முதலாம் இராசராசன் கட்டிய புகழ்மிக்க கோவில் எது?

தஞ்சை பெரிய கோவில் அல்லது இராசராசேச்சுரம்.

 

27. தஞ்சைப் பெருவுடையார் மீது பாடல் பாடியவர் யார்?

தஞ்சைப் பெருவுடையார் மீது கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்று ஒன்பதாம் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

28. இராசேந்திரனின் விருதுப் பெயர்கள் யாவை?

கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பஞ்சவன் மாராயன், முடிகொண்டான், பண்டித சோழன் ஆகியன.

 

29. இராசேந்திரன் எழுப்பிய கோயிலின் பெயர் யாது?

வட இந்திய திக்குவிசயத்தின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் கோயிலை எழுப்பினான்.

 

30. முதலாம் இராசேந்திரனின் பெற்றோர் யாவர்?

தாய்: வானவன் மகாதேவி; தந்தை: இராசராசச் சோழன்

.

31. கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்றழைக்கப்படுபவர் யார்? ஏன்?

முதலாம் இரசேந்திர சோழனே கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்றழைக்கப்படுகிறார். கங்கை வரையுள்ள வட நாடுகளையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டதால் இப்பெயர்கள் அவருக்கு ஏற்பட்டன.

 

32. முதலாம் இராசேந்திரனின் மக்கட்பெயர்களைக் கூறுக.

மகன்கள்: இராசாதிராச சோழன், இராசேந்திர சோழன், வீரராசேந்திர சோழன்.

மகள்கள்: அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவி.

 

33. சுங்கம் தவிர்த்த சோழன் யார்?

முதலாம் குலோத்துங்க சோழன்.

34. முதலாம் குலோத்துங்கனின் சிறப்புப் பெயர்கள் யாவை?

இராசகேசரி, பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி, சர்வலோகாசிரயன், விஷ்ணுவர்த்தனன், பராந்தகன், பெருமானடிகள், விக்கிரம சோழன், குலசேகரப் பாண்டிய குலாந்தகன் ஆகியன.

 

35. விக்கிரமச் சோழன் பெற்ற விருதுகள் இரண்டினைக் குறிப்பிடுக.

விக்கிரமச் சோழனின் விருதுகளில் ஒன்றான 'தியாக சமுத்திரம்' என்பது அவன் வள்ளல் தன்மையையும், அகளங்கன் என்பது அவன் வாழ்க்கைத் தூய்மையையும் எடுத்துக் காட்டுகின்றன.

 

36. இரண்டாம் சோழன் காலத்து வாழ்ந்த புலவர்கள் யாவர்?

சேக்கிழார், ஒட்டகூத்தர்.

 

37. முத்தமிழ்த் தலைவன் என்னும் விருது பெற்ற அரசர் யார்?

இரண்டாம் இராசராசன்.

 

38. சோழ ராச்சிய பிரதிஷ்டாபனாசாரியன் யார்?

சோழநாட்டைக் காடவனிடமிருந்து மீட்டு நிலைநிறுத்தின தன் பெருமையைப் பாராட்டிக் கொள்ளும் வகையில் போசள மன்னன் இரண்டாம் நரசிம்மன் "சோழ ராச்சிய பிரதிஷ்டாபனாசாரியன்" என்னும் விருதுப் பெயரைப் புனைந்தான்.

39. ஆனைமேற் றுஞ்சிய மன்னன் யார்?

கொப்பம் என்ற இடத்தில் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் சோழர்கள் வெற்றி பெற்றனர். ஆனாலும் இராசாதிராசன் வீரமரணம் அடைந்து "ஆனைமேற் றுஞ்சிய மன்னன்" என்னும் பெயர் பெற்றான்.

40. வீரராசேந்திரன் ஏற்ற விருதுகளைக் குறிப்பிடுக.

சகலபுவனாசிரயன், மேதினிவல்லபன், மகாராசாதிராசா, ஆகமவல்ல குலகாலன், பாண்டிய குலாந்தகன், இராசாசிரயன், வல்லப வல்லபன், வீரசோழன், கரிகாலன்.

 

41. வீரராசேந்திரன் காலத்தில் இயற்றப்பட்ட நூல் யாது?

வீரராசேந்திரன் காலத்தில் இயற்றப்பட்ட நூல் வீரசோழியம் ஆகும். இவ்விலக்கண நூலை இயற்றியவர்: புத்தமித்திரர்.

 

42. சோழர் வரலாறு குறித்த இலக்கியங்கள் யாவை?

கலிங்கத்துப் பரணி, மூவருலா, விக்கிரமச்சோழன் உலா.

 

43. சோழப் பேரரசை வீழ்த்திய பாண்டிய மன்னன் யார்?

மாறவர்ம சுந்தர பாண்டியன்.

 

44. பிற்காலச் சோழர்கள் எழுப்பிய கோவில்களுள் இரண்டினைக் குறிப்பிடுக.

முதலாம் ஆதித்தன் கட்டிய விஜயாலய சோழேச்சுரம், கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில், முதல் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், முதல் இராசேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்சுரம் போன்றவை.

 

45. முத்தரையர்களின் தலைநகரம் எது?

விசயாலயச் சோழனது வெற்றிக்கு முன்பு தஞ்சாவூர்ப் பகுதி முழுவதும் முத்தரையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

 

46. திருப்புறம்புயப் போரில் பல்லவ மன்னனுக்குத் துணை நின்றவர்கள் யாவர்?

கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி, சோழ மன்னன் முதலாம் ஆதித்தன்.

 

47. வீரசோழன் என்ற விருது ஏற்றவன் யார்? ஏன்?

இராட்டிரக்கூட மன்னனுடனும் அவனது துணைவர்களுடனும் முதலாம் பராந்தகன் நடத்திய போரில் அவன் பெரும்வெற்றி கண்டான். எனவே வீரசோழன் என்ற விருதை ஏற்றான்.

 

48. இராசராசன் தன் மகன் இராசேந்திரனுக்கு வழங்கிய விருதின் பெயர் என்ன?

