சனி, 13 பிப்ரவரி, 2021

தமிழக வரலாறும் பண்பாடும் – II வினா வங்கி

தமிழக வரலாறும் பண்பாடும் – II வினா வங்கி

வினா வங்கி

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.       'பொன்மாளிகை துஞ்சியதேவன்' - யார்? அவ்வாறு அழைக்கக் காரணம் என்ன?

2.       முதலாம் இராசராசனின் விருதுப்பெயர்களைக் குறிப்பிடுக.

3.       உதிரப்பட்டி என்றால் என்ன?

4.       சோழர் காலத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் சிலரின் பெயர்களை எழுதுக.

5.       வரகுண பாண்டியன் குறிப்பு வரைக.

6.       சிதம்பரத்தில் பொன்னம்பலத்தைப் பெயர்த்தெடுத்து கோயிலுக்கு எரியூட்டிய கொடுமைக்காரன் யார்?

7.       மதுரையைச் சுல்தான்களின் பிடியிலிருந்து விடுவித்தவன் யார்?

8.       இந்தியாவுக்குள் முதன்முதலில் அடியெடுத்துவைத்த ஐரோப்பியர் யார்?

9.       தீர்த்தகிரி யார்? எங்கு வாழ்ந்தான்?

10.   "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக" - என்று கூறியவர் யார்?

11.   ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இந்தியா பெற்றிருந்த அமைதியைச் "சமாதிக்குள் காணப்படும் அமைதி" என்று கூறியவர் யார்?

12.   இருபதாம் நூற்றாண்டில் வடமொழிக் கலப்பற்ற தூய தமிழ்நடையைக் கையாண்ட இருபெரும் புலவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

13.   திருப்புறம்பியப் போர் குறித்து எழுதுக.

14.   முதலாம் இராசராசனுக்குரிய விருதுப் பெயர்களைக் குறிப்பிடுக.

15.   சோழர் வீழ்ச்சிக்குக் காரணமானோர் யாவர்?

16.   சோழர் காலத்தில் நாடு எவ்வாறு பிரித்தறியப்பட்டது?

17.   சோழர் காலத்து ஆடை வகைகளைக் கூறுக.

18.   சோழர் காலத்து நம்பிக்கைகளைக் எழுதுக.

19.   சீமாற சீவல்லபன் குறித்து மகாவம்சம் கூறுவன யாவை?

20.   வேலூர் நாயக்கர் குறிப்பு வரைக.

21.   முதல் கருநாடகப் போர் யார் யாருக்கிடையே எப்பொழுது நடைபெற்றது?

22.   ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இருந்த நாணயங்கள் யாவை?

23.   வைக்கம் வீரர் யார்? அப்பெயர் பெறக் காரணம் என்ன?

24.   சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட பகுதிகள் எவை?

25.   விசயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றிய பின் எழுப்பிய கோயில் பெயர் யாது?

26.   'பொன்மாளிகை துஞ்சியதேவன்' - யார்? அவ்வாறு அழைக்கக் காரணம் என்ன?

27.   விக்கிரமச் சோழன் பெற்ற விருதுகள் இரண்டனை எழுதுக.

28.   இராசராசனின் மெய்க்கீர்த்திகள் எவ்வாறு அடைமொழியுடன் உள்ளன?

29.   இராசேந்திரன் எழுப்பிய கோயிலின் பெயர் யாது?

30.   முதலாம் பராந்தகனை அடுத்துப் பட்டத்திற்கு வந்த மாமன்னர்கள் இருவரைக் குறிப்பிடுக.

31.   பிற்காலச் சோழப் பேரரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது? தம் வெற்றியின் நினைவாக அவர் எழுப்பிய கோயில் எது?

32.   ஒன்பதாம் திருமுறையில் பாடல் பாடிய சோழ அரசன் யார்? அவர் மனைவி பெயர் என்ன?

33.   முதலாம் இராசராசனின் விருதுப்பெயர்களைக் குறிப்பிடுக.

34.   வாண கோவர்கள் - குறிப்பு வரைக.

35.   முதலாம் பராந்தகனுக்குத் துணை நின்றோர் யாவர்?

36.   முதலாம் இராசேந்திரனின் மக்கட்பெயர்களைக் கூறுக.

37.   திருப்புறம்பியப்போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

38.   முதலாம் ஆதித்தனின் மக்கள் யாவர்?

39.   முதலாம் இராசேந்திரனின் பெற்றோர் யாவர்?

40.   மூன்று கை மாசேனை - விளக்குக.

41.   உதிரப்பட்டி என்றால் என்ன?

42.   திருவாய்க் கேள்வி - விளக்கம் தருக.

43.   சோழர் காலத்தில் மனைவியைக் குறித்து நின்ற சொற்கள் யாவை?

44.   சோழர் காலத்தில் நீதி வழங்கும் பொறுப்பு எவரிடம் இருந்தது?

45.   பிராமணருக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

46.   சோழர்காலப் பிராமணர்களின் குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

47.   குடவோலை முறை என்றால் என்ன?

48.   சோழர் காலத்தில் குடிமக்களுக்கு விதித்த வரிகள் நான்கினை எழுதுக.

49.   சோழர் காலத்தில் மருத்துவம் எந்நிலையில் இருந்தது?

50.   தேவரடியார் மேற்கொண்டிருந்த திருத்தொண்டுகளைக் கூறுக.

51.   காந்தளூர் அறச்சாலையின் சிறப்பு யாது?

52.   சோழர் காலத்தில் தஞ்சை மாநகர் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?

53.   சோழர் காலத்தில் பெண்கள் செய்த உயர்பணிகள் யாவை?

54.   சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்திருந்த இருபெரும் வாணிகத் துறைமுகப் பட்டினங்கள் யாவை?

55.   ஒன்பதாம் திருமுறையில் பாடல் பாடிய சோழ அரசன் யார்? அவர் மனைவி பெயர் என்ன?

56.   திருவாய்க் கேள்வி - விளக்கம் தருக.

57.   சோழர் காலத்தில் மனைவியைக் குறித்து நின்ற சொற்கள் எவை?

58.   சோழப் பேரரசர்கள் 'எவ்வெவ்வவதாரங்களாகக்' கருதப்பட்டனர்?

59.   வரகுண வர்மனுக்கு வழங்கிய வேறுபெயர் யாது?

60.   பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் வழங்கிய செப்பேடுகளைக் கூறுக.

61.   பாண்டியன் நெடுஞ்செழியன் பராந்தகன் செப்பேடுகள் கூறும் செய்திகளைக் குறிப்பிடுக.

62.   பாண்டிய நாடு குறித்துக் கூறும் வெளிநாட்டவர் யாவர்?

63.   நாயக்கர் கால வாணிகம் குறித்து எழுதுக.

64.   மணிப்பிரவாள நடை என்றால் என்ன?

65.   விசயநகரப் பேரரசு எப்போரில் வீழ்ச்சியுற்றது? ஆண்டு எது?

66.   வேலூரை ஆண்ட நாயக்கர் யார்? யாருடைய அரசின் கீழ் ஆட்சி புரிந்தான்?

67.   கிருஷ்ணதேவராயன் - குறிப்பு வரைக.

68.   வேலூர்க் கோட்டையைக் கட்டியவர் யார்? அவர் கட்டிய கோவில் பெயர் என்ன?

69.   இராணி மங்கம்மாள் செய்த சமூகத் தொண்டுகளை எழுதுக.

70.   தஞ்சை மராட்டிய அரசைத் தோற்றுவித்தவர் யார்? அவருடைய சகோதரர் யார்?

71.   கச்சியப்ப முனிவர் எழுதிய நூலையும் அவற்றின் சிறப்பினையும் குறிப்பிடுக.

72.   குமரகுருபரர் எழுதிய நூல்கள் நான்கினை எழுதுக.

73.   'ரோமாபுரி ஐயர்' என்பவர் யார்? அவ்வாறு அழைக்கக் காரணம் என்ன?

74.   ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பின் சிறப்பு அம்சங்கள் யாது?

75.   கிழக்கிந்தியக் கம்பெனி - சிறு குறிப்பு வரைக.

76.   மொழியாராய்ச்சியாளர்கள் இருவரைக் குறிப்பிடுக.

77.   ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்தவர் யார்? ஏன்?

78.   கிழவன் சேதுபதி மதுரை நாயக்கனுக்கு அளித்த பட்டம் எது?

