தமிழக வரலாறும் பண்பாடும் - 2
வினா விடை வங்கி - அலகு – III, IV, V
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. வெற்றிகளும் விருதுகளும்
பெற்ற பாண்டிய மன்னர்கள் இருவரைக் குறிப்பிடுக.
முதல் மாறவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1238): இவன் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத்
தேவர் என்ற பட்டம் பெற்றான்.
முதல் சடையவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி. 1251-1271): இவன் "எம்மண்டலமும் கொண்டருளிய
சிந்தரபாண்டியன்" எனவும் "எல்லாம் தலையான பெருமாள் எனவும் பட்டம் பெற்றான்.
2. பாண்டியன் நெடுஞ்சடையன்
பராந்தகன் வழங்கிய செப்பேடுகளைக் கூறுக.
வேள்விக்குடிச்
செப்பேடுகளையும், சீவரமங்கலத்துச் செப்பேடுகளையும் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன்
வழங்கினான்.
3. பாண்டியன் நெடுஞ்செழியன்
பராந்தகன் செப்பேடுகள் கூறும் செய்திகளைக் குறிப்பிடுக.
பாண்டியன் நெடுஞ்செழியன்
பராந்தகன் தன் முன்னோர் சென்ற வழியிலிருந்து சில வகைகளில் விலகிச் செல்வதை அவன் வழங்கிய
செப்பேடுகள் உணர்த்துகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ சமய சுலோகங்கள்
இடம்பெற்றுள்ளன. அவனது முன்னோர்கள் சைவம் வளர்த்தவர்கள்; இவனோ வைணவ ஆதரவாளன். பெரியாழ்வார்,
ஆண்டாள் காலத்தில் இவன் வாழ்ந்ததனால் இவனுக்கு வைணவத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டது
போலும். அதேபோல் தமிழ் வளர்த்த பாண்டியர் மரபில் தோன்றிய இவன் வடமொழிக்கு ஏற்றம் கொடுத்ததனை
அவனது பட்டப்பெயர்கள் உணர்த்துகின்றன.
4. வரகுண வர்மனுக்கு
வழங்கிய வேறுபெயர் யாது?
சடையவர்மன்.
5. சடையவர்மன் சுந்தரபாண்டியன்
ஏற்ற விருதுகள் யாவை?
சமஸ்தஜகதாதாரன்,
எம்மண்டலமும் கொண்டருளிய, ஹேமாச்சாதனா ராஜா, மகாராசாதிராச - ஸ்ரீபரமேசுவர, மரகதப் பிருதிவி
பிரித்புரங் கொண்டான், எல்லாந் தலையானான் என்பன அவன் பூண்டு மகிழ்ந்த விருதுகள்.
6. பாண்டிய நாடு
குறித்துக் கூறும் வெளிநாட்டவர் யாவர்?
மார்க்கோ போலோ,
வாசப்.
7. மதுரைமீது படையெடுத்த
முதல் முஸ்லீம் தளபதி யார்?
டில்லி சுல்தான்
அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரே பெரும்படையுடன் தெற்கு நோக்கி வந்தான்.
8. தமிழகத்தில் முஸ்லீம்களின்
குடியேற்றம் தொடங்கியது எப்போது?
தமிழகத்தில் முஸ்லீம்களின்
குடியேற்றம் 13ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மாலிக்காபூர் படையெடுத்து வருவதற்கு
முன்னரே முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் நுழைந்து பாண்டிய மன்னர்களின் படைத்தொழிலிலும்
ஈடுபட்டனர்.
9. முஸ்லீம் வரலாறுகளில்
மதுரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாபார்.
10. கிருஷ்ணதேவராயன்
- குறிப்பு வரைக.
i.
கி.பி. 1509இல்
கிருஷ்ண தேவராயன் ஆட்சிப்பீடம் ஏறினான். விசயநகரத்தின் மிகச்சிறந்த காலமாகக் கருதப்படுவது
இவனது காலமாகும்.
ii.
எப்போதும் வெற்றியே
பெற்றுத் திகழ்ந்த இவனது காலத்தில் வடக்கே துங்கபத்திரை முதல் தெற்கே குமரிமுனை வரை
விசயநகரப் பேரரசு பரவி நின்றது.
iii. ஒரிசா, உதயகிரி, கலிங்கம், இராய்ச்சூர், பீஜப்பூர் ஆகிய பகுதிகள்
விஜயநகரப் பேரரசுக்குள் கொண்டு வரப்பட்டன,
iv. கிருஷ்ண தேவராயனால்தான் முதன்முதலில் மதுரை நாயக்கச் சார்பாளர்
அமர்த்தப்பட்டனர்.
11. வேலூர்க் கோட்டையைக்
கட்டியவர் யார்? அவர் கட்டிய கோவில் பெயர் என்ன?
விஜயநகரப் பேரரசுக்
காலத்தில் இப்பகுதியை ஆண்ட சின்னபொம்மு நாயக்கரால்
வேலூர்க் கோட்டை கட்டப்பட்டது.
இக்கோட்டைக்குள்
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியன உள்ளன.
12. வேலூரை ஆண்ட நாயக்கர்
யார்? யாருடைய அரசின் கீழ் ஆட்சி புரிந்தான்? அல்லது வேலூர்க் கோட்டையைக் கட்டியவர்
யார்?
வேலூரில் சின்னபொம்மு
நாயக்கர் என்பவர் விஜயநகரப் பேரரசின் கீழ் கி.பி. 1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு வந்தார்.
வேலூர்க் கோட்டையையும் அதனுள் இருக்கும் ஜலகண்டேசுவரர் கோயிலையும் கட்டியவர் இவர்தான்.
13. இராணி மங்கம்மாள்
செய்த சமூகத் தொண்டுகளை எழுதுக.
மங்கம்மாள் நல்ல
சாலைகள் அமைத்தாள்; சத்திரங்கள் கட்டினாள்; சாலையோரக் கிணறுகள் வெட்டினாள்; தண்ணீர்ப்
பந்தல்கள் ஏற்படுத்தினாள்; உழவுத்தொழிலின் வசதிக்காகப் பல பாசன வசதிகள் செய்து கொடுத்தாள்.
கிறித்துவர்களிடமும்
இஸ்லாமியர்களிடமும் கனிவோடும் சமயப் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டாள்.
14. விசயநகரப் பேரரசைத்
தோற்றுவித்தவர் யாவர்?
முதலாம் புக்கன், ஹரிஹரன், குமாரகம்பணன்.
15. விசுவநாத நாயக்கரின்
தலைமை அமைச்சர் யார்? அல்லது பாளையக்கார முறையை உருவாக்கியவர் யார்?
விசுவநாத நாயக்கரின் தலைமை அமைச்சர் அரியநாதர்
ஆவார். இவர்தான் நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர் முறையை உருவாக்கினார்.
16. விசயநகரப் பேரரசு
எப்போரில் வீழ்ச்சியுற்றது? ஆண்டு எது?
விசயநகரப் பேரரசானது
1565இல் நடந்த தலைக்கோட்டைப் போரில் வீழ்ச்சியுற்றுச் சிதறுண்டு போயிற்று.
17. நாயக்கர் கால
வாணிகம் குறித்து எழுதுக.
நாயக்கர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாணிகம் வளர்ச்சியுறவில்லை.
அயல்நாட்டு வாணிகம் தடைபட்டது. கடற்படையும் கப்பல்களும் அவர்களிடம் இல்லாமையே இதற்குக்
காரணமாகலாம். போர்த்துக்கீசியரும் டச்சுக்காரருமே தமிழ்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டு
பயன் அடைந்தனர்.
18. செஞ்சியை முற்றுகையிட்ட
சேனைகள் பெயரை எழுதுக.
மீர்ஜூம்லாவின்
தலைமையில் கோல்கொண்டாவின் சேனையும் பீஜப்பூர்க் குதிரைப் படையும் செஞ்சியை முற்றுகையிட்டன.
19. மணிப்பிரவாள நடை
என்றால் என்ன?
மணியும், பவளமும்
சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல தமிழ், வடமொழி ஆகிய இரண்டு மொழிகள் கலந்து உருவான
இலக்கிய நடைக்கு மணிப்பிரவாள நடை என்பது பெயர்.
20. கச்சியப்ப முனிவர்
எழுதிய நூலையும் அவற்றின் சிறப்பினையும் குறிப்பிடுக.
கச்சியப்ப முனிவர் என்பவர் சிவஞான முனிவரின் சீடராவார். இலக்கணம், இலக்கியம்,
சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் வல்லவராக விளங்கிய இவர், திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப்
புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணப்
பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது,
பதிற்றுப் பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர அந்தாதி போன்ற நூல்களை
இயற்றியுள்ளார்.
இவருக்கு கவிராட்சதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
21. குமரகுருபரர்
எழுதிய நூல்கள் நான்கினைக் குறிப்பிடுக.