இராசராசன் தன் மகன் இராசேந்திரன் கொண்ட வெற்ற்களைப் பாராட்டி வேங்கி மண்டலத்துக்கும் கங்க மண்டலத்துக்கும் அவனை "மகாதண்ட நாயகனாகப்" பதவியில் உயர்த்தினான்."பஞ்சவன் மாராயன்" என்ற விருது ஒன்றையும் வழங்கினான்.

 

49. இராசராசச் சோழன் தன் மகள் குந்தவையை யாருக்கு மணமுடித்துக் கொடுத்தான்?

இராசராசச் சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் சக்திவர்மனுடைய தம்பியான விமலாதித்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.

 

50. இராசராசன் பொலன்னருவைக்குச் சூட்டிய பெயர் யாது?

இராசராசன் ஈழத்தை வென்ற பிறகு ஆயிரம் ஆண்டுகள் தலைநகராக இருந்த அநுராதபுரத்தைத் தாக்கி அழித்துவிட்டு பொலன்னருவையைத் தலைநகராக்கினான். அதற்கு "ஜனநாத மங்கலம்" என்றும் பெயர் சூட்டினான்.

 

51. முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றி குறித்துப் புகழும் நூல் எது? ஆசிரியர் யார்?

செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியாகும்.

 

ஏழு மதிப்பெண் வினாக்கள்

1.   விசயாலயன் - குறிப்பு வரைக.

விசயாலயன் காலத்துக்கு முன்னர் சோழ மண்டலம் பல்லவ, பாண்டியர் ஆதிக்கத்தின் கீழ் பிரிந்துக் கிடந்தது. விசயாலயன் பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசனாக இருந்தான். இதேபோல் முத்தரையர்களும் பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர்; இவர்கள் செந்தலை அல்லது நியமம் என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையேயான பகுதிகளை ஆண்டு வந்தனர்.

இச்சூழலில் பேரரசர்களாக இருந்த பாண்டியருக்கும் பல்லவருக்கும் இடையே போர் மூண்டது. இப்போரில் சோழர்கள் பல்லவர் பக்கமும் முத்தரையர்கள் பாண்டியர் பக்கமும் இருந்தனர். நடைபெற்ற பெரும்போரில் பாண்டியர் கூட்டணி தோற்றது; பல்லவர் கூட்டணி வென்றது. இவ்வெற்றியின் நினைவாக "நிசும்பசூதினி" என்னும் துர்க்கைக் கோயிலைக் கட்டினான்.

பல்லவ மன்னன் முத்தரையர்களிடம் கைப்பற்றிய பகுதிகளைச் சோழர்களுக்கு அளித்துவிட்டான்; இதனால் சோழர்கள் பலம் பெற்றனர். இதுவே பிற்காலச் சோழப் பேரரசின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது.

 

2.   முதலாம் ஆதித்தனின் வெற்றிச் சிறப்பினை எழுதுக.

திருப்புறம்பியம் போர்:

விசயாலயனை அடுத்து அவனது மகனான முதலாம் ஆதித்தன் (கி.பி. 871 முதல் 907 வரை) அரசனானான். அச்சமயத்தில் பல்லவருக்கும் பாண்டியருக்கும் இடையே திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பெரும்போர் நிகழ்ந்தது. இப்போரில் ஆதித்தன் பல்லவர்களுடன் இணைந்தான். போரில் பல்லவமன்னனான அபராசித வர்மன் ஆதித்தச் சோழனின் துணையுடனும் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி துணையுடனும் வென்றான். ஆதித்தன் தனக்குப் புரிந்த பேருதவியைப் பாராட்டும் வகையில் முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தந்த நாட்டுடன் தானும் சில ஊர்களை ஆதித்தனுக்குப் பரிசாக வழங்கினான். இப்போரில் முதலாம் பிருதிவிபதி வீரமரணம் அடைந்தான்.

சோழர் х பல்லவர்:

முதலாம் ஆதித்தன் அரசியல் ஆற்றலும் போர்த் திறமையும் நிறைந்தவன். சோழ நாட்டை விரிவுப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்; சோழநாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின் கீழ் இருந்துவந்ததைக் கண்டு ஆதித்தன் மனம் பொறுக்காமல் பல்லவருடன் போர் தொடுத்தான். போரில் உயர்ந்ததொரு யானையின் மீது அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த அபராசித பல்லவனை ஆதித்தன் வாளால் ஒரே வீச்சில் கொன்றான். பல்லவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். சோழ நாட்டெல்லை விரிவடைந்து வடக்கே இராஷ்டிரகூடரின் ஆட்சி வரம்பை எட்டியது.

சேர மன்னன் தாணுரவியுடன் ஆதித்தன் நல்ல நட்புறவு கொண்டிருந்தான். சேரனுடன் இணைந்து ஆதித்தன் கொங்கு தேசத்தையும் வென்றான். இவ்வாறு விசயாலயன் நிர்மாணித்த சோழர் ஆட்சியைச் சிறிது காலத்திற்குள்ளாகவே ஆதித்தன் பேரரசாக மாற்றிக் காட்டினான்.

 

3.   சோழப் பேரரசின் தோற்றம் குறித்து விளக்குக.

-       பல்லவர் + விசயாலயன் х வரகுணப் பாண்டியன் + முத்தரையர்;

-       விசயாலயன் வென்று தஞ்சையைக் கைப்பற்றல்.

-       திருப்புறம்பயப் போரில் பல்லவருக்குத் துணைநின்று ஆதித்தன் வெற்றி பெறல். இதற்காக அபராசித பல்லவன் சில நிலப்பகுதிகளை ஆதித்தனுக்கு வழங்கல்.

-       அபராசித பல்லவன் х ஆதித்த சோழன் போர்: பல்லவனைக் கொன்று தொண்டை நாட்டைச் சோழ நாட்டுடன் இணைத்தல்; ஆட்சி எல்லை விரிவாதல்.

-       சேர மன்னன் தாணுரவியுடன் ஆதித்தன் இணைந்து கொங்கு தேசத்தைக் கைப்பற்றல். இவ்வாறு சோழப் பேரரசு தோற்றம் பெற்று நாளும் வளர்ச்சியடைந்தது.

 

4.   இராசேந்திரன் வட இந்தியருடன் போரிட்டு வென்றமையை எழுதுக.