79.   தமிழகத்தில் முஸ்லீம்களின் குடியேற்றம் தொடங்கியது எப்போது?

80.   சென்னையில் அச்சிடப்பெற்ற நாணயங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

81.   இந்தியாவில் முதன்முதலாக வந்த ஐரோப்பியர் யார்? அவரின் நோக்கம் யாது?

82.   'இரட்டை ஆட்சிமுறை' என்பது என்ன?

83.   கிழக்கிந்தியக் கம்பெனி யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?

84.   இந்திய வரலாற்றில் கருநாடகம் என அழைக்கப்பட்ட பகுதிகள் எவை?

85.   தீரன் சின்னமலை - விளக்கி எழுதுக.

86.   இரட்டையாட்சி என்றால் என்ன?

87.   மதுரையில் கிறித்துவ மிசன் யார் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது?

88.   கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றம் குறித்து விளக்குக.

89.   'ரயத்துவாரி முறை' என்றால் என்ன?

90.   'வைக்கம் வீரர்' எனப்பட்டவர் யார்? அவர் தோற்றுவித்த இயக்கம் யாது?

91.   சென்னை மாகாணம் எனப்பட்ட பகுதி எது?

92.   சென்னையில் தலைமை நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

93.   ஓமந்தூர் இராமசாமி தமிழகத்தின் முதலமைச்சராய் பதவியேற்றது எப்போது?

94.   சுயமரியாதை இயக்கத்தால் ஏற்பட்ட நன்மைகள் நான்கினை எழுதுக.

95.   'சைமன் கமிஷன்' திட்டக் குழுவின் செயல்பாட்டினைக் கூறுக.

96.   ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? அவர் எதிர்த்த திட்டம் எது?

97.   நீதிக் கட்சியால் தொடங்கப்பட்ட நாளேடுகளைக் குறிப்பிடுக.

98.   20-ஆம் நூற்றாண்டில் கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பெற்ற பல்கலைக்கழகங்கள் யாவை?

99.   திருவரங்கக் கல்வெட்டு மூலம் அறியவரும் செய்தி யாது?

 

 

ஏழு மதிப்பெண் வினாக்கள்

1.       விஜயாலய சோழன் - குறிப்பு வரைக.

2.       சோழப் பேரரசின் வீழ்ச்சி குறித்து எழுதுக.

3.       சோழர் காலத்தில் நீதி வழங்கப்பட்ட முறையை எழுதுக.

4.       சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சிறப்புகளைத் தொகுத்துரைக்க.

5.       "கிழக்கிந்தியக் கம்பெனி" என்னும் பெயரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து நாடு பிடித்ததை விவரி.

6.       சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழகத்தின் முதலமைச்சர்கள் பற்றி எழுதுக.

7.       தக்கோலப் போர் - குறிப்பு வரைக.

8.       சோழர் - கீழைச் சாளுக்கியர் உறவினை விளக்குக.

9.       சோழர்தம் படை பலம் குறித்து விவரிக்க.

10.   தஞ்சை பெரிய கோயில் சிறப்பினை விவரிக்க.

11.   வீரமாமுனிவர் ஆற்றிய தமிழ்ப் பணியை விளக்குக.

12.   போர்ச்சுக்கீசியர் வரவு குறித்து எழுதுக.

13.   நீதிக் கட்சியின் தோற்றத்தையும் அதன் பணிகளையும் விவரிக்க.

14.   இராசேந்திரன் வட இந்தியருடன் போரிட்டு வென்றமையை எழுதுக.

15.   முதலாம் ஆதித்தனின் வெற்றிச் சிறப்பினை எழுதுக.

16.   திருப்புறம்பியம் போர் குறித்து எழுதுக.

17.   முதலாம் ஆதித்தன் - குறிப்பு வரைக.

18.   சோழப் பேரரசின் தோற்றம் குறித்து விளக்குக.

19.   முதலாம் இராசாதிராசன் குறிப்பு வரைக.

20.   கைகோளர்களின் உரிமைகளையும் மக்களிடம் பெற்ற செல்வாக்கினையும் குறித்து எழுதுக.

21.   சோழர்கால மக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களை விளக்குக.

22.   திருமந்திரத்தின் சிறப்பினை எழுதுக.

23.   சோழர்காலத்துப் பெண்கள் நிலையை எடுத்துரைக்க.

24.   சோழர்காலப் பழக்கவழக்கங்களைத் தெளிவுப்படுத்துக.

25.   சோழர் - கீழைச் சாளுக்கியர் உறவு குறித்து எழுதுக.

26.   முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப்போர் குறித்து விவரிக்க.

27.   'மும்முடிச் சோழ மண்டலம்' - பெயர்க் காரணம் கூறுக.

28.   சோழ அரசாங்கம் மக்கள் மேல் விதித்திருந்த வரிகளை எழுதுக.

29.   சோழர்களின் நீதி வழங்கும் சிறப்பு குறித்து எழுதுக.

30.   சோழர்காலத் திருமணமுறையை விளக்கியுரைக்க.

31.   சோழர் கால நகர அமைப்பினை விளக்கிக் கூறுக.

32.   மதுரை திருமலை நாயக்கர் - குறிப்பு வரைக.

33.   மதுரை திருமலை நாயக்கரின் ஆட்சித் திறத்தைப் புலப்படுத்துக.

34.   மதுரை நாயக்கர்கள் ஆட்சி சிறப்பைச் சுருக்கமாகக் கூறுக.

35.   மீனாட்சி - சந்தாசாகிபுவின் நட்புறவினை விளக்குக.

36.   கட்டபொம்மனின் வீரத்தினைப் புலப்படுத்துக.

37.   சிப்பாய்க் கலகம் - குறிப்பு தருக.

38.   வேலூர்க் கலகம் குறித்து விளக்குக.

39.   வேலூர்க் கலகம் - குறிப்பு தருக.

40.   சோழப் பேரரசின் வீழ்ச்சியினை விளக்குக.

41.   பெருவுடையார் கோயிலின் சிறப்பினை எடுத்துரைக்க.

42.   சோழர் காலத்தில் கலைகளின் வளர்ச்சியைக் குறிப்பிடுக.

43.   பாண்டியர் செப்பேடுகள் குறிக்கும் செய்திகளைக் கூறுக.

44.   பாண்டிய நாடு குறித்து மார்க்கோபோலோ கூறுவனவற்றை எழுதுக.

45.   மாறவர்மன் சுந்தரப் பாண்டியன் - குறிப்பு வரைக.

46.   அரசி மீனாட்சி ஆட்சி சிறப்பு குறித்து எழுதுக.

47.   நாயக்கர் காலத்துச் சமயநிலையை விளக்குக.

48.   தேவரடியார்கள் குறித்து விளக்குக.

49.   டச்சுக்காரர்கள் யார்? இவர்களின் பணி என்ன?

50.   இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினை எடுத்துரைக்க.

51.   டச்சுக்காரர் குறித்து விவரிக்க.

52.   தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து விளக்குக.

53.   தமிழ் எழுத்து வரிவடிவ மாற்றம் குறித்து விளக்கியுரைக்க.

54.   பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் குறித்து விளக்குக.

55.   இருபதாம் நூற்றாண்டின் நாவல்களின் வளர்ச்சியைக் குறிப்பிடுக.

56.   சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவின் வளர்ச்சியை எழுதுக.

57.   இருபதாம் நூற்றாண்டின் நாடகத்தின் வளர்ச்சியை எழுதுக.

58.   ஐந்தாண்டு திட்டங்களையும் அவற்றால் விளைந்த பயன்களையும் எழுதுக.

59.   சுயமரியாதை இயக்கத்தினால் ஏற்பட்ட நல்விளைவுகளைக் குறிப்பிடுக.

 

15 மதிப்பெண் வினாக்கள்

1.       இராசேந்திர சோழனின் ஆட்சித்திறனையும் அவன் பெற்ற வெற்றிகளையும் விவரி.

2.       சோழர்காலக் கட்டிடக்கலையையும் சிற்பக்கலையையும் விவரித்துக் கட்டுரை வரைக.

3.       மதுரை நாயக்கர்கள் குறித்து விவரித்துக் கட்டுரை வரைக.

4.       ஐரோப்பியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து நாடுபிடித்து ஆட்சி செய்ததை விவரி.

5.       இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் நிலை குறித்து விவரி.