கந்தர் கலிவெண்பா,
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை,
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை,
பண்டாரமும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சியம்மை குறம்,
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை, கயிலைக்
கலம்பகம், காசித் துண்டிவிநாயகர் பதிகம் ஆகியன குமரகுருபரர் இயற்றிய நூல்களாகும்.
22. தஞ்சை மராட்டிய
அரசைத் தோற்றுவித்தவர் யார்? அவருடைய சகோதரர் யார்?
தஞ்சை மராட்டிய
அரசைத் தோற்றுவித்தவர் சிவாஜி. அவருடைய சகோதரர் வெங்காஜி.
23. கிழவன் சேதுபதிக்கு
மதுரை நாயக்கன் அளித்த பட்டம் எது?
கிழவன் சேதுபதி
தனக்குப் புரிந்த பேருதவிக்கு ஈடாக மதுரை நாயக்கன் "பராராசகேசரி" என்ற பட்டத்தை அளித்தான்.
24. தீரன் சின்னமலை
- விளக்கி எழுதுக.
- ஆங்கிலேயரை எதிர்த்த கொங்குநாட்டு வீரன் தீர்த்தகிரி.
- இவன் ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி படை திரட்டி எதிரிகளுடன்
போரிட்டான்.
- இவனே "தீரன் சின்னமலை" என்னும் பெயரால் தமிழக வரலாற்றில்
புகழ் பெற்றான்.
25. இந்தியாவில் முதன்முதலாக
வந்த ஐரோப்பியர் யார்? அவரின் நோக்கம் யாது?
இந்தியாவில் முதன்முதலாக
வந்த ஐரோப்பியர் போர்ச்சுகீசியராவார். அவர்கள் வாணிகம் புரிந்து பொருளீட்டும் நோக்கத்துடனே
நாட்டுக்குள் நுழைந்தனர்.
26. இந்தியாவில் முதன்முதலாக
வந்த ஐரோப்பிய மாலுமி யார்? அவர் எந்த ஆண்டு எங்கு வந்தார்?
இந்தியாவில் முதன்முதலாக
வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோ-ட-காமா என்பவரே. இவர் கி.பி. 1498இல் கள்ளிக்கோட்டைக்கு
வந்தார்.
27. கிழக்கிந்தியக்
கம்பெனி யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
இங்கிலாந்து அரசி
எலிசபெத் வழங்கிய பட்டயம் ஒன்றின்படி 'கிழக்கிந்தியக் கம்பெனி' என்னும் பெயரில் வாணிக
நிறுவனம் ஒன்று 1600ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கப்பட்டது
28. பறங்கிகள் என்று
தமிழர்களால் அழைக்கப்பட்டவர்கள் யார்?
போர்ச்சுக்கீசியரைத்
தமிழர்கள் பறங்கியர் என்று அழைத்தனர். அவர்கள் மாட்டு இறைச்சி தின்றதையும் மதுபானம்
குடித்ததையும் தமிழர்கள் வெறுத்தனர்.
29. மதுரையில் கிறித்துவ
மிசன் யார் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது?
மதுரையில் கிறித்துவ
மிசன் வீரப்ப நாயக்கனின் இறுதி ஆட்சிக் காலத்தில் ஜெசூட் பர்னாண்டஸ் பாதிரியின் தலைமையில்
தொடங்கப்பட்டது. கிருஷ்ணப்ப நாயக்கனும் அவர்களுக்கு அனுமதி வழங்கினான். உயர்வகுப்பு
மக்களை கிறித்தவர்களாக மாற்றுவதே மதுரை மிஷனின் சீரிய நோக்கமாகும்.
30. ரோமாபுரி ஐயர்
என்பவர் யார்? அவ்வாறு அழைக்கக் காரணம் என்ன?
ராபர்ட்-டி-நொபிலி என்ற ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரே ரோமாபுரி ஐயர் என்று அழைக்கப்பட்டார்.
அவர் மதுரையில் தங்கி துறவி போலவே உடையுடுத்தித் தம்மை ரோமாபுரி ஐயர் என்று அழைத்துக்
கொண்டார். அவருடைய எளிய துறவுக் கோலமும் தமிழ்மொழிப் பயிற்சியும் மக்களுடன் கலந்து
உறவாடுவதற்குப் பக்கத்துணையாக இருந்தன.
31. ஆனந்தரங்கம் பிள்ளை
நாட்குறிப்பின் சிறப்பு அம்சங்கள் யாது?
ஆனந்தரங்கம் பிள்ளை
பிரெஞ்சுக் கம்பெனியில் அதிகாரியாக இருந்தவர். அவர் எழுதிவைத்துள்ள நாட்குறிப்புக்கள்
12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலேய, பிரெஞ்சு வாணிகக் கழகங்களுக்கு இடையே
ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போராட்டங்களும் அவற்றின் முடிவும் இந்நாட்குறிப்பில்
விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே தமிழக வரலாற்றை எழுதுவதற்கான அடிப்படைச் சான்றுகளுள்
ஒன்றாக ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பும் துணைபுரிகிறது.
32. மொழியாராய்ச்சியாளர்கள்
இருவரைக் குறிப்பிடுக.
கால்டுவெல், மார்க்ஸ்முல்லர்,
எல்லீஸ்
33. 'இந்துக்களின்
பழக்கவழக்கங்களும் சடங்குகளும்' என்னும் நூலை எழுதியவர் யார்?
ஆபி டூபாய் என்னும்
ஃபிரெஞ்சுப் பாதிரியாரே இந்நூலை எழுதினார். அவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தமிழகத்தில்
கழித்தார்.
34. முதன்முதலில்
தமிழகத்தில் அச்சு எழுத்துக்களை வடிவமைத்தவர் யார்? அல்லது அச்சுப் புத்தகத்தை அச்சிட்டவர்
யார்?
ஜெசூட் மரபைச்
சார்ந்த கிறித்தவப் பாதிரியான அண்டிறீக் அடிகள்
ஆவார்.
35. இந்திய வரலாற்றில்
கருநாடகம் என அழைக்கப்பட்ட பகுதிகள் எவை?
சோழ மண்டலக் கடற்கரைப்
பகுதியும் அதைச் சார்ந்துள்ள நிலப்பகுதியும் இந்திய வரலாற்றில் கருநாடகம் என்னும் பெயரால்
வழங்கி வருகின்றன.
36. சென்னையில் அச்சிடப்பெற்ற
நாணயங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
சென்னையில் நடைபெற்றுவந்த
நாணயம் அச்சிடும் சாலையில் நட்சத்திர வராகன்கள், மதராஸ் வராகன்கள், மதராஸ் துட்டுகள்
அச்சிடப்பட்டன.
கவர்னர் மன்றோ
காலத்தில் இந்த நாணயங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ரூபா நாணயம் ஒன்று மட்டுமே புழக்கத்துக்குக்
கொண்டுவரப்பட்டன.
37. ஜாலியன் வாலாபாக்
படுகொலையைச் செய்தவர் யார்? ஏன்?
ஜாலியன் வாலாபாக்
படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்
வாலாபாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின்
தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக்
குறிக்கும்.
ரௌலட் சட்டத்துக்கு
எதிரான இந்தியரின் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியே ஜாலியன் வாலாபாக் படுகொலை.
38. 'இரட்டை ஆட்சிமுறை'
என்பது என்ன?
மான்டேகு - செம்ஸ்போர்டு
திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட அரசியலுக்கு இரட்டையாட்சி என்று பெயர். அதன்கீழ் மாகாணக்
கவர்னரே அரசாங்கத்தின் தலைவராக இருந்தார். அவருக்குத் துணைபுரிய ஆலோசனைக் குழு ஒன்று
அமைக்கப்பட்டது; இக்குழுவில் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும்
சேர்ந்திருந்தனர்.
39. 'ரயத்துவாரி முறை'
என்றால் என்ன?
பொதுமக்கள் தங்கள்
நிலங்களைத் தடையேட்தும் இன்றி பயிரிடவும், குத்தகைக்கு விடவும், விற்கவும் உரிமை பெற்றிருந்தனர்.
இவர்கள் அரசாங்கத்துக்கு நேரடியாக வரி கட்டி வந்தனர். இந்தக் குடியுரிமைக்கு 'ரயத்துவாரி'
முறை என்று பெயர். சர் தாமஸ் மன்றோ என்பவரே ரயத்துவாரி முறையை அமைத்தவர்.
40. 'வைக்கம் வீரர்'
எனப்பட்டவர் யார்? அவர் தோற்றுவித்த இயக்கம் யாது?
'வைக்கம் வீரர்'
என அழைக்கப்பட்டவர் பெரியார் ஈ.வே.ரா.
அவர்களே. அவரி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
41. சென்னையில் தலைமை
நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
சென்னையில்
1801இல் தலைமை நீதிமன்றம் ஒன்று தொடங்கப்பட்டது.
42. ஆங்கிலேயர்கள்
தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்த பொருட்கள் யாவை?