முதலாம் இராசேந்திரனின் வட நாட்டுப் படையெடுப்பு கங்கைப் படையெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இப்படையெடுப்பிற்கான காரணங்கள் பலவாறு ஊகிக்கப்படுகின்றன. இராசேந்திரன் தான் அமைத்த புதிய தலைநகரைத் தூய்மைப்படுத்த கங்கைப் பயணத்தை மேற்கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. கஜினிமுகமது கொடுத்து வந்த தொல்லைகளை ஒழித்துக் கட்டுமாறு போசராசன், காங்கேயன் ஆகிய மன்னர்கள் வேண்டியதற்கு இணங்க இராசேந்திரன் வடநாட்டின் மீது படையெடுத்தான் என்பர் கே.கே. பிள்ளை.

வடநாட்டுப் படையெடுப்பின்போது முதலில் சக்கரக் கோட்டமும், பின்னர் ஒட்டரதேயம், கோசலநாடு, தண்டபுத்தி, உத்தரலாடம், வங்காளம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. பின்னர் இராசேந்திரன் கங்கைக் கரையை அடைந்தான் என அவனது மெய்க்கீர்த்தி சுட்டுகிறது. இவ்வடநாட்டு வெற்றியை நினைவுகூரும் முகமாக இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி அதனைத் தனது புதிய தலைநகராக அமைத்துக் கொண்டான். மேலும் அந்நகரில் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நிகரான கலைநுணுக்கம் கொண்ட கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் கோவிலையும் கட்டுவித்தான்.

 

15 மதிப்பெண் வினாக்கள்

1.    பராந்தகன் சோழர் ஆட்சிக்கும் ஆட்சி விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக அமைந்ததை விவரி.

முன்னுரை:

தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்துவந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான். இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த இவனது மகன் பராந்தகன் தன் வாழ்நாளில் சோழ அரசைப் பேரரசாக மாற்றினான்.

முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி 907-953)

முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குக் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன் நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர். மைசூர்ப் பீடபூமியும் கேரளக் கடற்கரையும் சோழ அரசுக்குப் புறம்பாக நின்றன.

பராந்தகன் х பாண்டியன்

பராந்தகச் சோழன் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். களப்பிரரை முறியடித்து கிபி 575இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் (915இல்) முறியடிக்கப்பட்டது. பராந்தகன் தன் ஆட்சியைத் தெற்கில் கன்னியாகுமரி வரையில் விரிவு செய்தான். இதனால் தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதைப் பெற்றான். அவனை எதிர்த்து நிற்கும் வலியிழந்து பாண்டியன் தன் நாட்டைக் கைவிட்டு இலங்கைக்குத் தப்பி ஓடினான். பிறகு அங்கிருந்து கேரளத்துக்கு ஓடினான். இலங்கை வேந்தன் ஐந்தாம் காசிபன் (கி.பி. 913 - 923) தனக்குப் படைத்துணை அனுப்பியும் பாண்டியன் வெற்றி காணத் தவறினான். அவன் கி.பி. 915இல் வெள்ளூர் என்ற இடத்தில் சோழனிடம் படுதோல்வியுற்றான். பராந்தகன் பாண்டிய நாட்டின் அரசனாகவும் மதுரையில் முடிசூட்டிக் கொள்ள நினைத்தான். ஆனால், பாண்டிய நாட்டு மணிமுடியும் செங்கோலும் மதுரையில் இல்லை என்று அறிந்த பராந்தகன் பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். நாட்டைத் துறந்து இலங்கைக்கு ஓடிய பாண்டியன் அவற்றை அங்கேயே கைவிட்டுக் கேரளம் போயிருந்தான்.

பராந்தகன் х சிங்கள மன்னன்

பாண்டியன் இலங்கையில் கைவிட்டுப் போன செங்கோலையும் மணிமுடியையும் உடனே தனக்கு அனுப்பி வைக்கும்படி பராந்தகன் இலங்கை மன்னன் நான்காம் உதயனுக்குத் தூது ஒன்று அனுப்பினான். அக்கட்டளைக்கு உதயன் மறுக்கவே பராந்தகன் அவன்மேல் படையெடுத்தான். இதற்கு அஞ்சி உதயன் ரோகணம் என்ற பகுதிக்கு ஓடிவிட்டான்; போகும்போது பாண்டிய நாட்டு மணிமுடியையும் செங்கோலையும் உடன்கொண்டு போனான். இதனால் தன் நோக்கம் நிறைவேறாத ஏமாற்றத்தோடு பராந்தகன் தன் நாடு திரும்பினான்.

பராந்தகனின் நட்புறவுகள்

கேரள மன்னனும், கீழ்ப்பழுவூரைச் சேர்ந்த பழுவேட்டரையரும், கொடும்பாளூர் வேளிர்களும் பராந்தகனுக்குத் துணைபுரிந்தார்கள். பராந்தகனின் மகன்களுள் ஒருவனான அருள்கேசரி கொடும்பாளூர்ப் பரம்பரையைச் சேர்ந்த ஆதிச்ச பிடாரியை மணம் புரிந்துகொண்டான்.

கங்க மன்னன் இரண்டாம் பிரதிவிதிக்குப் பராந்தகன், 'வாணாதிராசன்' என்ற பட்டமொன்றை வழங்கிப் பாராட்டினான். வைதும்பரை வென்று சோழ மன்னன் வெற்றிவாகை சூடினான்.

பராந்தகன் + 2ஆம் பிருதிவிபதி х இராஷ்டிரக்கூடர் + வாணகோவரையர்

பராந்தகனை அரியணையினின்றும் இறக்கித் தன் மகள் வயிற்றுப் பிறந்த கன்னரத்தேவனைச் சோழநாட்டு மன்னனாக முடி சூட்டுவிக்கும் சூழ்ச்சி ஒன்றில் இராஷ்டிரகூடன் இரண்டாம் கிருஷ்ணன் ஈடுபடலானான். தனக்குத் திறை செலுத்தியவர்களான வாணகோவரையரின் துணைகொண்டு அவன் சோழ நாட்டின் மீது போர் தொடுத்தான். கங்க மன்னன் பிருதிவிபதியின் துணையைப் பெற்றுப் பராந்தகன் தன் படைவலிமையைப் பெருக்கிக்கொண்டான். சோழரின் படைகளும் இராஷ்டிரகூடரின் படைகளும் திருவல்லத்தில் மோதிக்கொண்டன. கிருஷ்ணனும் அவனுடைய போர்த்துணைவரும் படுதோல்வியடைந்தனர். பராந்தகன் வீரவெற்றி கண்டான்; 'வீரசோழன்' என்ற விருது ஒன்றையும் ஏற்றுக்கொண்டான்.