6.       முதலாம் இராசேந்திரன் குறித்து விரிவாக எழுதுக.

7.       சோழர் கால இலக்கியங்களைப் பற்றி ஆராய்க.

8.       13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரையில் தமிழக மக்களிடையே காணப்பெற்ற பழக்கவழக்கங்களை விளக்குக.

9.       ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கிளர்ச்சியினை விவரிக்க.

10.   20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி கண்ட ஏற்றத்தினை விரித்துரைக்க.

11.   முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிச் சிறப்பை விவரிக்க.

12.   முதலாம் இராசராசனின் ஆட்சித் திறத்தையும் வெற்றியினையும் கட்டுரைக்க.

13.   முதலாம் இராசராசன் குறித்து கட்டுரைக்க.

14.   முதலாம் இராசேந்திரன் குறித்துக் கட்டுரைக்க.

15.   இராசராசன் பெற்ற வெற்றிகள் குறித்துக் கட்டுரைக்க.

16.   உத்திரமேரூர்க் கல்வெட்டு கூறும் கிராமச்சபை அமைப்பினை விளக்குக.

17.   சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டினைப் புலப்படுத்துக.

18.   சோழர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை விரித்துரைக்க.

19.   உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் கிராமசபை அமைப்பினை விவரிக்க.

20.   சோழர்காலப் பெண்கள், தேவரடியார் மேன்மையைப் புலப்படுத்துக.

21.   மதுரை நாயக்கர்கள் குறித்து கட்டுரை வரைக.

22.   மதுரை நாயக்கர்கள் - விவரிக்க.

23.   மதுரை நாயக்கர் குறித்து விவரிக்க.

24.   தமிழகத்தின் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை இலக்கியங்களின் சிறப்பு குறித்து கட்டுரை எழுதுக.

25.   சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் குறித்து விவரி.

26.   சோழர் காலத்தில் - வலங்கை இடங்கைக் குலங்கள்' - பற்றிய செய்திகளைக் கூறி விளைவுகளையும் விளக்குக.

27.   பாண்டியர்களின் உள்நாட்டுப் போர் குறித்து விளக்குக.

28.   வேலூர்க் கலகம் - முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் தொடக்கம் என்னும் கருத்தை விளக்கி வரைக.

29.   கருநாடகப் போர் - விளக்குக.

30.   கருநாடகப் போர் - விரித்துரைக்க.

31.   ஐரோப்பியரின் வருகையால் தென்னிந்தியாவில் நடைபெற்ற போர்களை விவரித்துக் கட்டுரை எழுதுக.

32.   18-ஆம் நூற்றாண்டில் தமிழின் வளர்ச்சியினை விரித்துரைக்க.

33.   பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்களிடையே நடைபெற்ற பூசல்களையும் கல்வியின் வளர்ச்சி நிலைகளையும் எடுத்துரைக்க.

34.   19ஆம் நூற்றாண்டு கல்விநிலையை எடுத்துரைக்க.

35.   "இரட்டை ஆட்சிமுறை" - குறித்துக் கட்டுரை எழுதுக.

36.   இருபதாம் நூற்றாண்டில் தமிழின் நிலை குறித்து விவரித்து எழுதுக.

37.   20ஆம் நூற்றாண்டின் தமிழின் நிலையை விளக்குக.

38.   இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மொழியின் வளர்ச்சியினை எழுதுக.

39.   சுதந்திரத்துக்குப்பின் தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துரைக்க.

40.   தொழிற்புரட்சி காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை விளக்கியெழுதுக.

 

 

தமிழக வரலாறும் பண்பாடும் – II

Allied Paper II – THAMIZAGA VARALARUM PANPADUM - II

October 2018                                                                                                     U/2006/14-17/38207

பகுதி அ - (10 х 2 = 20 மதிப்பெண்கள்)

1.         வாண கோவர்கள் - குறிப்பு வரைக.

வாணகோவர்கள் - பழமையான அரச மரபினர்; இவர்களது நாடு – பெரும்பாணப்பாடி; வாதாபி சாளுக்கியர்களின் ஆதிக்கம் ஓங்கி வளரவே இவர்களின் அரசியல் செல்வாக்கும் ஆட்சி எல்லைகளும் சுருங்கின. மூன்றாம் விக்கிரமாதித்தனே இறுதியாக அரசாண்டவன்.

2.                         முதலாம் பராந்தகனுக்குத் துணை நின்றோர் யாவர்?

கேரள மன்னன், பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளிர்.

3.                          முதலாம் இராசேந்திரனின் மக்கட்பெயர்களைக் கூறுக.

இராசாதிராச சோழன், இராசேந்திர சோழன், வீரராசேந்திர சோழன், அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவி.

4.                          மூன்று கை மாசேனை - விளக்குக.

மூன்று கை மாசேனை என்பது மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் வலங்கைப் பிரிவு - நிலையான பிரிவு; இடங்கைப் பிரிவு - வணிகர்களையும் சில தொழிலாளர்களையும் கொண்டது; மூன்றாவது பிரிவு - கோயில் பணியாளர்களைக் கொண்டிருந்தது.

5.                          உதிரப்பட்டி என்றால் என்ன?

பிறர் நலத்துக்காகத் தன்னலம் துறந்து உயிர்விட்டவர்களின் வழிவந்தோருக்கும் உறவினருக்கும் தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு "உதிரப்பட்டி" என்று பெயர்.

6.                          சோழர் காலத்தில் மருத்துவம் எந்நிலையில் இருந்தது?

சோழர் காலத்தில் மருத்துவம் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. நோயை மருந்தினாலும், அறுவையினாலும் அக்கால மருத்துவர்கள்  தணித்தனர். வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்று நாடிகளை நன்கு ஆராய்ந்திருந்தனர். மருத்துவர்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டன.

7.                          பாண்டியன் நெடுஞ்செழியன் பராந்தகன் செப்பேடுகள் கூறும் செய்திகளைக் குறிப்பிடுக.

பாண்டியன் நெடுஞ்செழியன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ சமய சுலோகங்கள் காணப்படுகின்றன. இது அவனது வைணவப் பற்றை உணர்த்துகிறது. மேலும் இச்சேப்பேட்டில் குறிக்கப்படும் அவனது விருதுப் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே உள்ளன. இதன் மூலம் இவன் வடமொழிக்கு ஏற்றம் கொடுத்ததையும் வடமொழிப் பெயர்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டதையும் அறியமுடிகிறது.

8.                          நாயக்கர் கால வாணிகம் குறித்து எழுதுக.

நாயக்கர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாணிகம் வளர்ச்சியுறவில்லை. அயல்நாட்டு வாணிகம் தடைபட்டது. கடற்படையும் கப்பல்களும் அவர்களிடம் இல்லாமையே இதற்குக் காரணமாகலாம்.

9.                          கிழக்கிந்தியக் கம்பெனி - சிறு குறிப்பு வரைக.

இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்நிறுவனம், பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717இல் வங்காளத்தில் சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றை இந்நிறுவனம் முகலாயப் பேரரசிடமிருந்து பெற்றுக்கொண்டது. மேலும் 1757இல் பிளாசி போரில் சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்திய நிறுவத்தை ஒரு வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது.

10.   தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி- விளக்கி எழுதுக.

ஆங்கிலேயரை எதிர்த்த கொங்குநாட்டு வீரன் தீர்த்தகிரி.

இவன் ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி படை திரட்டி எதிரிகளுடன் போரிட்டான்.

இவனே "தீரன் சின்னமலை" என்னும் பெயரால் தமிழக வரலாற்றில் புகழ் பெற்றான்.

11.                      இரட்டையாட்சி என்றால் என்ன?

மான்டேகு - செம்ஸ்போர்டு திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட அரசியலுக்கு இரட்டையாட்சி என்று பெயர். அதன்கீழ் மாகாணக் கவர்னரே அரசாங்கத்தின் தலைவராக இருந்தார். அவருக்குத் துணைபுரிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது; இக்குழுவில் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சேர்ந்திருந்தனர்.

12.                      20-ஆம் நூற்றாண்டில் கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பெற்ற பல்கலைக்கழகங்கள் யாவை?