கடல் முத்துகள்,
நறுமணப் பண்டங்கள், சாயச் சரக்குகள், சர்க்கரை, துணி, அபினி, கஞ்சா, தேக்கு, ஈட்டி,
கருங்காலி, செம்மரம் முதலியன தமிழ்நாட்டில் ஏராளமாக விளைந்தன. இவற்றையும், மேலும் பல
காடுதரு பொருள்களையும் ஆங்கிலேயர் இங்கு கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி
செய்தனர்.
43. பேரரசி விக்டோரியா
அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1858ஆம் ஆண்டு நவம்பர்
1ஆம் தேதி.
44. தென்னிந்திய நல
உரிமைக் கட்சியில் பெரும்பங்கு கொண்டவர்கள் பெயரை எழுதுக.
நடேச முதலியார்,
டி.எம். நாயர், தியாகராய செட்டியார்
7
மதிப்பெண் வினாக்கள்
1. சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- விளக்குக.
தென்னிந்தியாவின்
மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவன் எனப் புகழப்படுபவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
(கி.பி. 1251-1271). கி.பி. 1251இல் முடி சூடிய இவனது ஆட்சிக்காலத்தில், சோழநாடு, சேரநாடு,
மகதநாடு, கொங்குநாடு, ஹொய்சளம், சிங்களம் ஆகியவை பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டு நின்றன.
- இப்பாண்டியனிடம் தோல்வியுற்ற சோழமன்னன் இராசேந்திரன் ஆண்டுதோறும்
திறை செலுத்த இசைந்தான்.
- சேரமன்னன் உதய மார்த்தாண்டவர்மன் கொலை செய்யப்பட்டான்.
- சிங்களர்கள் அஞ்சித் திறை செலுத்தினர்.
- ஹொய்சளர்கள் மைசூர் பீடபூமிக்குள் அடைக்கப்பட்டனர்.
- கி.பி. 1262இல் ஹொய்சளருடன் நடத்திய இரண்டாவது போரில் அந்நாட்டு
மன்னன் சோமேசுவரனும், கி.பி. 1262க்கும் 1264க்கும் இடையில் சிங்களவருடன் நடத்திய இரண்டாவது
போரில் அந்நாட்டு இளவரசனும் கொல்லப்பட்டனர்.
- இப்போர்களில் பெற்ற வெற்றிக்குப் பின் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
"எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன்" எனவும், "எல்லாம் தலையான
பெருமாள்" எனவும் விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொண்டான்.
ஆன்மீகப் பணிகள்:
`போர்களில் கிட்டிய
செல்வத்தால் தில்லை நடராசர் கோவிலுக்கும், திருவரங்கப் பெருமாள் கோவிலுக்கும் பொன்னை
வேய்ந்து புகழைச் சூடிக்கொண்டான்.
2. கிருஷ்ண தேவராயர்
ஆட்சி குறித்து எழுதுக.
நரசநாயக்கனுக்குப்
பின் அவனது மூத்த மகனான இம்மடி நரசநாயக்கன் அரியணை ஏறினான். அவனுக்கு வீரநரசிம்மன்
என்னும் பெயரும் உண்டு. இவன் நான்கே ஆண்டுகள் ஆட்சி புரிந்து உயிர் துறந்தான். இவனுக்குப்
பின்பு இவனது தம்பியான கிருஷ்ணதேவராயன் கி.பி. 1509இல் பட்டத்துக்கு வந்தான்.
- இவனது காலம் விசயநகரப் பேரரசின் மிகச் சிறந்த காலமாகக் கருதப்படுகிறது.
- எப்போதும் வெற்றியே பெற்றுத் திகழ்ந்த இவனது காலத்தில் வடக்கே
துங்கபத்திரை முதல் தெற்கே குமரிமுனை வரை விசயநகரப் பேரரசு பரவி நின்றது.
- ஒரிசா, உதயகிரி, கலிங்கம், இராய்ச்சூர், பீஜப்பூர் ஆகிய பகுதிகள்
விஜயநகரப் பேரரசுக்குள் கொண்டுவரப்பட்டன.
- கிருஷ்ணதேவராயனால்தான் முதன்முதலில் மதுரையில் நாயக்கச் சார்பாளர்
அமர்த்தப்பட்டனர்.
- இப்பேரரசன் கலை வளர்ச்சியிலும் சமயப் பணிகளிலும் பெரிதும்
ஈடுபட்டிருந்தான். இவன் வைணவத்தையும் சைவத்தையும் போற்றி வளர்த்தான்.
- திருச்சியில் உள்ள தெப்பக்குளமும், மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும் இவனது முயற்சியால் உருவானவை.
- இவன் பாழ்பட்டுக் கிடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும்,
திருச்சி தாயுமானவர் கோவிலையும் திருப்பணி செய்தான்.
- இவன் திருவரங்கப் பெருமாள் கோவிலுக்கு முந்நூறாயிரம் பொன்
செலவிட்டான்
- சிதம்பரக் கோயிலின் வடபுறத்துக் கோபுரத்தை எழுப்பிப் பேரும்
புகழும் பெற்றான்.
- கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் அளவற்ற கொடைகள் வழங்கினான்.
3. மீனாட்சி - சந்தாசாகிபு
நட்புறவினை விளக்குக.
விசயரங்க சொக்கநாதனுக்கு
ஆண்மகன் பிறக்கவில்லை. எனவே, அவன் மனைவி மீனாட்சியே ஆட்சிப் பொறுப்புகளை 1732இல் ஏற்றுக்கொண்டாள்.
பங்காரு திருமலை என்பவன் மகன் விசயகுமாரனைத் தத்தெடுத்து வளர்த்தாள். ஆனால் தன் மகன்
வளர்ந்து அரசனாகும் வரை காத்திருக்க முடியாத பங்காரு திருமலை நாயக்கன் தளவாய் வேங்கடாசாரியாருடன்
இணைந்து மீனாட்சியை அரியணையிலிருந்து இறக்குவதற்குப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டான்.
அதேசமயம் ஆர்க்காட்டு நவாப் மதுரையையும் தஞ்சையையும் தாக்கி அழிக்குமாறும், அந்தச்
சீமைகளிலிருந்து திறைகவர்ந்து வருமாறும் தன் மகன் சப்தர் அலியையும் மருமகன் சந்தா சாயபுவையும்
பெரும்படையுடன் அனுப்பினான். அவர்களும் திருச்சிராப்பள்ளியை நெருங்கினர்.
தானாகக் கிடைத்த
இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நன்றிகெட்ட பங்காரு திருமலை தயங்கவில்லை. அவன்
சப்தர் அலிக்கு இலஞ்சத்தை வாரிக்கொடுத்து அவனைத் தன் கட்சிக்கு மடக்கிக் கொண்டான்.
அவனும் பங்காரு நாயக்கனுக்கும் மீனாட்சிக்கும் இடையே நடந்துகொண்டிருந்த அரசுரிமைப்
பூசல்களில் தலையிட்டு விசாரித்துத் தீர்ப்பு கூறுவதாக வாக்களித்தான். ஆனால் மீனாட்சி
சப்தர் அலியின் சொற்களை நம்பி ஏமாறவில்லை. எனவே, சப்தர் அலி பங்காரு நயக்கனின் கட்சியில்
சேர்ந்துகொண்டு சந்தா சாயுபுவிடம் இவ்வழக்கை ஒப்படைத்தான்.
சந்தாசாயுபு மீனாட்சியுடன்
உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டான். அதன்படி மீனாட்சி தரும் ஒரு கோடி ரூபா இலஞ்சத்தைப்
பெற்றுக்கொண்டு திருச்சியை விட்டுப் போய்விடுவதாக திருக்குரானின் மீது சத்தியம் செய்து
கொடுத்தான். ஆனால் அவன் தன் படைகளை மதுரையை நோக்கிச் செலுத்தினான். இதனை உணர்ந்த மீனாட்சி
பங்காரு நாயக்கன், தன் சுவீகார மகன் இருவர் தலைமையிலும் பெரும்படையொன்றை மதுரையைக்
காப்பாற்ற அனுப்பிவைத்தாள். தன் எண்ணம் நிறைவேறாததால் சந்தா சாயுபு மனம் புழுங்கித்
தவித்தான். பெரும்படையொன்றைத் திரட்டிக்கொண்டு மீண்டும் ஒரு முறை திருச்சி மீது படையெடுத்து
வந்தான் (1936).
சந்தாசாயுபு மீனாட்சியுடன்
இணக்கமாகப் பேசி அவள் பகையை வென்று அவளுக்கு நல்லாட்சி தருவதாக வாக்குறுதி கொடுத்தான்.
இதனை நம்பி மீனாட்சி தன் ஆட்சியுரிமை முழுவதையும் அவனுக்குத் தந்தாள். இதைப் பயன்படுத்தி
சந்தாசாயுபு பங்காரு திருமலை இருந்த திண்டுக்கல்லை நோக்கி பெரும்படையொன்றை அனுப்பினான்.