பராந்தகச் சோழன் வாணகோவரின் மேல் போர் தொடுக்க எழுந்தபோது அவனுக்கு ரேநாண்டு-7000 என்ற நாட்டை ஆண்டு வந்த வைதும்பர் என்ற தெலுங்கு மன்னனின் எதிர்ப்பை முதலில் முறியடிக்க வேண்டியிருந்தது. சோழரின் கடும் தாக்குதலைத் தாங்கமுடியாத வைதும்பனும் இராஷ்டிரகூடனிடம் சரண் புகுந்தான்.

பகைப்புயல்

பராந்தகச் சோழனின் பேரரசு வெகுவிரைவில் வளர்ந்து வந்து ஐம்பது ஆண்டுக்கால அளவில் மிகவும் விரிவடைந்துவிட்டது. வெகு வேகமாக அது விரிவடைந்ததனால் நாடு முழுவதும் வலிமையான பாதுகாப்பை உருவாக்க இயலவில்லை. மேலும் அவனிடம் தோற்ற இராஷ்டிரக்கூடர்கள், கீழைச் சாளுக்கியர்கள், வாணகோவரையர், வைதும்பர் ஆகியோர் வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தனர். சோழநாட்டின் மீது வீசப்போகும் பகைப் புயலை நன்குணர்ந்திருந்தான் பராந்தகன். எனவே தன் மகன் இராசாதித்தன் தலைமையில் திருமுனைப்பாடி நாட்டிலே ஒரு பெரும்படையைத் தற்காப்புக்காக நிறுத்தியிருந்தான்.

பல ஆண்டுகளாகத் திரண்டு உருவாகிக் கொண்டிருந்த பகைப்புயல் இறுதியாகச் சோழநாட்டைத் தாக்கத் தொடங்கிற்று. கி.பி. 949இல் தக்கோலத்துப் போரில் இரு படைகளின் கைகலப்பும் மிகக் கடுமையாக இருந்தன. போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இராஷ்டிரக்கூடப் படைத்தலைவர்களுள் பூதுகன் என்பவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானைமீது துள்ளி ஏறி இராசாதித்தனைக் கத்தியால் குத்திக் கொன்றான். போரில் இராஷ்டிரக்கூடர் வென்றனர். பூதுகன் போரில் ஆற்றிய அரிய தொண்டுக்காக இராஷ்டிரக்கூட மன்னன் வனவாசி-12,000, வெள்வோணம்-300 ஆகிய நாடுகளை வழங்கித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

முடிவுரை

விஜயாலய சோழன் காலத்தில் குறுநில மன்னராய் இருந்த சோழர்களின் ஆட்சிப் பரப்பை மிகப் பெரிதாக்கிப் பேரரசாக்கியவன் பராந்தகன். இவன் ஊராட்சிமுறையைத் திருத்தியமைத்து, அதனுடைய நடைமுறை விதிகளையும் அறுதியிட்டான். பாசனக் கால்வாய்களை வெட்டி உழவுத்தொழிலை வளர்த்தான்.

இம்மன்னன் இரணியகருப்பம், துலாபாரம் பல புரிந்தான். பிராமணருக்குப் பல பிரமதேயங்கள் வழங்கினான். தன் தந்தையைப் போலவே சிவபெருமானுக்குப் பல கோயில்களை எழுப்பினான். பல துறைகளிலும் இவனுடைய செங்கோல் சிறப்புற்று விளங்கிற்று.

 

2.   முதலாம் இராசராசனின் ஆட்சித் திறத்தையும் வெற்றியையும் விளக்கிக் கட்டுரை வரைக.

முன்னுரை

பிற்காலச் சோழப் பேரரசுக்கு அடிகோலிய பெருமை விசயலாயனுக்கு உரியது. அதற்கு வலுவான அடிப்படை இட்டுத் தந்த பெருமை இராசராசனுக்கு உரியதாகும். இவன் சுந்தரச் சோழனாகிய இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன் மாதேவிக்கும் சதய நாளில் பிறந்தவன். கி.பி. 985 முதல் 1014 வரை சோழப் பேரரசை ஆண்டவன். இவனது இயற்பெயர் அருண்மொழிவர்மன்; இட்டுக்கொண்ட புனைபெயர் இராசராசன்.

தனிச் சிறப்புக்கள்

சோழர் வரலாற்றில் இராசராசனுக்கு எனத் தனிச் சிறப்புக்கள் சில உள்ளன.

Ø  மெய்க்கீர்த்தி என்ற பெயரில் கல்வெட்டுக்களில் வரலாற்று நிகழ்ச்சிகளை நிரல்படப் பொறிக்கும் வழக்கத்தை உருவாக்கியவன். அவனது ஆட்சியின்போது பெற்ற போர் வெற்றிகளை முறைப்படுத்தி மெய்க்கீர்த்தியில் தந்து அவனது வழிவந்தோர்க்கும் வரலாற்றை அறிய முயல்வோர்க்கும் தெளிவான வழியைக் காட்டியவன்.

Ø  கட்டடக் கலையின் உச்சமான தஞ்சைப் பெரிய கோவிலை உருவாக்கியவன்.

Ø  நாடு முழுவதும் உள்ள நிலங்களை விளைநிலங்கள், தரிசு நிலங்கள், இறையிலி நிலங்கள் எனத் தரம்வாரியாகப் பிரித்து, அதற்கேற்ப வரி விதிக்க ஏற்பாடு செய்தவன்.