விடுதலைக்குப் பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

பகுதி ஆ - (5 х 7 = 35 மதிப்பெண்கள்)

13.   சோழப் பேரரசின் தோற்றம்:

-       பல்லவர் + விசயாலயன் х வரகுணப் பாண்டியன் + முத்தரையர்;

-       விசயாலயன் வென்று தஞ்சையைக் கைப்பற்றல்.

-       திருப்புறம்பயப் போரில் பல்லவருக்குத் துணைநின்று ஆதித்தன் வெற்றி பெறல். இதற்காக அபராசித பல்லவன் சில நிலப்பகுதிகளை ஆதித்தனுக்கு வழங்கல்.

-       அபராசித பல்லவன் х ஆதித்த சோழன் போர்: பல்லவனைக் கொன்று தொண்டை நாட்டைச் சோழ நாட்டுடன் இணைத்தல். ஆட்சி எல்லை விரிவாதல்.

-       சேர மன்னன் தாணுரவியுடன் ஆதித்தன் இணைந்து கொங்கு தேசத்தைக் கைப்பற்றல். இவ்வாறு சோழப் பேரரசு தோற்றம் பெற்று நாளும் வளர்ச்சியடைந்தது.

14.   முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப்போர்:

-       திறை செலுத்த மறுத்த வடகலிங்க மன்னன் அனந்தவர்மனைத் தண்டிக்கும் நோக்குடன் கருணாகரன் தலைமையில் எடுக்கப்பட்ட படையெடுப்பு இது. குலோத்துங்கன் செய்த போர்களுள் தனிச் சிறப்பு வாய்ந்ததும் செயங்கொண்டாரால் கலிங்கத்துப்பரணியில் பாராட்டப்பெறுவதும் இப்போரேயாகும்.

-       இப்போரில் கலிங்கம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது. போரில் எதிர்த்து நிற்க முடியாமல் கலிங்க வீரர்கள் மாறுவேடமிட்டு ஓடி ஒளியத் தொடங்கினர். புறமுதுகிட்ட கலிங்க மன்னனைத் தேடி, அவனையும் அவன் நாட்டு யானை, குதிரை, தேர்களையும் கைப்பற்றிக் கொண்டு சோழர்படை நாடு திரும்பியது.

15.   சோழர் காலத்து வரிகள்:

-       சோழர் அரசாங்கம் குடிமக்களின்மேல் விதித்துவந்த வரிகளும் கட்டணங்களும் பலவகைப்பட்டன. அவற்றுள் சில:

-       ஊர்க்கழஞ்சு, குமர கச்சாணம், மீன் பாட்டம், கீழிறைப் பாட்டம், தசபந்தம், மாடைக்கூலி, முத்தாவணம், திங்கள் மேரை, வேலிக்காசு, நாடாட்சி, ஊராட்சி, வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப் பாறை, குசக்காணம், நீர்க்கூலி, தறிப்புடவை, தரகுப்பாட்டம், தட்டார்ப்பாட்டம், ஆட்டு வரி, நல்லா, நெல்லெருது, நாடு காவல் போன்று பல வரிகள்.

-       ஒவ்வோர் ஊரிலும் சிலவகை நிலங்களுக்கு வரி விலக்கு அளிப்பதுண்டு. ஊர் நத்தம், கோயில்கள், ஏரிகள், ஊருக்குள் ஓடும் வாய்க்கால்கள், பறைச்சேரி, கம்மாளச்சேரி, சுகாடு ஆகியவற்றுக்கு வரிகள் கிடையாது.

16.   சோழர்கால நகர அமைப்பு:

-       சோழர்கால நகரங்களில் மக்கள் நெருங்கி வாழ்ந்தனர். காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை போன்ற நகரங்களில் அக்காலத்திலும் குடிவளம் செழித்திருந்தது.

-       மத்திய அரசின் செங்கோன்மையின் கீழ் மக்கள் இன்னல்களும் இடையூறுகளுமின்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

-       குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் எனப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இச்சபைகளுக்குப் பல வாரியங்களும் வாரியப் பெருமக்களும் இருந்தனர்.

17.   மாறவர்மன் சுந்தரபாண்டியன்:

-       குலசேகரனுக்குப் பின்பு பட்டமேற்றவன்.

-       சோழநாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் இராசராசனை வென்று சோழநாட்டைக் கைப்பற்றினான். பின்னர் மூன்றாம் இராசராசனுக்கே சோழ நாட்டைக் கொடுத்துத் திறை கொண்டான். "சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" என்ற விருதையும் பெற்றார்.

-       சோழ மன்னன் திறை செலுத்த மறுக்கவே அந்நாட்டின் மீது படையெடுத்து அவனைச் சிறைப்படுத்தினார்.

18.   வேலூர்க் கலகம்:

-       கி.பி. 1806ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஆயுதப்படைகளில் செய்த சில சீர்திருத்தங்கள் உள்நாட்டுப் படைவீரர்களின் சமய உணர்ச்சிகளைத் தூண்டின; ஏற்கெனவே மனக்கசப்படைந்து நின்ற படைவீரர்கள், இச்சீர்த்திருத்தங்களுக்குக் காட்டிய எதிர்ப்பு இறுதியில் பெருங்கிளர்ச்சியானது.

-       வெல்லெஸ்லியின் "ஆக்கிரமிப்புக் கொள்கை"யால் வெறுப்படைந்த இந்திய அரசமரபினர் படைவீரர்களுடன் தொடர்பு கொண்டு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர். இக்கிளர்ச்சி வேலூர்க் கோட்டைக்குள் நடைபெற்றமையின் இது வேலூர்க் கலகம் என அழைக்கப்பட்டது.

-       இப்புரட்சி மிக விரைவில் ஒடுக்கப்பட்டது. இம்மோதலில் 100 ஐரோப்பியர்களும் 300 உள்நாட்டுப் படைவீரர்களும் உயிரிழந்தனர்.

-       வேலூர்க் கலகத்திற்குப் பிறகு சென்னை ஆளுநர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சிக்கல் தோன்றக் காரணாயிருந்த விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மக்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர்.

19.   தமிழ் எழுத்து வரிவடிவ மாற்றம்:

-       ஒரு காலத்தில் நாடு முழுவதிலும் பிராமி எழுத்துத்தான் திராவிட மொழிகள் அனைத்திற்கும் ஆதி எழுத்தாகப் பயன்பட்டு வந்தது; காலப்போக்கில் அது திரண்டு உருண்டு வட்டெழுத்தாக வடிவமைந்து வழக்கில் இருந்தது. பல்லவ நாட்டைத் தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டபின் சோழப் பேரரசர்கள் தமிழ் எழுத்தையும் கிரந்த எழுத்தையும் இணைத்துக் கல்வெட்டுக்களில் பொறித்து வந்தனர். சோழர்கள் பாண்டிநாட்டைக் கைக்கொண்ட பிறகு அங்கு வழங்கி வந்த வட்டெழுத்துகள் மறைந்து சோழ நாட்டில் வழங்கி வந்த வரிவடிவமே அங்கும் வழக்குக்கு வந்தது.

-       சோழ மன்னரின் ஆட்சிக்குப் புறம்பாக இருந்த மலைநாட்டில் இவ்வட்டெழுத்தானது தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்தது. அது காலப்போக்கில் கோலெழுத்தாக மாறி அறவே வழக்கொழிந்துவிட்டது. மலையாள மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டு அது ஒரு தனிமொழியாக வளர்ந்து வந்தபோது அதன் எழுத்துகள் ஆரிய எழுத்துகள் என்ற பெயரைப் பெற்றன.

-       சோழரும் பாண்டியரும் மறைந்த பிறகு விசயநகரப் பேரரசுக் காலத்திலும் மராத்தியர் காலத்திலும் வடமொழி நாகரி எழுத்துகள் நடைமுறைக்கு வந்தன. எனவே கிரந்த எழுத்து வழக்கிறந்தது.

-       வீரமாமுனிவர் எகர ஒகரத்தில் குறில், நெடில் வேறுபாடு தோன்ற மாற்றம் செய்தார். பின்னர் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது பெரியார் பின்பற்றியவாறு வரிவடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பெற்றன.

பகுதி இ - (3 х 15 = 45 மதிப்பெண்கள்)

20.   இராசராசன் பெற்ற வெற்றிகள்:

-       சோழப் பேரரசுக்கு வலுவான அடிப்படை இட்டுத் தந்த பெருமை இராசராசனுக்கு உரியது.