பங்காரு திருமலை தோல்வியடைந்தான். சந்தா சாயுபு எதிர்ப்பற்றுக் கிடந்த மதுரை தேசம்
முழுவதையும் தனதாக்கிக் கொண்டான். இராணி மீனாட்சியையும் சிறையில் அடைத்தான். தனக்கு
நேர்ந்த அவமானம் தாங்காதவளாக மீனாட்சி நஞ்சுண்டு மாண்டாள்(1736). துரோகி பங்காரு திருமலையும்
அன்வாருதீன் கைகளால் மாண்டான். அவன் மகன் விசயகுமாரன் அரசனாகும் வாய்ப்பிழந்து சிவகங்கைச்
சீமையில் தஞ்சம் புகுந்தான். அத்துடன் மதுரை நாயக்கர் பரம்பரையும் மறைந்து போயிற்று.
4. மதுரை திருமலை
நாயக்கரின் ஆட்சித் திறத்தைப் புலப்படுத்துக.
திருமலை சவுரி
நாயினு அய்யலுகாரு என்னும் இயற்பெயரை உடைய திருமலை நாயக்கன் கி.பி. 1625 முதல்
1659 வரை ஆட்சி புரிந்தான். திண்டுக்கல், திருநெல்வேலி, திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி,
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், கோவை, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள்
இவனது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. நாயக்கர் வரலாற்றில் இவனுக்கெனத் தனிச்சிறப்புக்கள்
சில உள்ளன.
தனிச் சிறப்புக்கள்:
i.
விசயநகரப் பேரரசின்
சார்பு ஆட்சியாக விளங்கிய அரசைத் தன்னுரிமை பெற்ற தனி அரசாக மாற்றியமைத்த பெருமை திருமலை
நாயக்க மன்னனைச் சாரும். பேரரசின் தாக்குதலில் இருந்து விலகி நிற்கும் நோக்கத்துடன்
திருச்சியில் இருந்து தலைநகரை மதுரைக்கு மாற்றினான்.
ii.
மதுரையை ஒரு கலைக்கூடமாக்கிய
பெருமை இவனுக்கு உரியது. மதுரைத் தெப்பக்குளம், புதுமண்டபம் என அழைக்கப்படும் வசந்த
மண்டபம், இராயகோபுரம், திருமலை நாயக்கர் மகால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள
முக்குறுணிப் பிள்ளையார் கோவில் ஆகியவை இவனது படைப்புக்கள்.
iii.
மதுரையைத் திருவிழாக்களின்
நகரமாக ஆக்கினான். தெப்பத்திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும், வசந்த விழாவும் இவன்
காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டவை.
iv.
கிறித்துவ சமயம்
பரப்ப வந்த மேனாட்டுத் தூதுக் குழுக்களுக்கு ஆதரவு தந்து தனது சமயப் பெருந்தன்மையை
நிலைநாட்டியவன். சைவக் கடவுளாகிய மீனாட்சிக்கும், வைணவக் கடவுளாகிய கள்ளழகருக்கும்
எடுக்கப்பட்ட விழாக்களைச் சித்திரைத் திருவிழா என்ற பெயரால் ஒன்றிணைத்து சமயப் பொதுநோக்கை
உருவாக்க முயன்றான்.
v.
தங்கள் வீரர்களை
அவமாப்படுத்திய மைசூர்ப் படையினரையும் மைசூர் மன்னரையும் மூக்கறுத்து அவமானப்படுத்த
கிழவன் சேதுபதி தலைமையில் படையை அனுப்பி வென்றான்.
vi.
திருவாங்கூர்
மன்னன் திருவடிகளை வென்று திறை செலுத்த வைத்தான். இராமநாதபுரச் சீமையில் வாரிசுரிமைப் போட்டியில் ஈடுபட்ட தம்பிக்கு உதவி,
தளவாய் சேதுபதியைச் சிறையில் அடைத்தான். பின் மக்களின் மனநிலையை உணர்ந்து தளவாய் சேதுபதிக்கே
ஆட்சியுரிமையை வழங்கினான்.
vii. பல போர்களில் தமது படைவலிமையினாலும் அறிவுக் கூர்மையாலும்
வென்றவன் என்ற பெருமையுடையவன். ஆனால் இறுதியில் முஸ்லீம் சுல்தான்களை உதவிக்கழைத்து
மீண்டும் தமிழகத்தில் இஸ்லாமியர் ஆதிக்கத்துக்குக் காரணமானவன் என்ற பழியையும் சுமப்பவன்.
5. கட்டபொம்மனின்
வீரத்தைப் புலப்படுத்துக அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து விளக்குக.
கி.பி. 1790 முதல்
1799 வரை பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவன் தொடக்கத்தில் ஆங்கிலேய
மேலாளரை அனுசரித்துப் போகும் கொள்கை கொண்டிருந்தான். வரிவசூல் செய்யும் சாக்கில் ஊர்
ஊராக வேண்டுமென்றே இடம் மாறிக்கொண்டிருந்த ஜாக்சனைச் சந்திக்க கையில் வரிப்பணத்துடன்
பின்தொடர்ந்து அலைந்தான். இறுதியில் இராமநாதபுரத்தில் சந்தித்த கட்டபொம்மனை ஜாக்சன்
இழிவுப்படுத்திய முறைகளும், கைது செய்ய எடுத்த முயற்சிகளும் அவனை அங்கிருந்து தப்பிச்சென்று
புரட்சி செய்யத் தூண்டின. நாகலாபுரம், மன்னார்கோட்டை, கோலார்ப்பட்டி ஆகிய பளையங்கள்
உள்ளடக்கிய திருநெல்வேலிக் கூட்டிணைப்பு ஒன்றை அவன் ஏற்படுத்தினான்.
பாளையங்களை ஆங்கில
நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் நோக்குடனும், அரசுக்கு எதிராகப் பாளையங்களைக் கூட்டிணைத்த
கட்டபொம்மனைத் தண்டிக்கும் எண்ணத்துடனும் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுக்க ஆங்கில
அரசு தீர்மானித்தது. கி.பி. 1799இல் பாஞ்சாலங்குறிச்சி மீது பானர்மேன் படைதொடுத்தான்.
ஊமைத்துரையின் தற்காப்புப்படை துணைநின்றும், பாதுகாப்பற்றுப்போன பாஞ்சாலங்குறிச்சிக்
கோட்டையிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் தன் படைகளுடன் வெளியேறினான். ஆனாலும் ஆங்கிலேயப்
படை கோலார்ப்பட்டியில் வீரபாண்டியனை இடைமறித்துப் போரிட்டு அவனைத் தோற்கடித்தது. பின்னர்
திருநெல்வேலி கூட்டிணைப்பைச் சார்ந்த பாளையங்கள் அனைத்தையும் கைப்பற்றியது. கி.பி.
1799 அக்டோபர் 16ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டான். அவனது உறவினர்கள்
சிறையிலடைக்கப்பட்டனர்.
6. விடுதலைப் போராட்டத்தில்
மருதுபாண்டியர் பங்களிப்பு குறித்து விளக்குக.
கி.பி. 1780 முதல்
1801 வரை சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள். சின்ன மருது, பெரிய மருது
என அழைக்கப்படும் இவர்களின் புரட்சிக்கோட்டையாகக் காளையார்கோவில் விளங்கியது. ஆங்கிலேயர்க்கு
எதிரான புரட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பாக இவர்கள் ஒரு கூட்டிணைப்பை உருவாக்கினர்.
இது சிவகங்கைக் கூட்டிணைப்பு என அழைக்கப்பட்டது.
கி.பி. 1799இல்
மைசூர்ப் போர் தொடங்கியபோது தென் மண்டலங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப்
படைகள் மைசூர்ப் போர்க்கு உதவியாகத் திரும்ப அழைக்கப்பட்டன. இச்செயல் மருது சகோதரர்களுக்கும்
பிற புரட்சியாளர்களுக்கும் சாதகமாக அமைந்தது. அவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய
இடங்களில் இருந்த ஆங்கிலேயரின் காவல் நிலையங்களைத் தாக்கிப் படைக்கருவிகளையும் வெடிமருந்துகளையும்
கைப்பற்றினர்.
புரட்சிக்காரர்களின்
இச்செயலைத் தண்டிக்கும் நடவடிக்கையாகக் கி.பி. 1801 செப்டம்பர் மாதம் காளையார்கோவில்
ஆங்கிலேயரால் தாக்கப்பட்டது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்களுக்கு முன் தமிழர்களின் வாளும்
வேல்கம்பும் எடுபடவில்லை. மருதுபாண்டியரும் அவரது வீரர்களும் காட்டில் மறைந்திருந்து
கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தினர். புரட்சியாளர்களின் குகை என மதிக்கப்பட்ட திண்டுக்கல்,
சிவகங்கைக் கோட்டைகள் சிதைக்கப்பட்டன. பின்னர் மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார்கோவிலை
இடித்துத் தரைமட்டம் ஆக்குவோம் என்று மிரட்டி அவர்களைப் பணியவைத்தனர். மருதுபாண்டியர்,
கோபாலன் உள்பட எழுபத்துமூவர் தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான முறைப்படுத்தப்பட்ட
போராக இது கருதப்படுகிறது.