Ø  இராசராசன் சைவசமய ஈடுபாடு உடையவன். இவனது புனைபெயர்களுள் ஒன்று சிவபாதசேகரன் என்பதாகும். நம்பியாண்டார் நம்பி மூலம் தேவாரப் பாக்களை முறைப்படுத்தித் திருமுறைகளைத் தொகுத்தவன்; திருமுறைகளை ஓதுவதற்கு கோவில்தோறும் ஓதுவார்களை நியமித்தவன்.

Ø  அயல்நாட்டு வாணிபத்தை வளர்க்கும் நோக்குடன் சீனாவிற்குத் தூதுக்குழு அனுப்பியவன்.

சேர பாண்டியருடன் செய்த போர்

கி.பி. 980இல் சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனையும், அவனுக்குத் துணைநின்ற பாண்டியன் அமரபுயங்கனையும் இராசராசன் வென்றான். இவன் சேரநாட்டின் மீது படையெடுத்தமைக்கு அவன் அனுப்பிய தூதனைச் சேரன் இழிவாக நடத்தித் திருவாங்கூர் மாநிலத்தில் சிறைவைத்தது காரணமாகலாம் என வரலாற்றாசிரியர் கருதுவர். இப்போரில் சேரனின் கப்பற்படைகள் அழிந்துவிட்டன. சேரனையும் பாண்டியனையும் வென்ற இராசராசன் 'மும்முடிச் சோழன்' என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டான். காந்தளூர்ச் சாலையையும் அவன் வெற்றி பெற்றன்.

கொல்லம், குடகு, கங்கர் நாடுகளை வென்றமை

இராசராசனின் சேர பாண்டிய வெற்றிக்குப் பின் கொல்லமும் குடகும் கைப்பற்றப்பட்டன. மைசூர் மாநிலத்தில் உள்ளது மேலைக் கங்கர் நாடு. இது கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மூன்றும் அடுத்தடுத்து இராசராசனால் கைப்பற்றப்பட்டன. இப்படையெடுப்புகளுக்கு இராசராசனின் மகன் இராசேந்திரன் தலைமை தாங்கினான். இவ்வெற்றிகளால் மனம் மகிழ்ந்த இராசராசன், வேங்கி மண்டலத்துக்கும் கங்க மண்டலத்துக்கும் இராசேந்திரனை 'மகாதண்ட நாயகன்'ஆக நியமித்தான்; 'பஞ்சவன் மாராயன்' என்ற விருதுபெயரையும் சூட்டினான்.

இலங்கைப் படையெடுப்பு

இராசராசன் சேர பாண்டியருடன் புரிந்த போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழரின் பகைவர்க்குத் துணைநின்றான். எனவே இராசராசன் இலங்கை மீது படையெடுத்தான்.

கி.பி. 993இல் இராசராசன் இலங்கை மீது கொண்ட வெற்றியை, இராமன் இராவணன் மீது கொண்ட வெற்றியுடன் திருவாலங்காட்டுச் செப்பேடு ஒப்பிட்டுக் கூறியுள்ளது. இப்போரில் ஆயிரம் ஆண்டுகள் தலைநகராக இருந்த அநுராதபுரம் அழிக்கப்பட்டது; பொலனருவா அதன் தலைநகராக்கப்பட்டு அது சனநாதமங்கலம் எனப் பெயரிடப்பட்டது. இலங்கையின் வடபகுதி மும்முடிச்சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டுச் சோழ மண்டலத்துடன் இணைக்கப்பட்டது. இவ்வெற்றியின் நினைவாக இலங்கையின் புதிய தலைநகரில் சிவன் கோவில் ஒன்று இராசராசனால் எழுப்பப்பட்டது.

மேலைச் சாளுக்கியருடன் புரிந்த போர்

போர்க்காரணம்

இரத்த உறவுடைய மேலைச் சாளுக்கியர்க்கும், கீழைச் சாளுக்கியர்க்கும் இடையே ஆதிக்கப் போட்டி இருந்து வந்தது. மேலைச் சாளுக்கிய மன்னனாக இருந்த சத்தியாசிரயன் இவ்விரு நாடுகளையும் ஒன்றிணைத்துக் கீழைச் சாளுக்கிய நாட்டைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர விரும்பினான். இச்சூழலில் கீழைச் சாளுக்கிய நாட்டில் அரசுரிமைப் போர் நடபெற்றது. இராசராசன், சக்திவர்மன் என்பவனை ஆதரித்து அவனை அரியணையில் அமர்த்தினான். நன்றிக்கடனாகச் சக்திவர்மன் சோழர்களுக்கு அடங்கி நடந்தான். மேலைச் சாளுக்கிய நாடு, தன் திட்டத்துக்கு எதிராக நின்ற சோழநாட்டைப் பகைத்தது.

போரின் விளைவுகள்

சோழரின் தலைமையை ஏற்றதனால் மேலைச் சாளுக்கியர்கள் கீழைச் சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தனர். எனினும் சோழர் படையின் வரவால் மேலைச் சாளுக்கியர் தோற்றுப் போயினர். இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இரட்டபாடி ஏழரை இலக்கம் சோழரால் கைப்பற்றப்பட்டது; சாளுக்கிய நாடு மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியது. ஒன்பது இலட்சம் படை வீரர்களுடன் சோழர் படையை நடத்திச் சென்ற இராசேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான்.

மேலைச் சாளுக்கிய நாட்டில் சக்திவர்மனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகள் குந்தவையை மணம் முடித்துக் கொடுத்தான்; இதன் மூலம் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான உறவு நீடித்தது.

இவை தவிர கலிங்கம், முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் ஆகியவை இராசராசன் கைப்பற்றிய பிற பகுதிகளாகும்.

முடிவுரை

சமயப் பொறையோடு எல்லாச் சமயங்களையும் சமமாக நடத்தியவன். மணலூரிலும் தலைக்காட்டுக்கு அண்மையிலும் திருமாலுக்குக் கோவில் கட்டியுள்ளான். ஆனைமங்கலம் என்னும் ஊரைச் சமணர்களுக்குப் பள்ளிச்சந்தமாக அளித்துள்ளான். நாகவிகாரத்தில் புத்த விகாரம் கட்ட உதவியுள்ளான்.