-       கி.பி. 980இல் சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனையும், அவனுக்குத் துணைநின்ற பாண்டியன் அமரபுயங்கனையும் இராசராசன் வென்றான்; 'மும்முடிச் சோழன்' என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டான். பின்னர் கொல்லம், குடகு, கங்கர் நாடுகளை வென்றான்; இவ்வெற்றிக்குக் காரணமான தன் மகன் இராசேந்திரனுக்கு 'பஞ்சவன் மாராயன்' என்ற விருதுபெயரையும் சூட்டினான்.

-       இராசராசன் சேர பாண்டியருடன் புரிந்த போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழரின் பகைவர்க்குத் துணைநின்றான். எனவே இராசராசன் இலங்கை மீது படையெடுத்து வென்றான்; இப்போரில் ஆயிரம் ஆண்டுகள் தலைநகராக இருந்த அநுராதபுரம் அழிக்கப்பட்டது; பொலனருவா அதன் தலைநகராக்கப்பட்டது. இலங்கையின் வடபகுதி மும்முடிச்சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டுச் சோழ மண்டலத்துடன் இணைக்கப்பட்டது.

-       கீழைச் சாளுக்கிய நாட்டில் நடைபெற்ற அரசுரிமைப் போரில்  இராசராசன், சக்திவர்மன் என்பவனை ஆதரித்து அவனை அரியணையில் அமர்த்தினான்.

21.   கிராமசபை அமைப்பு:

-       உத்தரமேரூர்க் கல்வெட்டுக்கள் ஊரவையின் அமைப்பு, தேர்தல் நடைபெற்ற முறை, உறுப்பினர்க்குரிய தகுதிகள், தகுதியழந்தோர், ஊரவையின் செயற்பாடுகள், அதிகார வரம்புகள் ன எனச் சோழர்களின் ஊராட்சி பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன.

-       ஊரவை வகைகள்: கிராம அவை, தேவதான அவை, ஊர் அவை, நகரவை.

-       ஊர்ப்பொதுமக்கள் அடங்கிய பேரவையால் குடவோலை முறை மூலம் இத்தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் என மூன்று வாரியங்களாகப் பிரிக்கப்படுவர்.

-       பதவிக்காலம் ஓராண்டு. இவர்களுக்கு எவ்வித ஊதியமும் இல்லை. குற்றம் புரிபவர்கள் இடையிலேயே விலக்கப்படுவர்.

-       உறுப்பினர் ஆதற்கு உரிய தகுதிகள்: ஊரில் உள்ள 35 முதல் 70 வயதுள்ளஆண்மக்கள், சொந்த மனையில் வீடு கட்டிக் குடியிருப்பவர்கள், நிலவரி செலுத்துவோர், கல்வி அறிவு உடையவர்கள், அறநெறி பிழையாதவர்கள்.

-       உறுப்பினர் ஆகும் தகுதியை இழந்தவர்கள்: உறுப்பினராய் இருந்து கணக்கு காட்டாதவர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், ஊருக்கு துரோகம் செய்தவர்கள்.

-       ஊரவை அலுவலர்கள்: நடுவர், கரணத்தார், பாடிக்காப்பான், தண்டுவான், அடிகீழ் நிற்பான்.

-       ஊரவையின் உரிமைகள்: நிலவருவாயைக் கணக்கிடுதல், வரி விகிதங்களை அறுதியிடுதல், பொதுச் சொத்துக்களைக் கண்காணித்தல், கோவில்களின் தேவைகளை நிறைவு செய்தல், குற்றம் செய்தவர்களைத் தண்டித்தல். அரசின் இசைவு பெறாமல் வரியை மாற்றவோ, சேர்க்கவோ ஊரவைக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

22.   மதுரை நாயக்கர்:

-       விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில், செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில், நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. இவர்களுள் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள்.

-       விசுவநாத நாயக்கன் முதல் அரசி மீனாட்சி வரை 13 பேர் இக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். 

-       விசுவநாத நாயக்கன்: மதுரை நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர்; பாளையப்பட்டு ஆட்சிமுறையைத் தோற்றுவித்தவர்;

-       திருச்சியில் உள்ள தெப்பக்குளமும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும் இவரால் உருவாக்கப்பட்டவை. இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி தாயுமானவர் கோவில்,  திருவரங்கப் பெருமாள் கோவில் ஆகியவற்றுக்குத் திருப்பணி செய்தார்.

-       திருமலை நாயக்கன்: விசயநகரப் பேரரசின் சார்பு ஆட்சியாக விளங்கிய அரசைத் தன்னுரிமை பெற்ற தனி அரசாக மாற்றியமைத்தார்; திருச்சியில் இருந்து தலைநகரை மதுரைக்கு மாற்றினார்.

-       மதுரைத் தெப்பக்குளம், புதுமண்டபம் என அழைக்கப்படும் வசந்த மண்டபம், இராயகோபுரம், திருமலை நாயக்கர் மகால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள முக்குறுணிப் பிள்ளையார் கோவில் ஆகியவை இவனது படைப்புக்கள்.

-       தெப்பத்திருவிழா, சித்திரைத் திருவிழா, வசந்த விழாக்களைத் தொடங்கி மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக ஆக்கினான்.

-       மைசூர் மன்னன், திருவாங்கூர் மன்னர், தளவாய் சேதுபதி ஆகியோரைப் போரில் வென்றான்.

-       மங்கம்மாள்: தமிழக வரலாற்றில் அரியணை ஏறிய முதல் பெண்ணரசி இவளே.

-       தன்மீது படையெடுத்த மைசூர் மன்னனையும் திறை செலுத்த மறுத்த திருவாங்கூர் மன்னனையும் வென்றாள்.

-       டெல்லி சுல்தானுக்குத் திறை செலுத்த இசைந்துப் பரிசில்களைக் கொடுத்தனுப்பினாள். தஞ்சை மன்னன் ஹாஜி கைப்பற்றிய தன் நாட்டுப் பகுதிகளை மொகலாயப் படைகளின் துணையுடன் மீட்டாள்.

-       இராணி மீனாட்சி: சந்தா சாயுபு மீனாட்சிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து ஆட்சி முழுவதையும் தனதாக்கிக் கொண்டான். இராணி மீனாட்சியையும் சிறையில் அடைத்தான். தனக்கு நேர்ந்த அவமானம் தாங்காதவளாக மீனாட்சி நஞ்சுண்டு மாண்டாள். பங்காரு திருமலையும் அன்வாருதீன் கைகளால் மாண்டான்; அவன் மகன் விசயகுமாரன் அரசனாகும் வாய்ப்பிழந்து சிவகங்கைச் சீமையில் தஞ்சம் புகுந்தான். அத்துடன் மதுரை நாயக்கர் பரம்பரையும் மறைந்து போயிற்று.

23.   கருநாடகப் போர்கள்: ஆஸ்திரிய அரசுரிமைப் போட்டியில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிரெதிர்க் கட்சிகளுக்குத் துணைநின்று ஏழாண்டுக்காலம் போரில் ஈடுபட்டிருந்தனர். இது இந்தியாவிலும் எதிரொலித்தது.

-       கருநாடகத்தில் நடைபெற்ற போரில் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்கி படையெடுத்து வந்த ஆர்க்காட்டு நவாபு அன்வாருதினையும் பிரெஞ்சுக்காரர்கள் வென்றனர்.

-       பின்னர் ஆங்கிலேயரின் உதவிக்குப் புதியதாக தரைப்படையும் கப்பற்படையும் வந்தது; போர் வெற்றி தோல்வி இன்றி நடந்து கொண்டிருந்தது. அதற்குள் ஆஸ்திரிய அரசுரிமைப் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சென்னை மீண்டும் ஆங்கிலேயரிடமே ஒப்படைக்கப்பட்டது.

-       இரண்டாம் கருநாடகப் போர்: டூப்ளே ஆர்க்காட்டு அரியணையில் ஏற்றுவிப்பதாகச் சந்தா சாயபுவிடமும், தக்கணத்து அரியணையில் ஏற்றுவிப்பதாக முஜாபர் ஜங்குடனும் இரு உடன்படிக்கைகள் செய்துகொண்டான். இம்மூவரும் இணைந்து ஆம்பூர் போரில் அன்வாருதீன்கானைக் கொன்றார்கள்; அவனது மகன் முகமதலி திருச்சிராப்பள்ளிக்கு ஓடிவிட்டான்; இவர்களின் படை அவனைத் துரத்திச் சென்றது.