7. வேலூர்ப் புரட்சி அல்லது வேலூர்க்
கலகம் அல்லது சிப்பாய்க் கலகம் - குறிப்பு
தருக.
கி.பி. 1806ஆம்
ஆண்டு ஆங்கிலேய அரசு ஆயுதப்படைகளில் சில சீர்திருத்தங்களைச் செய்தது. இவ்விதிகளின்படி,
i. படைவீரர்கள் ஐரோப்பியரது தலைப்பாகை போன்ற புதிய தலைப்பாகையை
அணிந்துகொள்ள வேண்டும்.
ii. மீசை, தாடி வைத்துக் கொள்ளக்கூடாது.
iii. சாதி, சமய வேறுபாடுகளைச் சுட்டும் நெற்றிப்பொட்டு, காதணி
போன்றவற்றை இடக் கூடாது.
இச்சீர்திருத்தங்கள்
உள்நாட்டுப் படைவீரர்களின் சமய உணர்ச்சிகளைத் தூண்டின; கிறித்துவ சமயத்திற்குத் தங்களை
மாற்ற எடுத்த மறைமுக முயற்சி என்ற உள்ளுணர்வைத் தூண்டின. ஊதிய உயர்வின்மை, பதவி உயர்வு
தரப்படாமை, ஆங்கிலேய அதிகாரிகளின் கெடுபிடி, தவறு கண்டவிடத்துத் தரப்பட்ட தண்டணையின்
கொடூரம் ஆகியவற்றால் மனக்கசப்படைந்து நின்ற படைவீரர்கள், இச்சீர்த்திருத்தங்களுக்குக்
காட்டிய எதிர்ப்பு இறுதியில் பெருங்கிளர்ச்சியாக உருவெடுத்தது. வெல்லெஸ்லியின்
"ஆக்கிரமிப்புக் கொள்கை"யால் வெறுப்படைந்த இந்திய அரசமரபினர் படைவீரர்களுடன்
தொடர்பு கொண்டு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர். இக்கிளர்ச்சி வேலூர்க் கோட்டைக்குள்
நடைபெற்றமையின் இது வேலூர்ப் புரட்சி அல்லது
வேலூர்க் கலகம் அல்லது சிப்பாய்க் கலகம் என அழைக்கப்பட்டது.
வேலூர்க் கோட்டையைக்
கைப்பற்றுவது என்ற நோக்குடன் கி.பி. 1806 ஜூலை பத்தாம் நாள் புரட்சியில் இறங்கிய படைவீரர்கள்
ஐரோப்பியர் மிகுந்திருந்த படைப்பிரிவையும், ஐரோப்பிய அதிகாரிகளின் குடியிருப்புகளையும்
கடுமையாகத் தாக்கினர். எனினும் இப்புரட்சி மிக விரைவில் ஒடுக்கப்பட்டது. இம்மோதலில்
100 ஐரோப்பியர்களும் 300 உள்நாட்டுப் படைவீரர்களும் உயிரிழந்தனர்.
வேலூர்க் கலகத்தின் விளைவுகள்
வேலூர்க் கலகத்திற்குப்
பிறகு சென்னை ஆளுநர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சிக்கல் தோன்றக் காரணாயிருந்த
விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின்
மக்கள் இக்கிளர்ச்சியைத் தூண்டியதாகக் கருதப்பட்டமையின் அவர்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர்.
15
மதிப்பெண் வினாக்கள்
1. தமிழகத்தில்
13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை உருவான இலக்கியங்களின் சிறப்பினை விளக்கிக் கட்டுரை
வரைக.
முன்னுரை
தமிழகத்தில் சோழர்
ஆட்சிக்குப் பிறகு பாண்டியர் ஆட்சி தோன்றியது. ஆனால் பாண்டியர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மை
காரணமாக இசுலாமியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. இந்த இசுலாமியர்கள் இந்துக்களின்
சமய உணர்விற்குப் பாதகம் செய்தனர். அதன் காரணமாக இசுலாமியர் ஆட்சியை ஒழிக்க சிலர் திட்டமிட்டனர்.
இம்முயற்சியின் பயனாக விஜயநகரப் பேரரசு துங்கபத்திரா நதிக்கரையில் உருவானது. அதே நேரத்தில்
கி.பி. 1538இல் குமாரகம்பண்ணன் என்பவர் இசுலாமியர்களை வென்று மதுரையில் நாயக்கர் அரசுக்கு
அடிகோலினார். அது முதல் நாயக்கர் ஆட்சி மதுரையில் ஏறக்குறைய 400 ஆண்டுகள் நிலைத்திருந்தது.
இலக்கியப் போக்கு:
நாயக்கர் காலக்
கட்டத்தில் சோழர் ஆட்சிக் காலம் போன்று பெரிய காப்பியங்களும் புராணங்களும் தோன்றவில்லை.
எனினும், பல சிற்றிலக்கியங்களும் சில இலக்கண நூல்களும் தோன்றின. அக்காலத்திய மொழி வரலாற்றை
அறியச் சிறந்த ஆதாரங்களாக இவை விளங்குகின்றன. தமிழிலும் வட மொழியிலும் பல சாத்திர நூல்களும்
தோத்திர நூல்களும் புராண நூல்களும் இயற்றப்பட்டன. வடமொழிச் சொற்கள் விரவிய தமிழ் உரைநடை
ஒன்று உருவாயிற்று. அதற்கு 'மணிப்பிரவாள நடை' என்று பெயர். ஸ்ரீ புராணம் என்னும் சமண
காப்பியம் வடமொழியில் இயற்றப்பட்டது.
வில்லிபாரதம்
வில்லிபுத்தூரார்
மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. இவர்,
தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர்,
பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை
என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து
வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இவர்
அருணகிரிநாதருடன் வாதங்களில் ஈடுபட்டவர் என்பதால் அவர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டே வில்லிபுத்தூராரது
காலம் என்று கணிக்கப்படுகின்றது. வரந்தருவார் என்று வில்லிபுத்தூராருக்கு ஒரு மகன்
இருந்தார்; அவரும் புலமையாளர் என்பது தம் தந்தையின் நூலுக்கு அவர் வழங்கிய சிறப்புப்
பாயிரத்தால் அறிகின்றோம்.
வில்லிபாரதம்,
வடமொழியில் வியாசர் எழுதிய மாகாபாரத நூலைத் தழுவியது. எனினும், வடமொழிப் பாரதத்தின்
முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். மிகப்பெரிய நூலான மகாபாரதத்தைச்
சுருக்கி 4351 பாடல்களில் தந்துள்ளார். வியாச பாரதத்தில் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான
பகவத்கீதை வில்லிபாரதத்தில் உள்ளடக்கப்படவில்லை. வில்லிபாரதம் பெருமளவு சமஸ்கிருதக்
கலப்புக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்
தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப்
புகழ்பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ்மொழி, வடமொழி ஆகிய
இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார்.
கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய
திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள்
உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
அருணகிரிநாதர்
பற்றிய பல வரலாறுகள் உண்டு. ஒன்றுக்கேனும் சான்றுகள் காணப்படவில்லை. இவர் பிரபுடதேவராயன்
என்ற விசயநகர மன்னன் காலத்தவர். இவர் ஊர்தோறும் சென்று முருகர்மேல் அழகிய, இனிய தமிழில்
புகழ்மாலைகள் சாத்தி வந்தார். இவருடைய பாடல்களுக்குத் 'திருப்புகழ்' என்றே பெயர் வழங்கி
வரலாயிற்று. அருணகிரிநாதர் தன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் முற்பகுதியில் தாசிகளின் உறவினால்
நேரிடும் கேடுகளை மிக விரிவாக விளக்குகின்றார். பட்டினத்தார் போன்றவர்களும் பிறகு வந்த
சமயத்தலைவர்களும் 'பெண்களைப் பழித்தல்' என்னும் மரபு ஒன்றைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
அருணகிரிநாதர்
வில்லிபுத்தூராரையும் சம்பந்தாண்டார் என்ற சாக்த வழிபாட்டினரையும் வென்றார் என்ற செவிவழி
வரலாறு உண்டு. அருணகிரிநாதர் கந்தரந்தாதி, கந்தரநுபூதி, வேல்விருத்தம், மயில்விருத்தம்,
திருவகுப்பு முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சொற்சுவையும், இசை வளமும்,
தாளக்கட்டும் பொருந்திய சந்தப் பாடல்களாம். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல்
மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர்
கொள்ளுகின்றனர்.