இராசராசன் வரலாற்றை விளக்கும் 'ஸ்ரீராசராச விசயம்' என்னும் நூலும் 'இராசராசேச்சுர நாடகம்' என்னும் நாடகநூலும் இவன் காலத்தில் இருந்தது; ஆனால் தற்போது இவை கிடைக்கவில்லை.

 

3.    முதலாம் இராசேந்திரனின் ஆட்சித் திறத்தையும் வெற்றியையும் விளக்கிக் கட்டுரை வரைக.

முன்னுரை

இராசராசனின் ஒரே மகனே முதலாம் இராசேந்திரன். இவனது இயற்பெயர் மதுராந்தகன். எல்லைப் பரப்பிலும், ஆட்சித் திறனிலும் மிகப் பெரியதாக அமைந்த சோழப் பேரரசை ஆண்ட பெருமை முதல் இராசேந்திரனுக்கு உரியது. கி.பி. 1012இல் இளவரசுப் பட்டம் ஏந்திய இவன், கி.பி. 1014இல் சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 1044 வரை ஆட்சி புரிந்தான்.

இராசேந்திரனின் தனிச் சிறப்புகள்

1.    இராசராசன் புரிந்த போர்களுள் பெரும்பாலானவற்றிற்குத் தலைமை தாங்கி நின்று அவனுக்கு வெற்றியையும், புகழையும் ஈட்டிக் கொடுத்தவன்.

2.    வடநாட்டையும் வெளிநாட்டையும் ஒருங்கே வெற்றி கொண்டவன்.

3.    வேகமும் கடுமையும் கொண்ட தாக்குதலே இவன் கையாண்ட போர் உத்திகளுள் தலையானது. பகைவரை விரைந்து பணிய வைக்கும் நோக்கம் கொண்டது இது.

4.    தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நிகராகக் கலைநுணுக்கம் கொண்ட கங்கைகொண்ட சோழேச்சுரம் இவனது அரிய கலைப்படைப்பு.

5.    சோழர்களின் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான்.

இராசேந்திரன் புரிந்த போர்கள்

இராசேந்திரன் பெற்ற வெற்றிகளை வரலாற்றாசிரியர்கள் மூவகைப்படுத்துவர்.

i.              இராசேந்திரன் இளவரசனாக இருந்து நடத்தியவை.

ii.            அரசனாக இருந்து நடத்தியவை.

iii.           இவனது காலத்தில் இளவரசனாக விளங்கிய இராசாதிராசன் நடத்தியவை.

மேலைச் சாளுக்கியருடன் மேற்கொண்ட போர்

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயன் சோழப் பேரரசுடன் தொடங்கிய போர் அவனது வழித்தோன்றல்களாலும் தொடரப்பட்டது. சோழரிடம் இழந்த இடங்களைச் சாளுக்கிய மன்னன் மீட்க விரும்பியதே இப்போருக்குக் காரணம். இராசேந்திரனுக்கும் சாளுக்கிய மன்னன் சயசிங்கனுக்கும் முயங்கி என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இப்போரில் சாளுக்கிய மன்னன் தோல்வியுற்றான். ஆயினும் இரட்டபாடியின் மேல் இருந்த தனது ஆதிக்கத்தை அவன் முழுவதுமாக இழக்கவில்லை.

கி.பி. 1042இல் சோழர்க்கும் மேலைச் சாளுக்கியர்க்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. இப்போரின்போது சாளுக்கியரின் தலைநகரம் சூறையாடப்பட்டது. சாளுக்கிய மன்னனுக்கு துணைநின்ற கலிங்க மன்னனும் ஒட்டவிசய அரசனும் இப்போருக்குப் பின் சோழரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டனர்.

இலங்கை மீது படையெடுப்பு

இராசராசனால் தோற்கடிக்கப்பட்ட ஐந்தாம் மகிந்தன், தான் இழந்த ஈழத்தை மீண்டும் கைப்பற்ற எடுத்த முயற்சியே இப்போர் நிகழக் காரணமாயிற்று. பாண்டியன் சோழனால் தோற்கடிக்கப்பட்டபோது சிங்கள அரசனிடம் தஞ்சம் புகுந்து, தனது மணிமுடியையும் செங்கோலையும் மறைத்து வைத்திருந்தான். இராசேந்திரன் ஈழத்தின் மீது போர் தொடுத்ததற்கு இவற்றை மீட்டுக் கொணரும் விருப்பமும் ஒரு காரணம்.

கி.பி. 1017இல் நடபெற்ற இப்போரின் விளைவாக ஈழநாடு முழுவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது. பாண்டியனின் மணிமுடி, செங்கோல் மட்டுமின்றி சிங்கள மன்னனின் மணிமுடியும் அவனது பட்டத்து அரசியின் மணிமுடியும் பறித்துக் கொணரப்பட்டன. இலங்கை சோழ மண்டலங்களுள் ஒன்றாக இணைக்கப்பட்டது.

சேர பாண்டியருடன் புரிந்த போர்

இராசராசன் மறைவைப் பயன்படுத்திக் கொண்டு சேர மன்னனும் பாண்டிய மன்னனும் தன்னாட்சி பெற முயன்றபோது இராசேந்திரன் சேர, பாண்டிய நாடுகளின் மீது படையெடுக்க நேர்ந்தது. இப்போர்களில் தோற்றுப் புறங்கண்ட சேரனைச் சாந்தித் தீவிலும், பாண்டியனை மலைய மலையிலும் இராசேந்திரன் இடைமறித்து வென்றான்.

கங்கை கொண்டமை

கங்கை படையெடுப்பின் காரணங்கள் பலவாறு ஊகிக்கப்படுகின்றன. இராசேந்திரன் தான் அமைத்த புதிய தலைநகரைத் தூய்மைப்படுத்த கங்கைப் பயணத்தை மேற்கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. கஜினிமுகமது கொடுத்து வந்த தொல்லைகளை ஒழித்துக் கட்டுமாறு போசராசன், காங்கேயன் ஆகிய மன்னர்கள் வேண்டியதற்கு இணங்க இராசேந்திரன் வடநாட்டின் மீது படையெடுத்தான் என்பர் கே.கே. பிள்ளை.