-       முகம்மதலிக்கு உதவியாக ஆங்கிலேயப் படை வந்தது. முற்றுகை வெற்றி தோல்வி இன்றி நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் டூப்ளேவின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் வீணான மனக்கசப்பும், போராட்டங்களும், பொருள் இழப்பும் எற்படுகிறது என பிரெஞ்சு அரசாங்கம் கருதி, டூப்ளேவுக்குப் பதிலாக கோடேஹாவை புதுச்சேரி கவர்னராக நியமிக்கிறது. கோடேஹா ஆங்கிலேயருடன் இரு நாட்டினரும் மேற்கொண்டு ஒருவரோடொருவர் போரிடுவதில்லை எனவும், அவரவர் வசம் இருந்த பகுதிகளை அவரவரே வைத்துக் கொள்ளலாம் என்றும் ஓர் உடன்படிக்கை செய்துகொள்கிறான்.

24.   தமிழகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி:

-       இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்நாட்டுத் தொழில்துறையில் பெரும்புரட்சி ஏற்பட்டது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது, குடிசைத் தொழிலாக இருந்த நெசவுத்தொழிலும் நூற்பும் தொழிற்சாலைகளுக்கு மாறின.

-       இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான பருத்தி, நிலக்கடலை, புகையிலை போன்ற வாணிகப் பண்டங்களை உற்பத்தி செய்ய இந்திய உழவர்கள் ஆர்வம் காட்டினர்.

-       இரண்டு உலகப் போர்களின்போது இந்திய மண்ணில் தொழில்கள் வளருவதற்கான சூழ்நிலைகள் தோன்றின. கோவை, மதுரை போன்ற ஊர்களில் பல நூற்பாலைகளும் நெசவாலைகளும் தோன்றிச் செயல்படலாயின. கைவன்மையைக் கொண்டு நடைபெற்றுவந்த பல தொழில்கள் எந்திரமயமாக்கப்பட்டன.

-       போர்க்காலங்களில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையினால் உழவுத் தொழில் வளர்ச்சிக்காகப் பல ஆக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேட்டூர் உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் மூலம் வறண்ட நிலங்கள் உழவு நிலங்களாக மாறின.

 

தமிழக வரலாறும் பண்பாடும் – II

Allied Paper II – THAMIZAGA VARALARUM PANPADUM - II

April 2019                                                                                                 U/2006/14-18/38207

Staff Name : Dr. J. SIVAKUMAR

பகுதி அ - (10 х 2 = 20 மதிப்பெண்கள்)

25.                      திருப்புறம்பியப் போர் குறித்து எழுதுக.

பாண்டியர் பல்லவருக்கு இடையேயான திருப்புறம்பயப் போரில் ஆதித்தனும் பிருதிவிகங்கனும் பல்லவருக்குத் துணைநின்றனர். போரில் பாண்டியன் தோற்றல், பிருதிவிகங்கன் வீரமரணம் அடைதல், அபராசித பல்லவன் சில நிலப்பகுதிகளை ஆதித்தனுக்கு வழங்கல்.

26.                      முதலாம் இராசராசனுக்குரிய விருதுப் பெயர்களைக் குறிப்பிடுக.

மும்முடிச் சோழன், சோழ மார்த்தாண்டன், சயங்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்ககுலகாலன், சிவபாத சேகரன் என்பவை இராசராசன் ஏற்றுக்கொண்ட விருதுகளில் சிலவாகும்.

27.                      சோழர் வீழ்ச்சிக்குக் காரணமானோர் யாவர்?

பாண்டிய மன்னர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர்.

28.                      சோழர் காலத்தில் நாடு எவ்வாறு பிரித்தறியப்பட்டது?

சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம் ஆகும். கூற்றத்துக்குக் கோட்டம் என்றும் நாடு என்றும் பெயருண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும்.

29.                      சோழர் காலத்து ஆடை வகைகளைக் கூறுக.

சோழர் காலத்து ஆடை வகைகள்: பாலாவி போன்ற நுண்துணி, காடியூட்டிய பூந்துகில், முயல் இரத்தம் போன்ற செவ்வண்ணப் பட்டுகள், பொங்கும் நுரையைப் போன்ற கலிங்கம், எலிமயிர் ஆடைகள், கப்பலில் இறக்குமதியான அன்னிய நாட்டுத் துணிகள், பசிய இலைத் தொழிலையுடைய பட்டுகள், வெண்பட்டு.

30.                      சோழர் காலத்து நம்பிக்கைகளைக் எழுதுக.

சோழர் கால மக்கள் நிமித்தமும் சகுனமும் பார்ப்பார்கள். விடியற்காலையில் கண்ட கனவுகள் பலிக்கும்; ஆடவருக்கு இடக்கண் துடித்தால் கேடு, பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மை; பகலில் கோட்டான் கூவினால் கேடு வரும்; தும்மினால் நூறாயுசு என வாழ்த்த வேண்டும் போன்ற பல நம்பிக்கைகள் இருந்தன.

31.                      சீமாற சீவல்லபன் குறித்து மகாவம்சம் கூறுவன யாவை?

சீமாற சீவல்லபன் ஈழத்தின்மேல் படையெடுத்துச் சென்று ஆங்குப் பல நகரங்களை அழித்தான் என்றும், பொன்னாலான புத்தர் சிலைகளையும் பொன்னையும் மணியையும் கவர்ந்துகொண்டு சிங்களத்தை வறுமைக்குள் ஆழ்த்தினான் என்றும் இலங்கை வரலாறான மகாவமிசம் கூறுகின்றது.

32.                      வேலூர் நாயக்கர் குறிப்பு வரைக.

வேலூரில் சின்னபொம்மு நாயக்கர் என்பவர் விஜயநகரப் பேரரசின் கீழ் கி.பி. 1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு வந்தார். வேலூர்க் கோட்டையையும் அதனுள் இருக்கும் ஜலகண்டேசுவரர் கோயிலையும் கட்டியவர் இவர்தான்.

33.                      முதல் கருநாடகப் போர் யார் யாருக்கிடையே எப்பொழுது நடைபெற்றது?

ஆஸ்திரிய அரசுரிமைப் போட்டி ஒன்றில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் எதிர்க்கட்சிகளுக்குத் துணை நின்று ஏழாண்டுகாலம் போரில் ஈடுபட்டிருந்தனர். அக்காரணத்தினால் இந்தியாவில் புதுச்சேரி கவர்னர் டூப்ளே தலைமையில் பிரெஞ்சுக்காரர்களுடன் ஆங்கிலேயர்கள் போரிட்டனர். இப்போரே முதல் கருநாடகப் போர் என அழைக்கப்படுகிறது.

34.                      ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இருந்த நாணயங்கள் யாவை?

சென்னையில் நடைபெற்றுவந்த நாணயம் அச்சிடும் சாலையில் நட்சத்திர வராகன்கள், மதராஸ் வராகன்கள், மதராஸ் துட்டுகள் அச்சிடப்பட்டன.  கவர்னர் மன்றோ காலத்தில் இந்த நாணயங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ரூபா நாணயம் ஒன்று மட்டுமே புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

 

35.                      வைக்கம் வீரர் யார்? அப்பெயர் பெறக் காரணம் என்ன?

'வைக்கம் வீரர்' என அழைக்கப்பட்டவர் பெரியார் ஈ.வே.ரா. ஆவார். திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றதால் இப்பெயர் அவருக்கு ஏற்பட்டது.

36.                      சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட பகுதிகள் எவை?

தென்னிந்தியாவின் சில பகுதிகள் ஆங்கிலேயரின் நேர்முக ஆட்சிக்குள்ளடங்கி இருந்தன. அப்பகுதிகள் அனைத்தையும் இணைத்துச் சென்னை மாகாணம் என்று தனி மாகாணம் ஒன்று அமைத்தனர். இம்மாகாணத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

பகுதி ஆ - (5 х 7 = 35 மதிப்பெண்கள்)

37.   தக்கோலப் போர் :

-       பராந்தகச் சோழன் தன்னைத் தாக்கப் பகைப்புயல் உருவாகிக் கொண்டிருப்பதனை உணர்ந்து தன் மூத்த மகன் இராசாதித்தன் தலைமையில் திருமுனைப்பாடி நாட்டில் பெரும்படையை நிறுத்தியிருந்தான்.