கச்சியப்ப சிவாச்சாரியார்
காஞ்சிபுரத்தில்
குமரக்கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த கச்சியப்ப சிவாசாரியார் 10,346 விருத்தப் பாடல்களில்
கந்த புராணம் என்னும் நூலைப் பாடினார். அது மாபெரும் காவியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இப்புராணம் முருகக் கடவுளின் கதையை விரித்துரைக்கின்றது. சைவ சித்தாந்தத்தின் தத்துவங்கள்
பல இடங்களில் கதைப் பாத்திரங்கள் வாயிலாக விளக்கப்படுகின்றன. கந்தபுராணம் ஒரு கலைக்களஞ்சியமாகவே காட்சியளிக்கின்றது.
கச்சியப்ப சிவாச்சாரியார்
காலத்தில் காணப்பட்ட பல பழக்கங்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. குளத்தில் நீருக்குள்
ஈட்டிகளை நாட்டித் தலைகீழாக அதில் விழும் வழக்கம் காஞ்சிபுரத்தில் இருந்தது. அதற்கு
'கருமாறிப் பாய்தல்' என்று பெயர். திருமணத்தில் மணமகளின் காலை மணமகன் அம்மிமேல் எடுத்துவைத்தல்,
அவளுக்கு அருந்ததி கட்டுதல், மணமகன் அடிகளை மாமியார் பாலினால் கழுவுதல், மணமகளைத் தத்தம்
செய்து கொடுத்தல் ஆகிய மணவினைகள் கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளன. காற்றாடிப் பட்டம்
பறக்கவிடுதல், புனல் விளையாடுதல், கள் குடித்தல், கடாச் சண்டை செய்தல், யானைப்போர்,
கோழிப்போர் ஆகிய பொழுதுபோக்குகளில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
உரையாசிரியர்கள்
பவணந்தி முனிவரின்
நன்னூலுக்குச் சிறந்த உரை எழுதிய மயிலைநாதரும், உரையாசிரியர்களுள் தலைசிறந்தவரான நச்சினார்க்கினியரும்,
திருக்குறள் உரையாசிரியர்களுள் தலைசிறந்தவரான பரிமேலழகரும் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்
ஆவர்.
இரட்டைப் புலவர்கள்
இரட்டைப்புலவர்
அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப்
புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும்,
மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை
பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு
வழி நடத்தி செல்வார் என்றும் தெரிகிறது. இவர்கள் சிலேடையாகப் பாடுவதில் வல்லவராவர்.
இவர்கள் சோழ நாட்டில் உள்ள ஆலந்துறையில் செங்குந்தர் குலத்தில் அத்தை மகன் மாமன் மகனாக
பிறந்தவர்கள். வரபதியாட்கொண்டார் என்னும் சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பர்.
தெய்வத் திருவருளினால்
கவி வகை எல்லாம் கசடறப் பாடுவதில் வல்லவர்கள். கலம்பகம் பாடுவதில் சிறப்புத் திறமை
உடையவர்கள் என்பதால் “பண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்” என்னும் பாடற் புகழும் பெற்றவர்கள்.
முன்னீரடிகளையும் ஒருவர் பாடப் பின்னீரடிகளையும் மற்றவர் பாடி முடிப்பர்.
பாடிய நூல்கள்
தில்லைக் கலம்பகம்,
காஞ்சி ஏகாம்பர நாதருலா, காஞ்சி ஏகாம்பரநாதர் வண்ணம், திரு ஆமாத்துர்க் கலம்பகம், தியாகேசர்
பஞ்சரத்தினம் முதலிய பிரபந்தங்கள் மற்றும் பல தனிநிலைப் பாடல்கள்.
பாடியதாகக் கூறப்படும் நூல்கள்
மூவர் அம்மானைப்
பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம், கச்சிக் கலம்பகம், கச்சி உலா.
காளமேகப்புலவர்
காளமேகம் என்ற
சிறப்புப் பெயர் பெற்ற புலவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பல கோயில்களுக்கும்
சென்று பாடல்கள் பாடினார். இவர் விரைவாக ஆசுகவிகள் பாடும் திறமையும் புலமையும் வாய்ந்தவர்;
எதையும் பொருட்படுத்தாமல் பிறருடைய குற்றத்தை எடுத்துக்காட்டி அதைக் களையும்பொருட்டுப்
பாடல்கள் பாடுவார்; வசை பாடுவதிலும் வஞ்சப் புகழ்ச்சி பாடுவதிலும் ஆற்றல் படைத்தவர்.
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர்
இயற்றிய நூல்களாகும்.
முடிவுரை
சோழர்காலத்தைப்
போன்று பெருங்காப்பியங்கள் தோன்றுவதற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையிலும் கந்தபுராணம்,
வில்லிபாரதம் போன்ற காப்பியங்கள் நாயக்கர் காலத்தில் தோன்றியுள்ளன. மேலும் அருணகிரிநாதர்,
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள் போன்ற புகழ்மிக்கப் புலவர்களும் இக்காலத்தில் தோன்றியுள்ளனர்.
2. விசயநகர ஆட்சி
குறித்து விவரி.
முன்னுரை
முஸ்லீம் ஆட்சியிடமிருந்து
இந்து சமயத்தைக் காப்பது, அந்நிய சக்திகள் இந்து சமயப் பண்பாட்டை விழுங்கிவிடாமல் அவற்றைத்
தடுப்பது என்னும் நோக்கங்களுடன் விசயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. சுருங்கக் கூறின்
விசயநகரப் பேரரசு இந்து சமயப் புத்துயிர்ப்புக்கு வழிகோலியது எனலாம்.
விசயநகரின் தோற்றம்
டெல்லி சுல்தானின்
நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த ஹரிஹரன், புக்கன் ஆகியோர் சுல்தான்களின் நலன்களைக்
கவனித்துக் கொள்ளவும் கம்பிலியில் தோன்றிய கலகங்களை அடக்கவும் அங்கு அனுப்பப்பட்டனர்.
கம்பிலியில் இருந்துகொண்டு பல இடங்களையும் கைப்பற்றிய அவர்கள் "இந்துப் பண்பாட்டை
முஸ்லீம் தாக்குதலில் இருந்து காக்கும் பெரும்பொறுப்பை" ஏற்க முடிவுசெய்து தன்னாட்சி
பெற்றதாக அறிவித்துத் துங்கபத்திரை ஆற்றங்கரையில் கி.பி. 1336இல் விசயநகரை நிறுவினர்.
இப்பேரரசு இஸ்லாம்
தாக்குதலில் இருந்து இந்து சமயப் பண்பாட்டையும் மரபுகளையும் 300 ஆண்டுகாளம் காத்து
நின்றது. இக்காலத்தில் இந்து சமயப் புனிதத்தன்மையை அவமதிக்க எடுத்த முயற்சிகள் தடுத்து
நிறுத்தப்பட்டன. அரசியல், இலக்கியம், சமய உணர்வு, கலைகள் ஆகிய துறைகளில் இந்திய மரபுகள்
அழிந்து போகாமல் இருப்பதற்கு இப்பேரரசின் தோற்றம் காரணமாக விளங்கியது.
விசயநகரப் பேரரசின் ஆட்சிப்பரப்பும் சிறப்பும்
விசயநகரப் பேரரசை முறையே
i. சங்கம மரபு
ii. சாளுவ மரபு
iii. துளுவ மரபு
iv. ஆரவீடு மரபு ஆகிய நான்கு மரபுகள் ஆட்சி புரிந்தன.
பேரரசை நிறுவிய
முதலாம் ஹரிஹரன் சங்கம மரபினன். அவன் காகதிய நிர்வாக முறையைப் பின்பற்றிப் பேரரசின்
நிர்வாக முறையைச் சீர்ப்படுத்தினான். அவனையடுத்து 20 ஆண்டு காலம் பேரரசில் வீற்றிருந்த
புக்கன் காலத்தில் பேரரசை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்றது. தென்னிந்தியாவின் பல பகுதிகள்
இவனது ஆட்சியை ஏற்றுக்கொண்டன.
புக்கனுடைய மகன்
குமாரகம்பணன் மதுரையில் இருந்த சுல்தான் ஆட்சியை ஒழித்தான். இவனது காலம் விசயநகர வரலாற்றின்
ஒளிமயமான பகுதி எனப் புகழப்படுகிறது. இவர்கள் அனைவரும் சங்கம மரபைச் சார்ந்தவர்கள்.
சந்திரகிரி ஆளுநராக இருந்தவனும், சாளுவமரபைச் சார்ந்தவனுமான நரசிம்மன் திறமையற்ற சங்கம
மரபு அரசனான புருடராயனை அகற்றிவிட்டுப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினான். ஆனால் அவனது
படைத்தலைவனாக இருந்தவனும் துளுவ மரபைச் சார்ந்தவனுமாகிய நரசநாயக்கன் நரசிம்மனைச் சிறைப்படுத்திவிட்டுப்
பேரரசனானான்.
நரசநாயக்கனை அடுத்து
கி.பி. 1509இல் கிருஷ்ண தேவராயன் ஆட்சிப்பீடம் ஏறினான். விசயநகரத்தின் மிகச்சிறந்த
காலமாகக் கருதப்படுவது இவனது காலமாகும். எப்போதும் வெற்றியே பெற்றுத் திகழ்ந்த இவனது
காலத்தில் வடக்கே துங்கபத்திரை முதல் தெற்கே குமரிமுனை வரை விசயநகரப் பேரரசு பரவி நின்றது.