வடநாட்டுப் படையெடுப்பின்போது முதலில் சக்கரக் கோட்டமும், பின்னர் ஒட்டரதேயம், கோசலநாடு, தண்டபுத்தி, உத்தரலாடம், வங்காளம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. பின்னர் இராசேந்திரன் கங்கைக் கரையை அடைந்தான் என அவனது மெய்க்கீர்த்தி சுட்டுகிறது. இவ்வடநாட்டு வெற்றியை நினைவுகூரும் முகமாக இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி அதனைத் தனது புதிய தலைநகராக அமைத்துக் கொண்டான்.

கடாரம் கொண்டமை

இப்போருக்குரிய காரணம் புலனாகவில்லை. இராசேந்திரன் தனது திக்குவிசயத்தைக் கடல் கடந்த நாடுகளிலும் தொடர வேண்டும் என்ற பேரார்வத்தால் இப்படையெடுப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் சோழநாட்டிற்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட கடல் வாணிகத் தொடர்பை இந்தோனேசிய மன்னர்கள் விரும்பாததால் இப்போர் நடந்திருக்கலாம் என்றும் கூறுவர். மலாய் தீபகற்பத்தின் பகுதிகளாகக் கருதப்படும் ஸ்ரீ விசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தலைத் தக்கோலம், மாடலிங்கம், இலாமுரிதேசம், மானக்கவாரம் ஆகிய இடங்களையும் கடாரத்துடன் இராசேந்திரன் வெற்றி கொண்டான்.

விக்கிரமச்சோழன் உலாவும், குலோத்துங்கச்சோழன் உலாவும், கலிங்கத்துப் பரணியும் இராசேந்திரனின் கடாரப் படையெடுப்பை உறுதி செய்கின்றன. ஆயினும் அப்படையெடுப்பிற்கான காரணத்தையோ, படையெடுப்பால் ஏற்பட்ட விளைவுகளையோ அவை விளக்கவில்லை.

வேங்கி முதல் வங்கம் வரை இராசேந்திரன் பெற்ற வெற்றிகள் பலவும் கிழக்குக் கடற்கரை மீது அவன் பெற்ற வெற்றிகளாக அமைந்துள்ளன. இராசேந்திரன் வங்கத்தில் இரண்டாம் மகிபாலன் மீது கொண்ட வெற்றி "சோழப் பேரரசை மேலோங்கிடச் செய்த போர்ப்படைச் சாதனையாக" வருணிக்கப்படுகிறது. இராசேந்திரன் பெற்ற வெற்றிகளுள் இலக்கியங்கள் ஒருமுகமாக நின்று புகழ்பாடும் வெற்றிகள் அவன் கங்கை கொண்டமையும், கடாரம் கொண்டமையும் ஆகும்.

சமயப் பணிகளும் பிற பணிகளும்

Ø  இராசேந்திரன் வடநாட்டு வெற்றிக்குப்பின் தலைநகரை இடம் மாற்றி அதற்குக் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயரிட்டான். அங்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு நிகராக கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் சிவன் கோவிலை எழுப்பினான். இக்கோவில் கருவூர்த் தேவரால் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

Ø  இவன் கங்கைக் கரையில் வாழ்ந்த சமணர்களைக் காஞ்சியில் குடியேற்றியமை இவனது சமயப் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

Ø  உழவைப் பேணும் நோக்குடன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் சோழகங்கம் என்ற ஏரியை வெட்டுவித்தான்; இக்காலத்தில் அது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

Ø  இராசேந்திரன் சீனாவுடன் இராசதந்திரத் தொடர்புகளையும் வாணிகத் தொடர்புகளையும் ஏற்படுத்தும் நோக்குடன் கி.பி. 1016, 1033 ஆகிய ஆண்டுகளில் தூதுக் குழுக்களை சீனாவுக்கு அனுப்பினான்.

 

4.   முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சித் திறத்தையும் வெற்றியையும் விளக்கிக் கட்டுரை வரைக.

முன்னுரை

கீழைச் சாளுக்கிய வழித்தோன்றலாகிய முதல் குலோத்துங்கச் சோழன் ஆட்சிப் பீடம் ஏறியமை சோழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். சந்ததி அற்ற அதிராசேந்திரனின் மறைவால் சோழநாடு ஆள்வோர் இன்றிக் குழம்பிக் கிடந்தது; அப்பொழுது வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்த கிழைச் சாளுக்கிய அரசனும் இராசேந்திரனின் பேரனுமாகிய முதல் குலோத்துங்கன் கி.பி. 1070இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்த விசயாலய சோழனின் "நேர்ப் பரம்பரை ஆட்சி முதல் குலோத்துங்கன் வரவால் முடிவுற்றது.

குலோத்துங்கனின் தனிச் சிறப்புகள்

சோழர் வரலாற்றில் குலோத்துங்கனுக்கென தனிச் சிறப்புகள் உள்ளன.

Ø  பேரரசை அச்சுறுத்திய தொல்லைகளை அடக்கி, தான் அடைந்த ஆட்சியை ஒழுங்குபடுத்தியவன். குழப்பம் நிறைந்து இருந்த பேரரசைச் சிதையாமல் காத்த பெருமை இவனுக்குண்டு.

Ø  தனது மனநிறைவைக் காட்டிலும் குடிமக்களின் நலனில் அக்கறை காட்டினான்.

Ø  கி.பி. 1077இல் சீனாவுக்கு தூதுக்குழு அனுப்பி அயல்நாட்டு வாணிகத்தில் அக்கறை காட்டினான்; கடாரத்துடன் நல்லுறவை வளர்த்தான்.

Ø  "சுங்கம் தவிர்த்த சோழன்" என்னும் இவனது புனைபெயர் வாணிக வளர்ச்சியில் இவன் காட்டிய ஆர்வத்தையும் "திருநீற்றுச் சோழன்" என்னும் இவனது புனைபெயர் சைவசமய வளர்ச்சியில் இவன் காட்டிய ஆர்வத்தையும் விளக்கும்.

Ø  புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணியின் காவிய நாயகன் இவனே.

Ø  சோழப் பேரரசை ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தவன்.