-       கி.பி. 949இல் அரக்கோணத்துக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தக்கோலத்தில் போர் நடைபெற்றது. இப்போரில் சோழர் படைகளும் இராஷ்டிரக்கூடர் படைகளும் மிகக் கடுமையாகப் போர் புரிந்தன.

-       போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இராஷ்டிரக்கூடப் படைத்தலைவர்களுள் பூதுகன் என்பவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானைமீது துள்ளி ஏறி இராசாதித்தனைக் கத்தியால் குத்திக் கொன்றான். இராஷ்டிரக்கூடன் வெற்றிவாகை சூடினான்.

38.   சோழர் - கீழைச் சாளுக்கியர் உறவு :

-       மேலைச் சாளுக்கியர்க்கும், கீழைச் சாளுக்கியர்க்கும் இடையே ஆதிக்கப் போட்டி இருந்து வந்தது.

-       இராசராசன், சக்திவர்மன் என்பவனை ஆதரித்து அவனை அரியணையில் அமர்த்தினான். நன்றிக்கடனாகச் சக்திவர்மன் சோழர்களுக்கு அடங்கி நடந்தான். மேலைச் சாளுக்கிய நாடு, தன் திட்டத்துக்கு எதிராக நின்ற சோழநாட்டைப் பகைத்தது.

-       சோழரின் தலைமையை ஏற்றதனால் மேலைச் சாளுக்கியர்கள் கீழைச் சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தனர். எனினும் சோழர் படையின் வரவால் மேலைச் சாளுக்கியர் தோற்றுப் போயினர். சாளுக்கிய நாடு மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியது.

-       மேலைச் சாளுக்கிய நாட்டில் சக்திவர்மனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகள் குந்தவையை மணம் முடித்துக் கொடுத்தான்; இதன் மூலம் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான உறவு நீடித்தது.

-       இதேபோல் முதலாம் இராசேந்திரனும் தன் மகள் அம்மங்கைதேவியை கீழைச் சாளுக்கிய அரசன் ராசநரேந்திரனுக்குக் கொடுத்தார். இரண்டாம் இராசேந்திரனும் தன் மகள் மதுராந்தகியைக் கீழைச் சாளுக்கிய அரசன் முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குக் கொடுத்தான். இவன்தான் அதிராசேந்திரனுக்குப் பிறகு வாரிசு அற்று இருந்த சோழப் பேரரசுக்கு அரசனானான். இவ்வாறு சோழர் - கீழைச் சாளுக்கியர் உறவு நீடித்தது.

39.   சோழர்தம் படை பலம் :

-       எல்லாப் படைகளுக்கும் தலைவனாக மன்னனே செயல்பட்டான். ஆற்றல்மிக்க தரைப்படையும் கப்பற்படையும் இருந்தன. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இருந்தன.

-       வேளைக்காரர்கள் என்பவர்கள் அரசனுக்கு அணுக்கத்திலேயே நின்று அவனுக்குத் தொண்டு செய்தனர். மன்னனுக்கு விளையக்கூடிய எந்தவகையான இன்னல்களையும் ஊறுகளையும் வேளைக்காரர்கள் தாமே ஏற்றுக்கொள்வார்கள்.

-       மூன்று கை மாசேனை என்பது மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் வலங்கைப் பிரிவு - நிலையான பிரிவு; இடங்கைப் பிரிவு - வணிகர்களையும் சில தொழிலாளர்களையும் கொண்டது; மூன்றாவது பிரிவு - கோயில் பணியாளர்களைக் கொண்டிருந்தது.

-       சோழநாடு முழுவதிலும் ஆங்காங்குப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. படைகள் தங்கியிருந்த தண்டுகளுக்கு கடகங்கள் என்று பெயர். எந்தெந்த ஊர்களில் படைகள் தங்கி இருந்தனவோ அந்த ஊர்களில் இருந்த கோயில்களின் பாதுகாப்பும் அப்படைகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

40.   தஞ்சைப் பெரிய கோவில்

-       இக்கோவில் பிற்காலச் சோழரின் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோவிலைக் கி.பி. 1003இல் கட்டியவர் இராசராச சோழன். கோவிலின் நிழல் தரையில் படாதவாறு கலைநுட்பத்தோடு இது கட்டப்பட்டுள்ளது.

-       14 அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 500 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்டது.   கோவிலைச் சுற்றி இரு மதில் சுவர்கள் அமைந்துள்ளன; இரண்டிலும் கோபுர வாயில்கள் உள்ளன. மதிலின் உட்பக்கத்து மூலை ஒவ்வொன்றிலும் துணைக்கோவில் உள்ளது.

-       கோவிலின் கருவறை 45 அடி பக்கமுள்ள சதுரவடிவில் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி வலம் வரும் வழியின் உட்சுவர்களை ஓவியங்கள் அணி செய்கின்றன. கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதனை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் முன்பக்கத்தில் நந்திமண்டபம் அமைந்துள்ளது. அங்கு ஒரே கல்லில் ஆன மிகப் பெரிய நந்தி உள்ளது.

-       கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது. 'தட்சிணமேரு' என இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 190 அடி. விமானத்தின் அடித்தளம் சதுரவடிவமானது. இதன் பக்கங்கள் 82 அடி நீளம் உடையவை. விமானம் 50 அடி உயரம் உடையது. 13 அடுக்குகளைக் கொண்டது. போகப் போக சிறுத்துக்கொண்டே போகுமாறு விமானம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் உச்சியில் 80 டன் எடையுள்ள ஒரு கருங்கல் போடப்பட்டுள்ளது.

-       இக்கோவிலில் உள்ள சிவபெருமான்மீது கருவூர்தேவர் பதிகம் பாடியுள்ளார். அது 9ஆம் திருமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களும், புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்களும் இராசராசனின் சமயப்பொறையையும், சமயப் பெருந்தன்மையையும் விளக்குவனவாக உள்ளன.

41.   வீரமாமுனிவர் :

-       வீரமாமுனிவர் "தேம்பாவணி" என்னும் காப்பியத்தைப் படைத்தார். இதில் அவர்  புறநானூறு, குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் கருத்துகளை எடுத்தாண்டுள்ளார்.

-       வீரமாமுனிவர் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் போன்ற பல உரைநடை நூல்களை எழுதி "தமிழ் உரைநடையின் தந்தை" எனும் பெயர் பெற்றார்.

-       இவரது பரமார்த்த குருகதையானது குழந்தை இலக்கியத்தில் இறவாத இடம் பெற்றுவிட்டது.

42.   போர்ச்சுக்கீசியர் வரவு:

-       இந்தியாவுக்குள் முதன்முதல் அடியெடுத்து வைத்த ஐரோப்பியர் போர்ச்சுக்கீசியராவர். போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோ-ட-காமா என்பவன் முதன்முதல் கி.பி. 1498இல் கள்ளிக்கோட்டை வந்து நங்கூரம் பாய்ச்சினான். அவன் வகுத்த கடல்வழியே ஏனைய ஐரோப்பியரும் இந்தியாவுடன் கடல் வணிகம் மேற்கொள்ள உதவிற்று.

-       வாணிகம் செய்யும் முனைப்பு பின்னர் நாடு பிடிக்கும் முனைப்பாக மாறிற்று. தம் வாணிகம், அரசியல், சமய வளர்ச்சியைத் தூண்டிவிட மக்களுக்கு எவ்விதமான கொடுமைகளையும் விளைவித்தனர்.

43.   நீதிக் கட்சியின் தோற்றமும் அதன் பணிகளும்:

-       சென்னையில் 1916 நவம்பர் 20ஆம் நாள் பிராமணரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' என்று ஓர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் இது நீதிக் கட்சி ஆனது.

-       பிராமணரல்லாதார் அரசு வேலைகளில் உரிய பிரதிநிதித்துவம் பெற வழிவகை செய்யப்பட்டது.

-       இந்து அறநிலையக் கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது; சமயத்துறையில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. கோயில்கள் பழுது பார்க்கப்பட்டன. அறங்காவலர்கள் கோயில் திருப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மடங்கள் தம் வருமானத்தில் ஒரு பகுதியை ஆக்கப் பணிகளுக்குச் செலவிட்டனர்.

-       எளியோரும் அரசியல் அதிகாரம் பெற உதவினர்.