ஒரிசா, உதயகிரி, கலிங்கம், இராய்ச்சூர், பீஜப்பூர் ஆகிய பகுதிகள் விசயநகரப் பேரரசுக்குள்
கொண்டு வரப்பட்டன. கிருஷ்ணதேவராயனால்தான் முதன்முதலில் மதுரையில் நாயக்கச் சார்பாளர்
அமர்த்தப்பட்டனர்.
விசயநகர வீழ்ச்சி
கிருஷ்ணதேவராயருக்குப்
பின் விசயநகரம் வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணம் செய்தது. கிருஷ்ணதேவராயனை அடுத்து
அச்சுதராயன் வந்தான். அவனை அடுத்து ஆட்சியில் அமர்ந்த சதாசிவராயன் காலத்தில் பேரரசு
முழுவதும் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்தன. அவன் பெயரளவுக்கு அரசனாக விளங்க, அரசியல்
பொறுப்புக்கள் அனைத்தும் அமைச்சர் இராமராயனிடம் இருந்தன. 1565இல் ஏற்பட்ட தலைக்கோட்டைப்
போர் விசயநகரை மறைந்துபோன பேரரசாக மாற்றியமைத்தது. இராமராயனின் செருக்குமிக்க நடத்தை,
நீண்டகாலமாகப் புகைந்து கொண்டிருந்த தக்காண சுல்தான்களின் பகைமையைக் கிளறிவிட்டது.
அவனது அறிவில்லாத ஆணவமும், சுயநலமும், அவனது இரு முஸ்லீம் படைத்தலைவர்கள் செய்த துரோகமும்
பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய முஸ்லீம் நாடுகள் தென்னகத்தை வெல்வதை எளிதாக்கிவிட்டன.
போரில் இராமராயன்
சிறைப்பிடிக்கப்பட்டான். அவனது தலை வெட்டப்பட்டு அனைவருக்கும் தெரியுமாறு ஈட்டி முனையில்
மாட்டிக் காண்பிக்கப்பட்டது. அவன் இறந்ததை அறிந்ததும், அவனது தம்பி கிடைத்த செல்வங்களை
1500 யானைகளில் ஏற்றிக்கொண்டு பேரரசைப் பாதுகாப்பின்றி விட்டுவிட்டு பெனுகொண்டாவிற்குச்
சென்றுவிட்டான். அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த இந்துப்படைகள் தொடர்ந்து போர் புரிவதற்கோ,
தலைநகரைக் காப்பதற்கோ எவ்வித முயற்சியும் செய்யவில்லை; தலைநகரை நோக்கி அவை புறமுதுகிட்டன.
வெற்றிபெற்ற முஸ்லீம்
படையினர், வெறிபிடித்த மதயானையைப் போன்று விசயநகருக்குள் நுழைந்து மக்களைக் கொன்று
குவித்தனர். கட்டிடங்களை நாசமாக்கினர். முஸ்லீம் படையினரால் பெரும் அழிவைச் சந்தித்த
விசயநகரம் பிற்காலத்திலும் அதிலிருந்து மீளவே இல்லை.
3. மதுரை நாயக்கர்கள்
குறித்து கட்டுரை வரைக.
முன்னுரை
விஜயநகர நாயக்க
மன்னர்கள் காலத்தில், செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில், நாயக்கர்
ஆட்சி ஏற்பட்டது. தஞ்சையில் கி.பி. 1532-லும் செஞ்சியில் கி.பி. 1526-லும் மதுரையில்
கி.பி. 1529-லும் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப்
பேரரசுக்கு அடங்கியிருந்து, பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின. மதுரை நாயக்கர்களே
நீண்ட காலம் அரசு செய்தவர்கள்.
தமிழக வரலாற்றில்
மிக உயர்ந்த காலங்களுள் ஒன்றாக நாயக்கர் காலம் மதிக்கப்படுகிறது. கி.பி. 1529 முதல்
1736 வரை 207 ஆண்டுகள் தமிழகத்தில் நாயக்கராட்சி நடைபெற்றது. விசுவநாத நாயக்கன் முதல்
அரசி மீனாட்சி வரை 13 பேர் இக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் பாளையப்பட்டு
என்னும் புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தியமையால் விசுவநாத நாயக்க மன்னனும், ஆட்சிப்
பரப்பிலும் அரிய கலைப்படைப்பிலும் சிறந்து விளங்கி, தன்னுரிமை பெற்ற முதல் நாயக்க மன்னன்
என்ற முறையில் திருமலை நாயக்க மன்னனும், பெண்ணரசி என்ற முறையில் மங்கம்மாளும் நாயக்க
மன்னர்களுள் குறீப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சாவழி
விசுவநாத நாயக்கர் (1529 -
1564)
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
(1564 - 1572)
வீரப்ப நாயக்கர் (1572 -
1595)
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்) (1601
- 1609)
முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (முத்துகிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்) (1609 - 1623)
திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப
நாயக்கரின் இளைய மகன்) (1623 - 1659)
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
சொக்கநாத நாயக்கர் (இராணிமங்கம்மாள்
கணவர்) (1659 - 1682)
அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
இராணி மங்கம்மாள் (சொக்கநாதரின்
மனைவி) (1689 - 1706)
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (சொக்கநாதரின்
மகன்) (1706 - 1732)
இராணி மீனாட்சி (விஜயரங்கநாதரின்
மனைவி) (1732 - 1736)
விசுவநாத நாயக்கன் (கி.பி. 1529-1564)
மதுரையில் புகழ்பெற்ற
நாயக்க மரபினர் ஆட்சியைத் தொடங்கிய பெருமை விசுவநாதனையே சாரும். தென்னாட்டில் விசயநகரப்
பேரரசு செய்த போர்களில் பெரும்பங்கு ஏற்றமைக்காகத் தரப்பட்ட பரிசு இது.
அரசியல் பணிகள்
பாளையப்பட்டு
என்னும் ஆட்சிமுறை தளவாய் அரியநாதனின் அறிவுரையின்படி இவனால் தோற்றுவிக்கப்பட்டது.
அமைதிக்காலம், போர்க்காலம் ஆகிய இரண்டு சூழலுக்கும் பயன்படும் விதத்தில் இம்முறை உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ந்த போர்களால் அழிந்த "உள்ளூர்
ஆட்சிமுறைக்கு" மாற்றாக இது அளிக்கப்பட்டது. இம்முறையை எதிர்த்துத் தென்காசி,
திருநெல்வேலியில் உள்ள பாண்டியர்கள் கிளர்ச்சி செய்ததாகவும், அக்கிளர்ச்சி வன்மையாக
ஒடுக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.
கோவில் திருப்பணிகள்
திருச்சியில்
உள்ள தெப்பக்குளமும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும் இவனது
முயற்சியால் உருவானவை. இவன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், திருச்சி தாயுமானவர்
கோவிலையும் திருப்பணி செய்தான். மேலும் இவன் திருவரங்கப் பெருமாள் கோவிலுக்கு முந்நூறாயிரம்
பொன் செலவிட்டான் எனக் கோயில் ஒழுகு என்ற நூல் குறிப்பிடுகிறது.
திருமலை நாயக்கன் (கி.பி. 1623 - 1659)
திருமலை சவுரி
நாயினு அய்யலுகாரு என்னும் இயற்பெயரை உடைய திருமலை நாயக்கன் கி.பி. 1625 முதல்
1659 வரை ஆட்சி புரிந்தான். திண்டுக்கல், திருநெல்வேலி, திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி,
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், கோவை, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள்
இவனது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. நாயக்கர் வரலாற்றில் இவனுக்கெனத் தனிச்சிறப்புக்கள்
சில உள்ளன.
தனிச் சிறப்புக்கள்:
i.