Ø  இவனுக்கு எட்டுக்கும் மேற்பட்ட மெய்க்கீர்த்திகள் உள்ளன. ஓர் அரசன் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க்கீர்த்திகளைத் தனதாகக் கொள்ளும் வழக்கத்தை உருவக்கியவன் இவனே.

குலோத்துங்கன் புரிந்த போர்கள்

மேலைச் சாளுக்கியருடன் புரிந்த போர்

சோழ நாட்டுடன் கீழைச் சாளுக்கியர் ஒன்றிணைந்தால் தம் ஆட்சிக்கு இடையூறு விளையும் என மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் கருதியதே இப்போருக்கான காரணம். விக்கிரமாதித்தனோடு, யாதவர், ஒய்சாளர், கடம்பர் ஆகியோரும் சேர்ந்து சோழரை எதிர்த்தனர். எனினும் குலோத்துங்கனின் படையாற்றலுக்கு முன் நிற்க முடியாமல் இப்படைகள் தோற்றுப் புறமுதுகிட்டன.

பாண்டிய நாட்டுடன் புரிந்த போர்

அதிராசேந்திரனின் மறைவால் தோன்றிய சோழநாட்டுக் குழப்பம் ஈழம், சேரநாடு, பாண்டியநாடு ஆகியவற்றில் விடுதலை உணர்வைத் தூண்டி விட்டிருந்தது. சிங்களருடனும், சேரருடனும் சேர்ந்து பாண்டியர் சோழரை எதிர்க்கத் திட்டமிட்டனர். பாண்டியர் கிளர்ந்து எழும் முன் அவர்களை அடக்க நினைத்த குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியர் எதிர்பார்த்தபடி இலங்கையின் உதவி கிடைக்கவில்லை. இப்போரில் பாண்டியர் தோல்வியுற்றனர்; தோற்ற பாண்டியர் திறை செலுத்த ஒப்புக் கொண்டனர்.

சேரருடன் புரிந்த போர்

குழப்பத்தைப் பயன்படுத்தி சோழர்களை வெல்லலாம் என்று நினைத்தான் சேர மன்னன். ஆனால் சேர மன்னனாகிய இராமதிருவடியை அடக்க நரலோகவீரன் என்பவனுடைய தலைமையில் படையை அனுப்பினான் குலோத்துங்கன். விழிஞம், காந்தளூர்ச் சாலை, கோட்டாறு ஆகிய இடங்களில் சோழர்ப்படைக்கும் சேரர் படைக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. இப்போரில் பெருந்தோல்வி அடைந்த சேரன் திறை செலுத்த இசைந்தான்.

கலிங்கப் படையெடுப்பு

திறை செலுத்த மறுத்த வடகலிங்க மன்னன் அனந்தவர்மனைத் தண்டிக்கும் நோக்குடன் கருணாகரன் தலைமையில் எடுக்கப்பட்ட படையெடுப்பு இது. குலோத்துங்கன் செய்த போர்களுள் தனிச் சிறப்பு வாய்ந்ததும் செயங்கொண்டாரால் கலிங்கத்துப்பரணியில் பாராட்டப்பெறுவதும் இப்போரேயாகும்.

இப்போரில் கலிங்கம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது. போரில் எதிர்த்து நிற்க முடியாமல் கலிங்க வீரர்கள் மாறுவேடமிட்டு ஓடி ஒளியத் தொடங்கினர். புறமுதுகிட்ட கலிங்க மன்னனைத் தேடி, அவனையும் அவன் நாட்டு யானை, குதிரை, தேர்களையும் கைப்பற்றிக் கொண்டு சோழர்படை நாடு திரும்பியது.

ஈழத்துடன் உறவு

சேர பாண்டிய நாட்டில் நடைபெற்றது போல, அதிராசேந்திரன் மறைவின்போது நாட்டைத் தன்னுரிமையாக்கும் முயற்சி ஈழத்திலும் நடைபெற்றது. இம்முயற்சியில் ஈடுபட்ட இந்நாடுகளுள் ஈழம் மட்டுமே சோழர் பிடியிலிருந்து விடுதலை பெற்றது எனலாம். ஈழம் விடுதலை பெறுமுன் விசயபாகுவின் தலைமையில் அமைந்த ஈழப்படைக்கும் சோழர் படைக்கும் பொலனருவியில் கடும்போர் நடைபெற்றதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இப்போரில் சிங்களர்கள் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியை நினைவுகூரும் முகமாக ஈழத்தின் தலைநகரமான பொலன்னருவா விசயாபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இச்சூழலில் ஆட்சிக்கு வந்த குலோத்துங்கன் ஈழத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக, தன் மகளை ஈழத்து இளவரசனுக்கு மணம் முடித்து அந்நாட்டுடன் உறவை வளர்த்தான்.

சமயப் பணியும் பிற பணிகளும்

சிவபெருமானிடம் ஈடுபாடு கொண்டு திருநீற்றுச் சோழன் எனப் புகழப்பட்ட குலோத்துங்கன் இராசராசன், இராசேந்திரன் ஆகியோரைப் போலவே சமயப் பெருந்தன்மை கொண்டு விளங்கினான். மன்னார்குடியில் திருமால் கோவில் கட்டியமையும், நாகப்பட்டின புத்த விகாரத்திற்கு இறையிலி நிலங்களை அளித்தமையும், சோழநாட்டு வைணவ, சமண, பெளத்தக் கோவில்கள் பலவற்றில் இவனது கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமையும் இதனை உறுதி செய்கிறது.

இவன் இயற்றியதாகக் கலிங்கத்துப் பரணி சுட்டும் 'குலோத்துங்கன் இசைத்தமிழ் நூல்' இவனது கலை ஈடுபாட்டை அரண் செய்கிறது.

கி.பி. 1077இல் சீனாவுக்கு 72பேர் அடங்கிய தூதுக்குழு ஒன்றை அனுப்பி அதன் வாயிலாக அயல்நாட்டு வாணிகம் வளரவும், சுங்கம் தவிர்த்து, அதன் வாயிலாக உள்நாட்டு வாணிகம் வளரவும் வழிவகை செய்தமை வாணிக வளர்ச்சியில் இவன் கொண்ட ஈடுபாட்டை விளக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Dummy

Download as Pdf