 

பகுதி இ - (3 х 15 = 45 மதிப்பெண்கள்)

44.   முதலாம் இராசேந்திரன் :

-       இராசராசனின் ஒரே மகன்; இவனது இயற்பெயர் மதுராந்தகன். இராசராசன் புரிந்த போர்களுள் பெரும்பாலானவற்றிற்குத் தலைமை தாங்கி நின்று அவனுக்கு வெற்றியையும், புகழையும் ஈட்டிக் கொடுத்தவன்.

-       வடநாட்டையும் வெளிநாட்டையும் ஒருங்கே வெற்றி கொண்டவன். வேகமும் கடுமையும் கொண்ட தாக்குதலே இவன் கையாண்ட போர் உத்திகளுள் தலையானது. பகைவரை விரைந்து பணிய வைக்கும் நோக்கம் கொண்டது இது.

-       தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நிகராகக் கலைநுணுக்கம் கொண்ட கங்கைகொண்ட சோழேச்சுரம் இவனது அரிய கலைப்படைப்பு.

-       சோழர்களின் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான்.

-       மேலைச் சாளுக்கியருடன் மேற்கொண்ட போர், இலங்கை மீது படையெடுப்பு, சேர பாண்டியருடன் புரிந்த போர், கங்கை கொண்டமை, கடாரம் கொண்டமை.

-       கங்கைக் கரையில் வாழ்ந்த சமணர்களைக் காஞ்சியில் குடியேற்றியமை, சோழகங்கம் என்ற ஏரியை வெட்டியமை, சீனாவுடன் இராசதந்திரத் தொடர்புகளையும் வாணிகத் தொடர்புகளையும் ஏற்படுத்தும் நோக்குடன் தூதுக் குழுக்களை அனுப்பியமை.

45.   சோழர் கால இலக்கியங்கள் :

-       கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், கல்லாடனார், செயங்கொண்டார், ஒளவையார், திருத்தக்கத்தேவர், கொங்குவேளிர், சேக்கிழார் போன்றோரது நூல்கள்

-       சைவ சித்தாந்த சாத்திரங்கள், ஆழ்வார்களின் இனிய பாசுரங்களுக்குத் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட விளக்கங்கள், குலோத்துங்கன் கோவை, தஞ்சைவாணன் கோவை போன்ற கோவை நூல்கள் சோழர் காலத்தில் எழுந்தன.

-       தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஏற்றம் மிகுந்த காலகட்டமாக சோழர்காலம் அமைந்தது. கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற இறவாப் புகழ் பெற்ற பெருங்காப்பியங்களும், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி போன்ற சுவையான சிற்றிலக்கியங்களும் ஒருசேர இக்காலத்தை அணி செய்தன.

46.   தமிழக மக்களிடையே காணப்பெற்ற பழக்கவழக்கங்கள்:

-       கிராம தேவதைகளின் கோயில்களில் உயிர்ப்பலி கொடுகும் வழக்கம் உண்டு.

-       மத்திய அரசாங்கம் வலுவாக இல்லாததனால் குற்றங்கள் பெருகின; மாடு பிடித்துச் செல்வது, கத்தி கட்டாரிகளைக் கொண்டு எதிரெதிர்க் கிராமத்து மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கண்டவர்களைக் கொல்லுவது ஆகிய கொடுங்குற்றங்களில் குடிமக்கள் ஈடுபட்டனர். பின்னர் இரு கிராமத்து மக்களும் தாம் மேற்கொண்டு சமாதானமாக வாழ்ந்து வரவேண்டுமென்றும், பகைமையை மறந்து நட்புக்கொள்ள வேண்டுமென்றும் கோயிலுக்கு முன்பு வாக்குறுதி ஒன்று செய்துகொடுத்தனர்.

-       கொலைக்குற்றம் செய்த படைவீரர்களுக்கு மூன்று ‘மா’ நிலம் தண்டம் விதிக்கப்பட்டது.

-       கூலிக்கு மாரடிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்து வந்தது.

-       குற்ற விசாரணையின்போது பழுக்கக் காய்ச்சிய கொழு ஒன்றை உருவச் செய்து குற்றம் கண்டுபிடிக்கும் முறையை மக்கள் கையாண்டு வந்ததுண்டு.

-       மன்னர் குடும்பங்களில் உடன்கட்டை ஏறும் பழக்கம் பெரும்பாலும் இருந்தது.

47.   பாளையக்காரர் கிளர்ச்சி :

-       கட்டபொம்மன் : பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டபொம்மனை ஜாக்சன் இழிவுப்படுத்திய முறைகளும், கைது செய்ய எடுத்த முயற்சிகளும் அவனை அங்கிருந்து தப்பிச்சென்று புரட்சி செய்யத் தூண்டின.

-       கி.பி. 1799இல் பாஞ்சாலங்குறிச்சி மீது பானர்மேன் படைதொடுத்தான். ஆங்கிலேயப் படை கோலார்ப்பட்டியில் வீரபாண்டியனை இடைமறித்துப் போரிட்டு அவனைத் தோற்கடித்தது. பின்னர் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டான். அவனது உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

-       மருதுபாண்டியர்: சிவகங்கைச் சீமையை ஆண்டவர்கள் மருதுசகோதரர்கள். இவர்களின் புரட்சிக்கோட்டையாகக் காளையார்கோவில் விளங்கியது. ஆங்கிலேயர்க்கு எதிரான புரட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பாக இவர்கள் ஒரு கூட்டிணைப்பை உருவாக்கினர். இது சிவகங்கைக் கூட்டிணைப்பு என அழைக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்த ஆங்கிலேயரின் காவல் நிலையங்களைத் தாக்கிப் படைக்கருவிகளையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர்.

-       புரட்சிக்காரர்களின் இச்செயலைத் தண்டிக்கும் நடவடிக்கையாகக் கி.பி. 1801 செப்டம்பர் மாதம் காளையார்கோவில் ஆங்கிலேயரால் தாக்கப்பட்டது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்களுக்கு முன் தமிழர்களின் வாளும் வேல்கம்பும் எடுபடவில்லை. மருதுபாண்டியரும் அவரது வீரர்களும் காட்டில் மறைந்திருந்து கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தினர். பின்னர் மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார்கோவிலை இடித்துத் தரைமட்டம் ஆக்குவோம் என்று மிரட்டி அவர்களைப் பணியவைத்தனர். மருதுபாண்டியர், கோபாலன் உள்பட எழுபத்துமூவர் தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான முறைப்படுத்தப்பட்ட போராக இது கருதப்படுகிறது.

-       தீரன் சின்னமலை : ஆங்கிலேயரை எதிர்த்த கொங்குநாட்டு வீரன் தீர்த்தகிரி. இவன் ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டி படை திரட்டி எதிரிகளுடன் போரிட்டான். இவனே "தீரன் சின்னமலை" என்னும் பெயரால் தமிழக வரலாற்றில் புகழ் பெற்றான்.

48.   இருபதாம் நூற்றாண்டுத் தமிழின் வளர்ச்சி:

-       இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தது. நூல்கள் உரைநடையிலும் செய்யுள் வடிவிலும் இயற்றப்படுகின்றன. அந்நிய மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான இலக்கியமும் தமிழில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

-       பூண்டி அரங்கநாத முதலியார் - கச்சிக் கலம்பகம்; பெ. சுந்தரம் பிள்ளை - மனோன்மணீயம்; உ.வே.சாமிநாதையர் - பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள்; வை.மு. கிருஷ்ணமாச்சாரியார் - அரிய உரைகள்; அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் - விநோதரசமஞ்சரி; ஆ. சிங்காரவேலு முதலியார் -

அபிதான சிந்தாமணி; கா. நமச்சிவாய முதலியார் - பயிற்சிப் பாடநூல்கள்;

-       பாண்டித்துரைத் தேவர் - மதுரைத்தமிழ்ச் சங்கம்; ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், வி.கனகசபைப்பிள்ளை; கா.சு. பிள்ளை; ந.மு. வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர் போன்ற தமிழறிஞர்கள்.

-       பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி போன்ற கவிஞர்கள்.

-       ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பொ.வே. சோமசுந்தரனார் - உரைகள்.

-       நாவல்கள், நாடகம், இசை, நாட்டியத் துறைகளில் வளர்ச்சி.


Dummy

Download as Pdf