விசயநகரப் பேரரசின்
சார்பு ஆட்சியாக விளங்கிய அரசைத் தன்னுரிமை பெற்ற தனி அரசாக மாற்றியமைத்த பெருமை திருமலை
நாயக்க மன்னனைச் சாரும். பேரரசின் தாக்குதலில் இருந்து விலகி நிற்கும் நோக்கத்துடன்
திருச்சியில் இருந்து தலைநகரை மதுரைக்கு மாற்றினான்.
ii. மதுரையை ஒரு கலைக்கூடமாக்கிய பெருமை இவனுக்கு உரியது. மதுரைத்
தெப்பக்குளம், புதுமண்டபம் என அழைக்கப்படும் வசந்த மண்டபம், இராயகோபுரம், திருமலை நாயக்கர்
மகால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள முக்குறுணிப் பிள்ளையார் கோவில்
ஆகியவை இவனது படைப்புக்கள்.
iii. மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக ஆக்கினான். தெப்பத்திருவிழாவும்,
சித்திரைத் திருவிழாவும், வசந்த விழாவும் இவன் காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டவை.
iv. கிறித்துவ சமயம் பரப்ப வந்த மேனாட்டுத் தூதுக் குழுக்களுக்கு
ஆதரவு தந்து தனது சமயப் பெருந்தன்மையை நிலைநாட்டியவன். சைவக் கடவுளாகிய மீனாட்சிக்கும்,
வைணவக் கடவுளாகிய கள்ளழகருக்கும் எடுக்கப்பட்ட விழாக்களைச் சித்திரைத் திருவிழா என்ற
பெயரால் ஒன்றிணைத்து சமயப் பொதுநோக்கை உருவாக்க முயன்றான்.
v. தங்கள் வீரர்களை அவமாப்படுத்திய மைசூர்ப் படையினரையும் மைசூர்
மன்னரையும் மூக்கறுத்து அவமானப்படுத்த கிழவன் சேதுபதி தலைமையில் படையை அனுப்பி வென்றான்.
vi. திருவாங்கூர் மன்னன் திருவடிகளை வென்று திறை செலுத்தவைத்தான். இராமநாதபுரச் சீமையில் வாரிசுரிமைப் போட்டியில்
ஈடுபட்ட தம்பிக்கு உதவி, தளவாய் சேதுபதியைச் சிறையில் அடைத்தான். பின் மக்களின் மனநிலையை
உணர்ந்து தளவாய் சேதுபதிக்கே ஆட்சியுரிமையை வழங்கினான்.
vii. பல போர்களில் தமது படைவலிமையினாலும் அறிவுக் கூர்மையாலும்
வென்றவன் என்ற பெருமையுடையவன். ஆனால் இறுதியில் முஸ்லீம் சுல்தான்களை உதவிக்கழைத்து
மீண்டும் தமிழகத்தில் இஸ்லாமியர் ஆதிக்கத்துக்குக் காரணமானவன் என்ற பழியையும் சுமப்பவன்.
மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706)
திருமலை நாயக்கனின்
பேரனாகிய சொக்கநாதனின் மனைவி மங்கம்மாள் ஆவாள். விசயரங்க சொக்கநாதன் குழந்தையாக இருந்தபோது
அவனது தந்தை முத்துவீரப்பன் இறந்துவிட்டதால் அக்குழந்தையின் சார்பில் அவனது பாட்டி
மங்கம்மாள் அரியணை ஏறினாள். தமிழக வரலாற்றில் அரியணை ஏறிய முதல் பெண்ணரசி இவளே.
அரசியல் பணிகள்
இக்காலத்தில்
டெல்லியில் ஒளரங்கசீப்பின் ஆட்சி நடைபெற்றது. தஞ்சை, செஞ்சி மராட்டியரை வென்று நின்ற
மொகலாயரின் படையாற்றலையும் தனது பலவீனத்தையும் சீர்தூக்கிப் பார்த்த மங்கம்மாள் திறை
செலுத்த இசைந்து டெல்லி சுல்தானுக்குப் பரிசில்களைக் கொடுத்தனுப்பினாள்.
தன்மீது படையெடுத்த
மைசூர் மன்னனையும் திறை செலுத்த மறுத்த திருவாங்கூர் மன்னனையும் மங்கம்மாள் வென்றாள்.
தஞ்சை மன்னன்
ஹாஜி கைப்பற்றிய தன் நாட்டுப் பகுதிகளை மொகலாயப் படைகளின் துணையுடன் மீட்டாள். தன்னுடன்
தஞ்சை மன்னன் புரிந்த போரில் அவனுக்குத் துணை நின்றமைக்காகச் சேதுபதியைத் தண்டிக்கும்
நோக்கத்துடன் அவன் மீது 1702இல் போர் தொடுத்தாள். ஆனால் இப்போரில் மங்கம்மாள் வெற்றி
பெறவில்லை.
சமூகப் பணிகள்
மங்கம்மாள் நல்ல
சாலைகள் அமைத்தாள்; சத்திரங்கள் கட்டினாள்; சாலையோரக் கிணறுகள் வெட்டினாள்; தண்ணீர்ப்
பந்தல்கள் ஏற்படுத்தினாள்; உழவுத்தொழிலின் வசதிக்காகப் பல பாசன வசதிகள் செய்து கொடுத்தாள்.
கிறித்துவர்களிடமும்
இஸ்லாமியர்களிடமும் கனிவோடும் சமயப் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டாள்.
இராணி மீனாட்சி (1732 - 1736)
விசயரங்க சொக்கநாதனுக்கு
ஆண்மகன் பிறக்கவில்லை. எனவே, அவன் மனைவி மீனாட்சியே ஆட்சிப் பொறுப்புகளை 1732இல் ஏற்றுக்கொண்டாள்.
பங்காரு திருமலை என்பவன் மகன் விசயகுமாரனைத் தத்தெடுத்து வளர்த்தாள். ஆனால் தன் மகன்
வளர்ந்து அரசனாகும் வரை காத்திருக்க முடியாத பங்காரு திருமலை நாயக்கன் தளவாய் வேங்கடாசாரியாருடன்
இணைந்து மீனாட்சியை அரியணையிலிருந்து இறக்குவதற்குப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டான்.
அதேசமயம் ஆர்க்காட்டு நவாப் மதுரையையும் தஞ்சையையும் தாக்கி அழிக்குமாறும், அந்தச்
சீமைகளிலிருந்து திறைகவர்ந்து வருமாறும் தன் மகன் சப்தர் அலியையும் மருமகன் சந்தா சாயபுவையும்
பெரும்படையுடன் அனுப்பினான். அவர்களும் திருச்சிராப்பள்ளியை நெருங்கினர்.
தானாகக் கிடைத்த
இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நன்றிகெட்ட பங்காரு திருமலை தயங்கவில்லை. அவன்
சப்தர் அலிக்கு இலஞ்சத்தை வாரிக்கொடுத்து அவனைத் தன் கட்சிக்கு மடக்கிக் கொண்டான்.
அவனும் பங்காரு நாயக்கனுக்கும் மீனாட்சிக்கும் இடையே நடந்துகொண்டிருந்த அரசுரிமைப்
பூசல்களில் தலையிட்டு விசாரித்துத் தீர்ப்பு கூறுவதாக வாக்களித்தான். ஆனால் மீனாட்சி
சப்தர் அலியின் சொற்களை நம்பி ஏமாறவில்லை. எனவே, சப்தர் அலி பங்காரு நயக்கனின் கட்சியில்
சேர்ந்துகொண்டு சந்தா சாயுபுவிடம் இவ்வழக்கை ஒப்படைத்தான்.
சந்தாசாயுபு மீனாட்சியுடன்
உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டான். அதன்படி மீனாட்சி தரும் ஒரு கோடி ரூபா இலஞ்சத்தைப்
பெற்றுக்கொண்டு திருச்சியை விட்டுப் போய்விடுவதாக திருக்குரானின் மீது சத்தியம் செய்து
கொடுத்தான். ஆனால் அவன் தன் படைகளை மதுரையை நோக்கிச் செலுத்தினான். இதனை உணர்ந்த மீனாட்சி
பங்காரு நாயக்கன், தன் சுவீகார மகன் இருவர் தலைமையிலும் பெரும்படையொன்றை மதுரையைக்
காப்பாற்ற அனுப்பிவைத்தாள். தன் எண்ணம் நிறைவேறாததால் சந்தா சாயுபு மனம் புழுங்கித்
தவித்தான். பெரும்படையொன்றைத் திரட்டிக்கொண்டு மீண்டும் ஒரு முறை திருச்சி மீது படையெடுத்து
வந்தான் (1936).
சந்தாசாயுபு மீனாட்சியுடன்
இணக்கமாகப் பேசி அவள் பகையை வென்று அவளுக்கு நல்லாட்சி தருவதாக வாக்குறுதி கொடுத்தான்.
இதனை நம்பி மீனாட்சி தன் ஆட்சியுரிமை முழுவதையும் அவனுக்குத் தந்தாள். இதைப் பயன்படுத்தி
சந்தாசாயுபு பங்காரு திருமலை இருந்த திண்டுக்கல்லை நோக்கி பெரும்படையொன்றை அனுப்பினான்.
பங்காரு திருமலை தோல்வியடைந்தான். சந்தா சாயுபு எதிர்ப்பற்றுக் கிடந்த மதுரை தேசம்
முழுவதையும் தனதாக்கிக் கொண்டான். இராணி மீனாட்சியையும் சிறையில் அடைத்தான். தனக்கு
நேர்ந்த அவமானம் தாங்காதவளாக மீனாட்சி நஞ்சுண்டு மாண்டாள்(1736). துரோகி பங்காரு திருமலையும்
அன்வாருதீன் கைகளால் மாண்டான். அவன் மகன் விசயகுமாரன் அரசனாகும் வாய்ப்பிழந்து சிவகங்கைச்
சீமையில் தஞ்சம் புகுந்தான். அத்துடன் மதுரை நாயக்கர் பரம்பரையும் மறைந்து போயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக